மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 18 செப் 2020

கர்நாடக இடைத்தேர்தல்: வெற்றிமுகத்தில் காங்கிரஸ்-மஜத!

கர்நாடக இடைத்தேர்தல்: வெற்றிமுகத்தில் காங்கிரஸ்-மஜத!

கர்நாடக இடைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் ராம்நகர், ஜமகண்டி தொகுதிகளில் காங்கிரஸ்-மஜத கூட்டணி வெற்றிபெற்றுள்ளது. சிவமொக்கா மக்களவைத் தொகுதியில் மட்டும் பாஜக முன்னிலையில் இருந்துவருகிறது.

கர்நாடக மாநிலத்தின் ஷிவமோகா, பெல்லாரி, மாண்டியா ஆகிய மூன்று மக்களவை தொகுதிகள், ராம்நகரா, ஜமகண்டி சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் கடந்த 3ஆம் தேதி நடைபெற்றது. தேர்தலில் 67 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. காங்கிரஸ் மற்றும் மஜத கூட்டணி அமைத்து போட்டியிட, பாஜக தனித்து போட்டியிட்டது. ஐந்து தொகுதிகளிலும் சுயேச்சை வேட்பாளர்களுடன் சேர்த்து மொத்தம் 31 பேர் போட்டியிட்டனர். இந்த நிலையில் பதிவான வாக்குகள் இன்று(நவம்பர் 6) எண்ணப்பட்டு வருகின்றன.

வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே ஷிவமோகா தொகுதியை தவிர்த்து மற்ற 4 தொகுதிகளிலும் காங்கிரஸ்- மஜத கூட்டணியே முன்னிலையில் இருந்துவந்தது. மதியம் 12.30 மணி நிலவரப்படி ராம்நகரா சட்டப்பேரவை தொகுதியில் முதல்வர் குமாரசாமியின் மனைவி அனிதா குமாரசாமி 109137 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிவாகை சூடியுள்ளார். அங்கு பாஜக வேட்பாளர் எல் சந்திரசேகர் வாக்குப்பதிவிற்கு 48 மணி நேரத்திற்கு முன்பு போட்டியிலிருந்து விலகி காங்கிரஸில் இணைந்துவிட்டார். ஜமகண்டி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஆனந்த் நியமகௌடா, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ஸ்ரீகாந்த் குல்கர்னியை 39480 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றிபெற்றார்.

இதேபோல், பாஜகவின் கோட்டை என கூறப்படும் பெல்லாரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் முன்னிலையில் இருந்துவருகிறது. காங்கிரஸ் வேட்பாளர் வி.எஸ்.உக்ரப்பா தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜகவின் ஜெ. சாந்தாவைவிட 1.40லட்சம் வாக்குகள் கூடுதல் பெற்று முன்னிலையில் இருந்துவருகிறார். மாண்டியா தொகுதியில் மதச்சார்பற்ற ஜனதா தளம் முன்னிலையில் இருந்துவருகிறது. சிவமொக்கா தொகுதியில் மட்டும் பாஜக வேட்பாளரான எடியூரப்பா மகன் ராகவேந்திரா முன்னிலையில் இருந்துவருகிறார்.

இந்த நிலையில் காங்கிரஸ் மஜத கட்சிகளின் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.

இடைத் தேர்தல் முடிவு குறித்து முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப,சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், “கர்நாடக இடைத் தேர்தல்களில் 4-1 என்ற வெற்றி விராட் கோலி தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி பெறும் டெஸ்ட் தொடர் வெற்றிகளைப் போல் உள்ளது. இதில் கற்க வேண்டிய பாடம்: கூட்டணி பலன் தந்துள்ளது” என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

செவ்வாய், 6 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon