மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 5 ஜூலை 2020

ஐயப்ப பக்தர் மரணம்: பொய் செய்தியைப் பரப்பும் பாஜக!

ஐயப்ப பக்தர் மரணம்: பொய் செய்தியைப் பரப்பும் பாஜக!

சபரிமலை கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்க மறுப்பு தெரிவித்து போராடியபோது, சிவதாசன் என்பவர் போலீசாரின் நடவடிக்கையால் உயிரிழந்தார் என பாஜக பொய்யான செய்தியைப் பரப்பிவருகிறது என பத்தினம்திட்டா எஸ்பி தெரிவித்துள்ளார்.

சபரிமலை சென்ற ஐயப்ப பக்தர் சிவதாசன் என்பவர் மர்மமாக உயிரிழந்த நிலையில் அவரின் உயிரிழப்புக்குக் காவல் துறையினரே காரணம் என கேரள பாஜகவினர் முழு அடைப்புப் போராட்டம் நடத்தினர்.அதுமட்டுமில்லாமல், பலரும் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்து வந்தனர்.

கேரள மாநில பாஜக பொதுச் செயலாளர் கே.சுரேந்திரன், தன்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிட்டியிருந்தார். அதில், “சிவதாசன் என்பவரின் மரணத்துக்குக் கேரள முதல்வர் பினராயி விஜயன்தான் பொறுப்பு. கடவுள் ஐயப்பனை பாதுகாப்பதற்காக சிவதாசன் தன்னுடைய உயிரைக் கொடுத்து தியாகியாக மாறியிருக்கிறார். இதுபோன்று பல ஐயப்ப பக்தர்களைக் கொல்ல நினைக்கிறார் முதல்வர் பினராயி விஜயன். நவம்பர் 5ஆம் தேதி மறுபடியும் சபரிமலை கோயில் திறக்கப்படும்போது, போலீஸ் இதுபோன்று பலரை கொல்வார்கள். ஆயிரக்கணக்கான பக்தர்களைக் கொன்றாலும், உங்கள் திட்டம் சரியாக வேலை செய்யாது” எனத் தெரிவித்திருந்தார்.

அதுபோன்று, ஆர்எஸ்எஸ் செயலர் ஜே. நந்தகுமார் ட்விட்டரில், “சபரிமலையில் பக்தர்கள் மீதான போலீஸ் தாக்குதலினால் காணாமல்போன சிவதாசனின் உடல் தற்போதுதான் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஓர் அப்பாவி பக்தரின் மரணத்துக்குக் காரணமாக இருந்த அனைத்து போலீஸ் அதிகாரிகளும் தண்டிக்கப்பட வேண்டும். இதற்கு பொறுப்பு ஏற்றுக்கொண்டு முதல்வர் பினராயி விஜயன் பதவி விலக வேண்டும்” என ட்வீட் செய்திருந்தார்.

ஆம் ஆத்மி எம்.எல்.ஏ கபில் மிஸ்ராவும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், போலீஸ் தாக்குதலில் இருந்து தன்னை பாதுகாப்பதற்காக சிவதாசன் பள்ளத்தில் விழுந்திருக்கிறார் என பதிவிட்டிருந்தார். இந்தப் பதிவுடன் இதுசம்பந்தமான வீடியோ ஒன்றும் இணைத்திருந்தார். மிஸ்ராவின் ட்வீட் 6,500 முறைக்கு மேலாக மறு ட்வீட் செய்யப்பட்டது. 7,900 பேர் லைக் செய்திருந்தனர்.

உண்மை என்ன

பத்தனம்திட்டா மாவட்டத்தின் எஸ்பி. டி.நாராயணன், சிவதாசனின் மரணத்தையும், போலீசாரின் நடவடிக்கையும் தொடர்புபடுத்தி கூறுவதை மறுத்து வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார்.

அதில், சபரிமலை யாத்திரைக்குப் பின்னர் காணாமல் போன சிவதாசன், லாஹாவுக்கு அருகில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார். இவர் இறந்ததையும், போலீசாரின் நடவடிக்கையும் இணைத்துப் பல தவறான செய்திகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அக்டோபர் 17ஆம் தேதி போலீசார் லத்தி சார்ஜ் நடத்தியது. ஆனால், சிவதாசன் அக்டோபர் 18ஆம் தேதி காலையில்தான் சபரிமலைக்கு வந்தார். அக்டோபர் 19ஆம் தேதி காலையில் தன்னுடைய மனைவிக்கு செல்போனில் தொடர்பு கொண்டு, தான் சபரிமலை தரிசனம் முடித்துவிட்டு, வீடு திரும்புவதாக தெரிவித்துள்ளார் சிவதாசன். ஆனால், அவர் வீடு திரும்பவில்லை. அதனால், அவரது உறவினர்கள் அவரை தேட ஆரம்பித்தனர். இதுகுறித்து அக்டோபர் 25ஆம் தேதி அவரது மகன் பந்தளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரை ஏற்றுக் கொண்ட போலீசார் அவரை தேடும் வேலையில் இறங்கினர். இதுதான் உண்மை. எனவே, இந்தச் சம்பவம் தொடர்பாகப் பொய்யான செய்தி பரப்புகின்ற செய்தி ஊடகம் அல்லது தனிநபர் என யாராக இருந்தாலும் போலீஸ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

செவ்வாய், 6 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon