மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 13 ஆக 2020

சர்காரை விமர்சிக்கும் தமிழிசை

சர்காரை விமர்சிக்கும் தமிழிசை

கள்ளக் கதையை எடுப்பவர்கள்தான் இன்று கள்ள ஓட்டைப்பற்றி படம் எடுக்கிறார்கள் என்று தமிழிசை சௌந்தர்ராஜன் சர்காரை படத்தை விமர்சித்துள்ளார்.

நடிகர் விஜய் நடித்திருந்த மெர்சல் படத்தில் ஜி.எஸ்.டி. போன்ற மத்திய அரசின் திட்டங்கள் குறித்த விமர்சனங்கள் இடம்பெற்றிருந்ததையடுத்து எச்.ராஜா, தமிழிசை சௌந்தரராஜன் ஆகிய பாஜக தலைவர்கள் அப்படத்தையும் நடிகர் விஜயையும் விமர்சித்தனர். மெர்சல் படமும் மிகப்பெரிய வெற்றியை அடைந்து சர்வதேச விருதுகளையும் பெற்றது. இந்நிலையில், விஜயின் சர்கார் படம் நாளை வெளியாகவுள்ள நிலையில், அப்படத்தை பாஜக தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார்.

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் இன்று (நவம்பர் 5) நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர், “நேர்மையான சர்காரை நாங்கள் நடத்திகொண்டிருக்கிறோம். பலர் பல கனவுகளோடு உள்ளனர். திரைப்படத்தில்தான் அவர்கள் முதல்வர் ஆக முடியும். நிஜத்தில் மோடி சுட்டிக்காட்டுபவர்களே முதல்வர் ஆக முடியும். தமிழகத்தில் உள்ள பாஜக தொண்டர்கள் தாமரை படையாக மாறி அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவோம்” என்று தெரிவித்தார்.

கள்ளக்கதை மூலம் படம் எடுப்பவர்கள் கள்ள ஓட்டை பற்றி பேசுகிறார்கள் என்று விமர்சித்த தமிழிசை, “தமிழகத்தில் திராவிட கட்சிகளுக்கு சவாலாக பாஜக உள்ளது. தமிழகத்தில் காவி கொடி பறப்பதை வருங்காலம் பார்க்கும். தமிழகத்தில் காலூன்ற முடியாது என்ற கதை காங்கிரஸ் , கம்யூனிஸ்ட்களுக்கு வேண்டுமானாலும் பொருந்தும்.

ராஜபக்சே பிரதமர் ஆனதற்கு பின்னால் மோடி இருப்பதாக தவறாக குற்றம் சாட்டுகின்றனர். இலங்கை தமிழர்களுக்கு ஒரு சகோதரராக மோடி நல்லதை செய்துகொண்டு இருக்கிறார். எத்தனை பேர் வந்தாலும் மோடியை அசைக்க முடியாது” என்று கூறினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “எதிர்க்கட்சி தலைவர்கள் மக்களை காப்பாற்ற கூட்டணி அமைக்கவில்லை, தம்மக்களை காப்பாற்றக் கூட்டணி அமைத்துள்ளனர். சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம் எப்போது சிறை செல்வார் என்று தெரியாது. சிதம்பரமும் சிறை செல்லலாம். ஊழலில் சிக்கியுள்ளவர்கள் மோடியை விமர்சிக்கின்றனர். கார்ப்பரேட்டுக்கான ஆட்சி அல்ல, காமன் மேனுக்கான ஆட்சியை மோடி நடத்திகொண்டு இருக்கிறார்.

திரைப்படத்திலேயே நேர்மையான சர்காரை நிர்வகிக்க முடியாதவர்கள், மக்களுக்கான சர்காரை நிர்வகிக்கப்போவதாக கூறுகிறார்கள்” என்று விமர்சித்துள்ளார்.

திங்கள், 5 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon