மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 15 ஆக 2020

புதிய அரசை ஏற்க முடியாது: சபாநாயகர் திட்டவட்டம்!

புதிய அரசை ஏற்க முடியாது: சபாநாயகர் திட்டவட்டம்!

பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை, புதிய அரசாங்கத்தை அங்கீகரிக்க முடியாது என இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரியா அறிவித்துள்ளார்.

இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கேவை நீக்கிவிட்டு, ராஜபக்சேவை பிரதமராக நியமித்தார் அதிபர் சிறிசேனா. அப்போது முதல் இலங்கையில் அரசியல் குழப்பம் தீவிரமாக இருக்கிறது. நாடாளுமன்றத்தை தற்காலிகமாக முடக்குவதாக அறிவித்த அதிபர் சிறிசேனா நவம்பர் 16ஆம் தேதி மீண்டும் நாடாளுமன்றம் கூடும் என்று தெரிவித்திருந்தார்.

ஆனால், நாடாளுமன்றத்தை நவம்பர் 7ஆம் தேதியே கூட்டவுள்ளதாக சபாநாயகர் கரு ஜெயசூர்யா அறிவித்தார். எனினும் இதை அதிபரின் அலுவலகம் நிராகரித்துவிட்டது. நாடாளுமன்றத்தை கூட்டுவதாக அதிபர் அரசிதழில் வெளியிட்டால்தான் அது செல்லும், மாறாக சபாநாயகரே தேதியை மாற்ற முடியாது” என்று அரசுப் பேச்சாளர் கெஹலிய ரம்புகவெல்ல செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இதற்கிடையே பெரும்பான்மையை நிரூபிக்க ராஜபக்சே தரப்பு குதிரை பேரத்தில் ஈடுபட்டுவருகிறது. தற்போதைய நிலையில், இலங்கை நாடாளுமன்றத்தில் உள்ள 225 எம்.பி.க்களில் ரனில் மற்றும் ராஜபக்சேவுக்கு தலா 102 எம்.பி.க்களின் ஆதரவு உள்ளது. மீதமுள்ள 21 எம்.பி.க்கள் ராஜபக்சேவுக்கு எதிராக உள்ளதாகவும், அவர்களை தன் பக்கம் இழுக்க ராஜபக்சே தரப்பு பல நூறு கோடி தருவதாக பேரம் பேசி வருகிறது. தற்போதைய நிலையில், வாக்குக்கு தலா ஒரு எம்.பி.க்கு இலங்கை மதிப்பில் ரூ. 300 கோடிவரை பேரம் பேசப்படுவதாகவும் தகவல் வெளியாகின.

அதேபோல், தமிழ் எம்.பி.களின் வாக்குகளை பெறுவதற்காக சிறையில் உள்ள தமிழர்களை விடுவிக்க அரசு தயாராகி வருவதாக ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே ட்விட்டரில் கூறியிருந்தார்.

இந்நிலையில், இலங்கை நாடாளுமன்றம் நவம்பர் 16ஆம் தேதிக்கு இரண்டு நாட்கள் முன்னதாக 14ஆம் தேதியே கூடும் என அதிபர் சிறிசேனா அறிவித்துள்ளார். அதிபர் மாளிகை நேற்று மாலை வெளியிட்டுள்ள அரசிதழில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிபரின் இந்த முடிவு மிகவும் காலதாமதமானது என்று விமர்சித்துள்ள ஐக்கிய தேசிய கட்சி, நாடாளுமன்றத்தை உடனே கூட்ட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

அமெரிக்கா ஜப்பான் உதவித் தொகை நிறுத்தம்

இலங்கையின் அரசியல் குழப்பம் காரணமாக பில்லியன் டாலர் மதிப்பிலான வளர்ச்சி நிதியை அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் நிறுத்தி வைத்துள்ளதாக ரனில் தெரிவித்துள்ளார். ராய்ட்டர்ஸ் ஊடகத்திற்கு நேற்று (நவம்பர் 4) பேட்டியளித்த அவர், இலங்கையில் நெடுஞ்சாலை மற்றும் நில நிர்வாகத்தை மேம்படுத்த வழங்குவதாக இருந்த 500 மில்லியன் டாலரை அமெரிக்கா நிறுத்தி வைத்துள்ளது. ரயில்வே திட்டத்திற்கான 1.4 பில்லியன் டாலர் மதிப்பிலான நிதியை ஜப்பானும் நிறுத்தி வைத்துள்ளது” என்று தெரிவித்தார்.

அங்கீகரிக்க முடியாது

நாடாளுமன்றம் 14ஆம் தேதிதான் கூட்டப்படும் என்று அதிபர் அறிவித்துள்ளதற்கு சபாநாயகர் கரு ஜெயசூர்யா இன்று (நவம்பர் 5) கடும் கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தை 7ஆம் தேதி கூட்டுவேன் என்று தன்னிடம் வாக்களித்துவிட்டு திடீரென வேறு தேதியில் கூட்டுவது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார். ராஜபக்சே நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை அவரை பிரதமராக அங்கீகரிக்க முடியாது என்றும் அவர் தனது கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.

திங்கள், 5 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon