மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 13 ஆக 2020

பிறந்தநாள்: தொண்டர்களுக்கு கமல் அறிவுரை!

பிறந்தநாள்: தொண்டர்களுக்கு கமல் அறிவுரை!

தனது பிறந்தநாளுக்குச் சென்னை வருவதைத் தவிர்த்துவிட்டு அந்தந்த பகுதிகளிலேயே நற்பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று தொண்டர்களுக்கு கமல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசனின் பிறந்தநாள் நவம்பர் 7ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. கமல்ஹாசனின் பிறந்தநாளைச் சிறப்பாகக் கொண்டாட அவரது ரசிகர்கள் திட்டமிட்டிருந்த நிலையில், ரசிகர்கள் அவரவர் பகுதிகளில் நற்பணிகளில் ஈடுபட வேண்டும் என்று கமல் அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று (நவம்பர் 4) வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசியலையும் நற்பணியையும் இணைந்து, மக்கள் நீதி மய்யம் முன்னெடுத்திருக்கும் அரசியல் பயணம், தமிழகம் மட்டுமல்ல; இந்திய அரசியலுக்கே புதிய அறிமுகம். யாரையும் புகழ்பாடாமல் வசைபொழியாமல் அரசியலை அணுகிக்கொண்டிருக்கிறோம்” என்று தெரிவித்துள்ள கமல், அரசியல் கட்சிகளும் அரசியல்வாதிகளும் மக்கள் நலனை தாங்கள் இடும் பிச்சை போலவும், ஊழல் செய்வதை முழுநேரத் தொழிலாகவும் செய்துகொண்டிருக்கின்றன என்றும் விமர்சித்துள்ளார்.

இருண்ட காலத்தில் உள்ள தமிழகத்தை வழி நடத்தக்கூடிய மிகப்பெரிய பொறுப்பு உள்ளதாக அறிக்கையில் குறிப்பிட்டுள்ள அவர், “என் பிறந்தநாளுக்கு வாழ்த்துகளைப் பெற விரும்புவதைவிட, பிறக்கப்போகும் புதிய தமிழகத்திற்கு வாழ்த்துச் சொல்லவே விரும்புகிறேன். எனவே நிர்வாகிகள் வாழ்த்துவதற்காக நேரில் வருவதைத் தவிர்த்துவிட்டு உங்கள் பகுதிகளிலேயே நற்பணிகளைச் செய்ய வேண்டும்” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உறுப்புதானம் செய்வது, நவம்பர் 7ஆம் தேதி முதல் 10ஆம் தேதிவரை ரத்த தான முகாம் நடத்துவது போன்றவற்றில் ஈடுபட வேண்டும் என்றும் முடிந்தவரை கிராமப்புறங்களில் நடத்திட வேண்டும் என்றும் கமல் அறிவுறுத்தியுள்ளார்.

திங்கள், 5 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon