மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 24 அக் 2020

சிறப்புக் கட்டுரை: பாலுறவில் சம்மதம் என்னும் சிக்கல்!

சிறப்புக் கட்டுரை: பாலுறவில் சம்மதம் என்னும் சிக்கல்!

பெருந்தேவி

நாவலிலிருந்து அக்கினிப் பிரவேசம் சிறுகதையை வாசிக்கும்போது, இது நடக்கையில் கங்காவுக்குப் பதினேழு வயது. சட்டபூர்வமான வயதா இல்லையா, மைனரா என்பதல்ல இங்கே பிரச்சினை. சிறுகதை அவளைக் கல்லூரி மாணவி என்றாலும், அவளைச் ‘சிறுமி’ என்று பல இடங்களில் சொல்கிறது. இந்தக் குறிப்பு கவனிக்கத்தக்கது. வறிய குடும்பத்தைச் சேர்ந்தவள். கொட்டும் மழையில் கார் வந்து நின்றவுடன் ஏறுகிறாள். பெரிய கார், சீட், எரியும் ஸ்விட்ச், இழுப்பு மேசை எல்லாமே அவளுக்குப் புதிதாக இருக்கிறது. கார் கண்ணாடி வழியாகத் தெருவைப் பார்க்கும்போது மழை நீரில் ஒளிரும் பிரகாசமான கடைகள் அவள் கண்களைப் பறிக்கின்றன. காரில் பிரயாணம் அவளுக்குக் குதூகலம் தருகிறது என்று சொல்கிறது கதை.

ஆனால், அவள் வீட்டுத் திசையில் இல்லாமல் வேறொரு திசையில் செல்லும்போது “சின்னக் குழந்தை மாதிரி அடிக்கடி வீட்டுக்குப் போக வேண்டும் என்று அவனை நச்சரிக்கவும் அவளுக்குப் பயமாக இருக்கிறது.” அவளுக்கு அழுகை வருகிறது. ஆனால், இறக்கிவிட்டால் வீட்டுக்கு எப்படிப் போவது என்று அவளுக்கு வழி தெரியவில்லை. “…இறக்கி விட்டுவிட்டுப் போயிட்டா? எப்படி வீட்டுக்குப் போறது? எனக்கு வழியே தெரியாதே. நாளைக்கு ஜுவாலஜி ரெக்கார்ட் வேற சப்மிட் பண்ணணுமே. வேலை நிறைய இருக்கு.” வீட்டில் அம்மா தேடுவாள் என்கிறாள். அவன் காரை நிறுத்தும்போதுகூட எதற்கு என்று அவளுக்குக் காரணம் புரியவில்லை. காரை நிறுத்திவிட்டு, அவன் காட்பரீஸ் சாக்லேட்டை எடுத்துத் தருகிறான். அவளது குழந்தைத் தன்மையை, அது அவனுக்குத் தெரிந்திருப்பதை இந்த விவரணைகளைவிட வேறெப்படி வலியுறுத்திவிட முடியும்?

ஜெயமோகன் இந்தக் கதைக் கட்டத்தைச் சுட்டி எழுதுகையில், “ஒரு கயவனால் எளிதில் பாலுறவுக்கு ஆட்படுத்தப்பட்டாள்; அவளை அவன் வலுக்கட்டாயமாகக் கவர்ந்து செல்லவில்லை. சொல்லப்போனால் பேசி ஏமாற்றி அழைக்கவும் தெரியவில்லை” என எழுதுகிறார். கூடவே மறுக்கத் தெரியாததால் அவனுக்கு வயப்படுகிறாள் என்றும் குறிப்பிடுகிறார். சுரேஷ்குமார இந்திரஜித்தோ இவ்வாறு எழுதுகிறார்: “…சிறுமியைக் காரில் வருபவன் அழைத்துச் செல்கிறான். ஆனால் அவன், அவளைப் பலவந்தப்படுத்தவில்லை. அவள் இணங்கவில்லை; ஆனால் இணங்குகிறாள். விரும்பவில்லை; ஆனால் போராடவில்லை. வசப்பட்டுவிட்டாள் என்று கூறலாமா? அந்தத் தருணத்தை, அவளுடைய மனநிலையை, புதிராகவே கதாசிரியர் வைத்திருக்கிறார். அவள் போராட, அவன் பலவந்தப்படுத்திக் கற்பழிப்பதாகக் கதையை அமைத்திருக்கலாம். ஆனால் கதை சரிந்திருக்கும்.” (காலச்சுவடு கிளாஸிக் எடிஷன் முன்னுரை).

இன்று பாலியல் உறவில் ‘சம்மதம்’ (consent) ஒரு முக்கிய விவாதப் பொருளாக ஆகியிருக்கும் நேரத்தில், இவற்றையும் அணுகிப் பேச நினைக்கிறேன்.

சம்மதம் என்பது எது?

நம் சமூகத்தில், “பலவந்தப்படுத்திக் கற்பழிப்பு” என்றால்தான் சம்மதமின்மை அல்லது இணக்கமின்மை என்று பலரும் புரிந்துகொண்டிருக்கிறோம். தமிழ்த் திரைப்படங்களின் பாதிப்பு இதில் இருக்கலாம். மேலும், இணக்கமின்மையைத் தெரிவிக்க ஒரு பெண் துடிதுடித்துப் போராட வேண்டும் என்றெல்லாம் இல்லை. தலையாட்டி மறுத்தாலேகூட அது சம்மதமின்மைதான்.

கதைச் சூழலில், அவனைக் காரை நிறுத்தச் சொல்லக்கூட அவளுக்கு அச்சமாக இருக்கிறது. வீட்டுக்குப் போக வழி தெரியாதே என்ற அச்சம். பின்னால், தன் அம்மாவிடம் “எங்கேயோ காடு மாதிரி ஒரு இடம்… மனுஷாளே இல்லை…ஒரே இருட்டு” எனத் தன் அப்போதைய நிலைமையைச் சொல்கிறாள். இளைஞனிடம் கேள்வி கேட்கவே அச்சப்படுபவள் என்ன போராட முடியும்?

அவன் காரை நிறுத்திய பின்னர், அவனை அவள் அளப்பதுபோல பார்க்கிறாள்தான். ஆனால் அவன் அழகு “கொடிய சர்ப்பத்தை” அவளுக்கு நினைவூட்டுகிறது. (நாவலில் அவனை அவள் தேடும் காலகட்டத்திலும் இந்த உவமானம் மீண்டும் வருகிறது.) அதேபோல, அவன் பின் சீட்டில் வந்தமர்ந்து சூயிங்கத்தை அவள் உதட்டில் பொருத்தி, அவன் வைத்து நெருடும்போது, அவள் உடலில் சுகம் காந்துகிறதுதான். ஆனால், அவள் பின்னால் விலகுகிறாள்; அவன் கையிலிருந்ததை, தன் கையில் வாங்கிக்கொள்கிறாள் அவள். அதேபோல, “டு யு லைக் மீ?” என்று அவன் கேட்டதற்கு, ஒடுங்கிக்கொண்டே “ம்” என்கிறாள்.

ஆனால், பாலியல் சுகத்தை ஒருவர் உணர்வதால், அதை உடனடியாக ஒருவர் அனுபவிக்க விரும்புகிறார் என்றோ அல்லது, முக்கியமாக, உடனே இணங்குகிறார் என்றோ எப்படி கருத முடியும்? பாலியல் சுகத்தை உணர்தல் வேறு; அதற்கான விருப்பம் வேறு; இணக்கம் வேறு. இந்த மூன்றையுமோ, அல்லது மூன்றில் ஏதோ இரண்டையுமோ, conflate செய்வதுதான், பாலியல் உறவில் ஒருவரது ‘சம்மதம்’ பற்றிய நமது புரிதலில் இருக்கும் பெரிய பிரச்சினை.

மிக முக்கியமாக. ஜெயமோகனும் சுரேஷ்குமாரும் தவறவிடும் வரிகள் இவை:

“ ‘மே ஐ கிஸ் யூ?’

அவளுக்கு என்ன பதில் சொல்வது என்று புரியவில்லை. நாக்கு புரள மறுக்கிறது. அந்தக் குளிரிலும் முகமெல்லாம் வியர்த்து, தேகம் பதறுகிறது.

திடீரென்று அவள் காதோரத்திலும் கன்னங்களிலும் உதடுகளிலும் தீயால் சுட்டுவிட்டதைப்போல் அவனது கரங்களில் கிடந்த அவள் துடிதுடித்து, ‘ப்ளீஸ்... ப்ளீஸ்...’ என்று கதறக் கதற, அவன் அவளை வெறிகொண்டு தழுவித் தழுவி...

அவள் கதறல் மெலிந்து தேய்ந்து அடங்கிப்போகிறது” (அக்கினிப் பிரவேசம்)

முத்தம் கொடுக்கலாமா என்ற கேள்விக்கு அவளுக்கு மறுக்கத் தெரியவில்லை என்றே வைத்துக்கொள்ளலாம். ஆனால், அதன்பின் தொடர்ந்த அவன் செய்கையை பலவந்தமில்லை என்று கொள்ள சிறுகதை இடம்தரவில்லை. அவன் அருகே வர வர அவள் ஒடுங்கிப்போகிறாள். அவளுக்கு அவனோடு நெருங்கி அமர்வது பிடித்திருந்தாலுமேகூட, அவன் வலிந்து அவளுக்கு முத்தம் தந்துவிட முடியாது. அவள் முத்தத்துக்குத் தயாராக இருந்திருந்தாலுமேகூட, அதைக் காரணம் காட்டி, அடுத்தபடியாக, அவளது தெளிவான சம்மதமில்லாமல் பாலுறவை வற்புறுத்த முடியாது. ‘சம்மதம்’ / ‘சம்மதமின்மை’ என்பது பாலியல் அணுக்கத்தில் பல படிகளில் விரவியிருப்பது. (ஆனால் #MeToo தற்கதைகளை வாசிக்கும்போது, இன்றும்கூட ஒரு பெண் காரில் ஏறினாலே பாலியல் உறவுக்கு இணங்குகிறாள் என்று புரிந்துகொள்ளும் அவலச் சூழலில்தான் நாம் இருக்கிறோம் எனப் புரிகிறது. இதில் ஒவ்வொரு படிக்கும் சம்மதம் என்பதையெல்லாம் பொதுச் சமூகத்துக்குத் தொடர்புறுத்துவதைப் பற்றி நினைத்தால் மலைப்பாக இருக்கிறது.)

எல்லாவற்றையும்விட, ஜெயகாந்தன் “கதற கதற” என்ற கிளிஷேவை இங்கே காரணமின்றிப் பயன்படுத்தியிருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. “கதற கதற”வுக்குப் பிறகு, இந்தக் கட்டத்தில், என்ன வார்த்தை வரும் என்று வெகுஜன மொழிக்குப் பரிச்சயமானவர்களுக்கு நன்றாகவே தெரியும். ‘கதறல்’ என்று தெளிவாகச் சுட்டப்பட்டிருக்கும் பெண்ணின் எதிர்வினையைக்கூட அவளது இணக்கமின்மையாக, சம்மதமின்மையாக, நம்மால் ஏன் எடுத்துக்கொள்ள முடியவில்லை? சக எழுத்தாளர்களின் வாசிப்பில் குறை காண்பதல்ல என் நோக்கம். நம் அறிவுச் சமூகத்தில்கூட பாலியல் உறவில் பெண்ணின் ’சம்மதம்’ என்கிற இன்றியமையாத அம்சம் இன்னும் எப்படி சரிவர அணுகப்படாமல், உள்வாங்கப்படாமல் இருக்கிறது என்பதற்கான ஒரு சின்ன எடுத்துக்காட்டு இது.

அவன் சூயிங்கத்தை அவள் உதட்டில் பொருத்துகிறான். அவன் தரப்பிலிருந்து பார்க்கும்போது எளிமையான பாலியல் விருப்பச் செய்கை அது. “தான் ஒருவனுடன் இருந்ததை அவள் அன்னையிடம் சொல்லும்போதுகூட அதை மென்றுகொண்டுதான் இருக்கிறாள். அது ஒரு அசைபோடல், பெண்ணுடலின் கொண்டாட்டம், ஆனால், அவளுக்கே தெரியவில்லை” என்று எழுதுகிறார் ஜெயமோகன். ஆனால், சிறுகதையில் வீட்டுக்கு வந்த பின், அவள் அம்மா திட்டி முடித்துவிட்டு, அவள் தலையில் தண்ணீரை ஊற்றி, ‘சுத்தப்படுத்திய’ பின்னும்கூட அவள் சூயிங்கத்தை மென்றுகொண்டிருக்கிறாள். அதாவது, அவள் அம்மாவிடம் தான் வல்லுறவுக்கு உள்ளானதைத் தெரிவிக்கும்போது மட்டுமல்ல, அதற்குப் பின் ‘பூனைக்குட்டி மாதிரி’ அடிவாங்கும்போதும், “ஐயோ, அம்மா, என்னைப் பார்க்காதேயேன்” என முதுகுப்புறத்தைத் திருப்பிக்கொண்டு அழும்போதும்கூட சூயிங்கத்தை மெல்கிறாள். அவள்மேல் அவள் அம்மா தண்ணீரை ஊற்றிக் கழுவித் தலையைத் துடைக்கும்போதும்கூடத்தான். இத்தனை நடக்கின்றன, நடந்தாலும் அவளுக்கிருந்த அதிர்ச்சியில் அவளுக்குச் சூயிங்கத்தைத் துப்பக்கூடத் தோன்றவில்லை என ஏன் பொருள்கொள்ள முடியாது? Sometimes a chewing gum is just a chewing gum.

மேலும், இப்படிப் பொருள்கொள்ள நாவலிலேயே சமிக்ஞைகள் இருக்கின்றன. அவளுக்கு காரில் நடந்த நிகழ்வு பாலியல் கொண்டாட்டமில்லை என்று காட்டும் சமிக்ஞைகள். அவற்றையும் சுருக்கமாகப் பார்ப்போம். நாவலின் கதையோட்டத்தில், பின் பகுதியில், அவன் மேல் அவளுக்கு வருகிற காதலை மட்டுமே கருத்தில்கொண்டு, இந்த சமிக்ஞைகளை நாம் கவனிக்கத் தவறிவிடக் கூடாது என்பதே நான் கோருவது.

நாவலில் பல இடங்களில் கங்காவின் நினைவுக்கூற்றாக, அல்லது அவள் பேச்சில், பிரபுவால் தான் கெடுக்கப்பட்டவள், ரேப் செய்யப்பட்டவள், தன்னைப் பலி தந்தவள் என்றே சொல்லப்படுகிறது. அவள் மாமா கூறியதை முன்னிட்டு அவனைத் தேடத் தொடங்கும்போது நினைக்கிறாள்: “மொத்தத்திலே ஆம்பிளைகளை நெனைக்க நெனைக்க ஒரு அருவருப்பான பயம்தான் இருக்கு எனக்கு. அருவருப்பான பயம்னா-கரப்பான் பூச்சியைப் பார்த்தா வரதே, அந்த மாதிரி, கரப்பான் பூச்சி நம்மைக் கடிச்சுடும்னா உதறிட்டு ஓடி உடம்பு சிலிர்த்துப் போறோம். அந்த மாதிரி ஒரு கரப்பான் பூச்சி பயம்… ஆனா நான் இப்ப ஒரு ‘கரப்பான் பூச்சி’யைத் தேடறேன்” (86). பிரபுவோடு தனக்கு நிகழ்ந்த அந்த உறவைப் ‘பாலியல் கொண்டாட்டமாக’ அவள் உடல் உணர்ந்திருந்தால், அவன் தொடுகையும் சரி, அவனும் சரி கரப்பான் பூச்சி என உருவகத்தின் வாயிலாகவா விவரிக்கப்பட்டிருக்கும்?

‘கரப்பான் பூச்சி’ ஊர்கிற உணர்வு வெறும் மனம் சார்ந்தது மட்டுமல்ல; அவள் உடலின் தன்னிச்சையான எதிர்வினையும் இதில் சுட்டப்படுகிறது. அந்த எதிர்வினையில் அருவருப்பே பிரதானமாக இருக்கிறது. இன்பத்தின் ‘அசைபோடலுக்கான’ எந்த சமிக்ஞையும் அவள் வார்த்தைகளில் இல்லை. மீண்டும் பிரபுவைச் சந்தித்து அவனோடு பேசி, பழகி, ஒரு நண்பனாக, கனவானாக அவனை உணர்ந்து அவனைக் காதலிக்கும்வரை அவள் உடல் பாலின்பத்துக்காக அவனைத் தேடுவதில்லை. இதைத்தான் நாவலின் பிரதி நமக்குத் தெரிவிக்கிறது. ஆகவே, கதையின் பிற்பகுதியில் நடக்கிற நிகழ்வுகளை வைத்துக்கொண்டு, அவனைப் பார்த்ததிலிருந்தே “தனக்குரிய ஆண்” என்று அவள் பெண்ணுடல் “ஏற்று,” அதனால் “இயல்பான விருப்பத்தால்” அவனைத் தேடியதாக எல்லாம் பொருள்கொள்வது, பிரதியின் அடிப்படையில் அன்றி மனம்போன போக்கில் செய்யும் வாசிப்பாகவே உள்ளது (ஜெயமோகன் கட்டுரை).

உண்மையில், பிரபுவின் தரப்பில்தான் காரில் நடந்தது வல்லுறவா, இல்லையா என்ற குழப்பம் இருப்பதைப் போலக் கதையில் காட்டப்படுகிறது. ஆனால் அதையும் கதை களையவே பார்க்கிறது. ஒரு காட்சியில், அவன் வல்லுறவைச் செய்பவர்கள் பலரும் செய்வதைப் போல, அவள் சம்மதத்தோடுதான் அது நடந்தது என்று சமாளிக்கப் பார்க்கிறான்: “அன்னிக்குக் காரிலே நடந்தது உன்னோட சம்மதத்தோடதான். அடுத்த நிமிஷமே அது உனக்குப் பிடிக்கலேன்னு எனக்குத் தெரியும். ஆனா அதுக்கு முன்னே, அதுக்கு முதல் நிமிஷம் நீ அதுக்கு சம்மதிச்சேங்கறது பொய் ஆகக் கூடாது. நீ சம்மதிச்சுட்டதுக்கு உன்னுடைய அறியாமை காரணமா இருந்திருக்கலாம். நான் அப்பவே அதைப் புரிஞ்சிக்கிட்டேன். ஆனா அதுக்காக அதை ஒரு ‘ரேப்’னு நினைக்காதே” (223).

ஆனால், இதை அவன் கூறுகிற கதைத் தருணத்தைக் கூர்ந்து பார்க்க வேண்டும். தான் ‘ரேப்’ பண்ணப்படுவோமோ, தன் இஷ்டத்துக்கு விரோதமாக யாராவது ஏதாவது செய்வார்களோ, என்று அச்சப்படுவதை அவனிடம் அவள் பகிர்ந்துகொள்ளும்போது, அவளது அந்த அச்சத்தைப் போக்க, அந்த உரையாடலில் அவன் கூறுவது இது. அதே நேரத்தில், தான் “ரேப்” எல்லாம் செய்யக்கூடியவன் அல்ல என்று தன்னுடைய கனவான் பிம்பத்தைக் காப்பாற்றிக்கொள்ளவும் இந்த உரையாடல் தருணத்தை அவன் பயன்படுத்தியும் கொள்கிறான் (221-222). ஆனால், இந்த உரையாடலின்போதே கூட பிரபு இப்படிச் சொல்கிறான்: “நீ என்ன அப்போ மாதிரி சின்னக் குழந்தையா? …எவன் வந்து உன்னை என்ன பண்ணிட முடியும்? அதுவும் உன் இஷ்டமில்லாம…” (219).

இது அல்லாத வேறொரு கட்டத்திலும் பிரபுவின் வார்த்தைகளிலேயே, அது வல்லுறவு எனச் சுட்டப்படுகிறது: “என் லைஃப்ல நான் கெடுத்த ஒரே பெண் நீதான். மத்தவங்க எல்லாம் ஏற்கெனவே கெட்டுப்போனவங்க” என்று பிரபு அவளிடம் சொல்வது (136).

தனித்த நிகழ்வு அல்ல

தான் “ரேப்” பண்ணப்படுவோமோ என்ற பயத்தில், பாலியல் வன்முறை ஞாபகத்தின் ஊடாக, அந்த ஞாபகத்தால் அவள் மனதில் தோன்றுகிற சாத்தியங்களின் அச்சத்தின் ஊடாக, கதையாடல் கங்காவின் தன்னிலையை வடிவமைக்கிறது. ஆனால், இங்கே முக்கியம்: இந்தத் தன்னிலையை வடிவமைப்பதில், அவளது இந்த ஞாபகம், சாத்தியமாகத் தோன்றவைக்கும் எண்ணம், இவற்றைத் தாண்டி, அவள் வாழ்க்கையின் அன்றாடம் பெரிதும் பங்குவகிக்கிறது. பாலியல் வல்லுறவு என்பதை ஒரு தனித்த நிகழ்வு என்று கருதாமல், அன்றாட வாழ்க்கைச் செயற்பாடுகளோடு ஒரு தொடர்ச்சியில் வைத்துப் பார்க்க வேண்டும் என்று இந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் நான் எழுதியது இதை வலியுறுத்தத்தான்.

ஏனெனில், தனித்த ஒற்றை நிகழ்வாக “ரேப்” என்பது கருதப்படும்போது, பெண்ணுக்கு நேரக்கூடிய ஒரு விதி போல, ஒரு முடிவு போல அது மாறிவிடுகிறது. அவள் வாழ்க்கையே அந்த ஒரு வன்முறையில்தான் மையம் கொண்டிருப்பதைப் போல. இன்று #MeToo பாலியல் வன்முறை, துன்புறுத்தல் பற்றிய பலரது தற்கதைகளிலும்கூட இது போன்ற ஒரு மையப்படுத்தல் நடப்பதைப் பார்க்கிறோம். இருபது, முப்பது வருடங்களுக்கு முன் நடந்த நிகழ்வின் கொடும் நினைவில் வருந்தி அல்லாடுபவர்களைக் காண்கிறோம். பாலியல் வல்லுறவைப் பொருண்மையானதொரு செக்சிஸ்ட் வன்முறைச் செயலாகப் பார்க்க வேண்டிய அதே நேரத்தில், பெண்ணின் வாழ்க்கைக் கதையாடலை, பாலியல் வன்முறையை மையப்படுத்திப் பேசுவதையும் தவிர்க்க வேண்டிய அவசியம் இருக்கிறது. ஏனெனில் இந்த வன்முறையை மையப்படுத்தி இன்றியமையாத வாழ்க்கைத் தருணமாக ஏற்கும்போது, பெண்ணின் ஊறுபடத்தக்க நிலையையும் (vulnerability) அப்படியே அதனளவில் சாராம்சமாக ஏற்றுக்கொண்டு விடுகிறோம்தானே!

(வளரும்…)

*

உதவிய கட்டுரைகள் / நூல்கள் / இணையதளங்கள்

சுரேஷ்குமார இந்திரஜித். “ஒரு பெண்ணின் உளவியல்.” சில நேரங்களில் சில மனிதர்கள். ஜெயகாந்தன். காலச்சுவடு: நாகர்கோயில், 2014.

ஜெயகாந்தன். சில நேரங்களில் சில மனிதர்கள். சென்னை: மீனாட்சி பதிப்பகம், 1970.

ஜெயகாந்தன். “அக்கினிப் பிரவேசம்.” ஆனந்த விகடன்

ஜெயமோகன். “சில நேரங்களில் சில மனிதர்கள்: ஒரு கழுவாய்.” மே 12, 2017.

*

#MeToo குறித்த பெருந்தேவியின் இதர கட்டுரைகள்:

ஆண்மையச் சமூகக் கொள்ளை நோய்!

காமத்தின் பேரம்!

#MeToo மேட்டுக்குடிப் போராட்டமா?

பாலியல் வன்முறையை எப்படி வரையறுப்பது?

பாலியல் துன்புறுத்தல் இயல்பாக்கப்படும் விதம்!

பாலியல் வன்முறைகளின் அடிப்படை எது?

சமூக உதாசீனம் என்னும் பனிக்கட்டி

வல்லுறவும் இடி என்னும் உருவகமும்!

திங்கள், 5 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon