மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 18 செப் 2020

காந்தி - 150 குறுந்தொடர்: நேதாஜியின் செயல்களும் விளைவுகளும்!

காந்தி - 150 குறுந்தொடர்: நேதாஜியின் செயல்களும் விளைவுகளும்!

விவேக் கணநாதன்

காந்தியின் 150ஆவது ஆண்டை ஒட்டி, காந்தியைப் பற்றிய மாற்றுப் பார்வைகளை மீளாய்வு செய்யும் குறுந்தொடர் - பகுதி 2

1933 - 36 காலகட்டத்திலேயே நேதாஜி ஜெர்மனி, பிராக், வார்சா, இஸ்தான்புல், பெல்கிரேட், புகாரெஸ்ட் போன்ற ஐரோப்பிய நாடுகளுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தார். 1934 நவம்பரில் நேதாஜி எழுதி வெளிவந்த இந்தியப் போராட்டம் புத்தகத்தில், கம்யூனிசமும் பாசிசமும் அடங்கிய கூட்டுக் கலவைக் கோட்பாட்டை தான் விரும்புவதாக தெரிவித்திருந்தார். அதற்கு முன்பாக, வட்டமேசை விவாதத்தில் காந்தி வெறுங்கையுடன் திரும்பி வருவதாகச் சொன்னபோதும், காந்தியை நேதாஜி கண்டனம் செய்திருந்தார்.

நேதாஜி 1935ஆம் ஆண்டு சட்டத்தில் சொல்லப்பட்டிருந்த கூட்டாட்சித் திட்டத்தை முழுமையாக நிராகரித்தார். நேதாஜியின் விருப்பம் என்பது அனைத்து சமஸ்தானங்களும், பாகிஸ்தானும் உள்ளடக்கிய முழுஐக்கிய இந்தியா. ஆனால், காந்தி கூட்டாட்சித் திட்டத்தை நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும் என விரும்பினார். அதேநேரம் கூட்டாட்சி மத்திய சபையில், சமஸ்தானங்களின் சார்பாக மன்னர்களால் நியமிக்கப்படும் உறுப்பினர்கள் மட்டும் இருக்கக் கூடாது; ஒவ்வொரு மாகாணத்திலும் பொறுப்பாட்சி முறை அறிமுகப்படுத்தப்பட்டு, மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் மத்திய அரசமைப்பில் இடம்பெற வேண்டும் எனச் சில திருத்தங்களை வலியுறுத்திவந்தார்.

இந்நிலையில், காந்தியின் எதிர்ப்போடு நேதாஜி 29.1.1939இல் இரண்டாவது முறையாக காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். காங்கிரஸில் சர்வதேச சக்திகளுடனான தொடர்பு முகமாகவும், உலக அளவில் பல்வேறு தரப்பின் நட்பைப் பெற்றவராகவும் நேருவே இருந்ததாக இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் இந்திய விடுதலை வரலாற்றில் தெரிவிக்கிறார். பாசிச ஆதரவுப் போக்குடன் இருக்கும் நேதாஜியின் சர்வதேச அணுகுமுறை தொடர்பாக நேரு, நேதாஜியை விமர்சித்தார். இதற்கு பதிலளித்த நேதாஜி, நேரு உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் அறைக்குள் ஒன்றைப் பேசிவிட்டு, வெளியில் ஒன்றைப் பேசும் பாசிசவாதிகள் என்று விமர்சித்தார்.

இந்த விமர்சனத்துக்கு வருத்தம் தெரிவிக்கும்வரை நேதாஜியுடன் சேர்ந்து பணியாற்ற இயலாது என காந்தி அறிவுரைப்படி பட்டேல், ராஜேந்திர பிரசாத், அபுல் கலாம் ஆசாத் உள்ளிட்டோர் செயற்குழுவிலிருந்து விலகினர். மேலும், காங்கிரஸ் காரியக் கமிட்டி உறுப்பினர்கள் 13 பேரும் காங்கிரஸ் செயற்குழுவிலிருந்து விலகினர். மாறாக, தனக்கு விருப்பமான செயற்குழுவை நியமித்துக்கொள்ளுமாறு நேதாஜியை காந்தி கூறினார். கட்சி உடையும் நிலைக்குச் சென்றது.

இதன் பின்னர் 1939 மார்ச்சில் நடந்த திரிபுரா காங்கிரஸ் மாநாட்டில் காந்தி பங்கேற்கவில்லை. செயல்பட முடியாத நிலையில், நேதாஜி தலைவர் பதவியிலிருந்து விலகி காங்கிரஸுக்குள்ளிருந்தே இயங்கும் பார்வர்டு பிளாக் கட்சியைத் தொடங்கினார்.

நேதாஜியும் நாசிகளும்

இந்நிலையில், 1939 செப்டம்பரில் இரண்டாம் உலகப் போர் வந்தது.

அனுமதியில்லாமல் இந்தியாவை போரில் ஈடுபடுத்துவதாகக் கூறி 1939 அக்டோபரில் காங்கிரஸ் மாகாண அரசுகளைக் கலைத்தது. பிரிட்டிஷ் இந்தியா போர் முயற்சிகளைத் தடுப்பதாகக் கூறி நேதாஜி 1940இல் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டார்.

இரண்டாம் உலகப் போரைப் பொறுத்தவரை பிரிட்டனுடன் பேரம் பேசி, அதிகாரத்தைக் கைமாற்ற காங்கிரஸ் விரும்பியது. இந்தியாவில் பெரியார் உள்ளிட்ட பல முக்கிய சக்திகள் பிரிட்டனுக்கு ஆதரவான நிலைப்பாட்டையே எடுத்திருந்தனர். குறிப்பாக, 1941 ஜூன் மாதம் சோவியத் மீதான ஹிட்லரின் படையெடுப்புக்குப் பிறகு கிட்டத்தட்ட அனைத்துப் பிரிவினரும் பிரிட்டன் ஆதரவு நிலைப்பாட்டையே எடுத்தனர். நேதாஜி மட்டுமே பிரிட்டனுக்கு எதிராக, ஹிட்லருடன் கூட்டு சேர்ந்தார். எதிரிக்கு எதிரி நண்பன் என்ற கணக்கில் நேதாஜி பாசிசம், நாசிசத்தின் மானுட பயங்கரவாதத்தன்மை குறித்துக் கவலைப்படவில்லை.

17.1.1941 அன்று வீட்டுச் சிறையிலிருந்து மாறுவேடத்தில் தப்பித்த நேதாஜி, ஆப்கானிஸ்தான் வழியாக சோவியத் சென்றார். அங்கே இரண்டு மாதங்கள் தங்கியிருந்தார். பின்னர், அங்கிருந்து ஜெர்மன் சென்றார். ஜெர்மனில் இந்திய ஆசாத் என்கிற வானொலியும், இந்திய மையம் என்ற அமைப்பையும் தோற்றுவித்தார். இந்தியப் போர்க் கைதிகளைக் கொண்டு இந்திய சுதந்திர ராணுவம் அமைத்தார். அந்த வீரர்கள் நேதாஜி மற்றும் ஹிட்லருக்கு தங்களது விசுவாசத்தைக் காட்டிப் பிரமாணம் எடுத்துக்கொண்டனர்.

1941 ஏப்ரல் முதல் 1943 பிப்ரவரி வரை ஜெர்மனியில் தங்கியிருந்த நேதாஜி, அந்த சமயத்தில் அங்கு நடந்த யூதப் படுகொலை குறித்தோ, மனித உரிமைப் படுகொலைகள் குறித்த எந்த கண்டனமும் தெரிவிக்கவில்லை.

1943 பிப்ரவரியில் நேதாஜி ஜெர்மனிலிருந்து சிங்கப்பூர் சென்றார். மலாய் மற்றும் சிங்கப்பூரை 1942 பிப்ரவரியிலேயே ஜப்பான் கைப்பற்றியிருந்தது. அதன்பிறகு, இந்திய சுதந்திர கழகம், மலாய் மத்திய இந்திய சங்கம் போன்ற அமைப்புகள் அங்கு விரிவாகின. அவ்வமைப்புகளில் இருந்த உறுப்பினர்கள் மூலம் நேதாஜியால் இந்திய தேசிய ராணுவம் அமைக்கப்பட்டது. இந்த அமைப்புகளை அடிப்படையாகக் கொண்டு 1943 அக்டோபரில் மலாயாவில் தற்காலிக இந்திய அரசாங்கம் அமைத்திருப்பதாகவும், அந்த அரசாங்கம் மூலம் பிரிட்டன் மற்றும் அமெரிக்கா மீது போர் தொடுக்க இருப்பதாகவும் நேதாஜி அறிவித்தார்.

இந்த ராணுவத்துக்காக மலாயாவிலிருந்த இந்தியர்களிடம் நிதி வசூலிக்கப்பட்டது. ஆரம்பத்தில் மக்கள் உற்சாகமாக நிதியளித்தனர். மிக உற்சாகமான ஒரு மனநிலை இருந்தது. பலரும் விரும்பி ராணுவத்தில் இணைந்தனர். இது சிங்கப்பூர், மலாயா பகுதி இந்தியர்களிடம் புதிய எழுச்சியை ஏற்படுத்தியது.

1944 பிப்ரவரி - மே மாதங்களில் இன்றைய மணிப்பூர் தலைநகரான இம்பாலை நோக்கி நேதாஜியின் ராணுவம் முன்னேறியது. இந்திய மண்ணில் நேதாஜி ராணுவம் நுழைந்துவிட்டதாக உற்சாகமான செய்திகள் ஜெர்மனில் அமைக்கப்பட்ட ஆசாத் வானொலியால் சொல்லப்பட்டது. ஆனால், பிரிட்டன் ராணுவம் நேதாஜியின் ராணுவத்தைத் தோற்கடித்து, வீரர்களைச் சிறைபிடித்தது.

இந்நிலையில், ராணுவத்தை நடத்த நிதிநெருக்கடிகள் அதிகரித்தன. இதனால், மலாயாவில் இருந்த இந்திய சுதந்திர கழகத்தில், அங்கிருக்கும் இந்தியர்கள் அனைவரும் இணைவதும், வரி அளிப்பதும் கட்டாயமாக்கப்பட்டது. உறுப்பினர் அல்லாதவர்களுக்கு ரேஷன் உணவுப் பொருட்கள் இல்லை என அறிவிக்கப்பட்டது. இலங்கையிலிருந்து வந்திருந்தவர்களும், சிங்களர்களும்கூட நிர்பந்திக்கப்பட்டனர். தொழிலாளர்கள், நடுத்தரப் பிரிவினரிடமிருந்து 25% சதவீதம் வரை வரி வசூலிக்கப்பட்டது. வரி தராதவர்கள், ஏய்த்தவர்கள், ஜப்பானின் ஒடுக்குமுறை போலீசான கெம்படாய் மூலம் கைதுசெய்யப்பட்டனர்.

இந்தியாவின் சுயமரியாதையை விட்டுக்கொடுக்காமல் ஜப்பானுடன் இணைந்து செயல்படுவோம் என நேதாஜி தொடர்ந்து சொல்லிவந்தார். ஆனால், பர்மா - தாய்லாந்து வரையில் அமைக்கப்பட்ட ரயில் பாதை பணியில் இந்தியத் தொழிலாளர்கள் 80,000 பேர் வலுக்கட்டாயமாகப் பயன்படுத்தப்பட்டனர். இவர்களில் பாதிப் பேர் மட்டுமே உயிருடன் மீண்டனர். இதுகுறித்து நேதாஜி எந்தக்கருத்தும் தெரிவிக்கவில்லை.

நேதாஜியின் பின்னடைவு

போர் முனைகளில், நேதாஜியின் ராணுவத்தில் இருந்த இந்திய வீரர்கள் உணவுப் பஞ்சம் காரணமாக பட்டினியால் இறந்துபோயினர். இந்திய தேசிய ராணுவத்தில் இணைபவர்களுக்கு உணவு உறுதிசெய்யப்படும் என நேதாஜி நம்பிக்கையளித்திருந்தார். ஆனால் ஜப்பானோ, கூட்டுறவின் அடிப்படையில் நேதாஜியின் ராணுவத்துக்கு உணவுத் தட்டுப்பாட்டைத் தீர்க்க உதவவில்லை. இதனால், ராணுவத்திலிருந்து வீரர்கள் தப்பித்து ஓடுவதாகவும், ராணுவம் படுதோல்வி அடைந்ததாகவும் செய்திகள் வந்தன.

கிடைத்திருக்கும் ஆவணங்களின்படி 1941 ஜனவரியில் தப்பிச் சென்ற பிறகு நேதாஜி இந்தியாவுக்குத் திரும்பவில்லை. சுமார் 4 ஆண்டுகள் அவர் வெளிநாட்டிலேயே இருந்தார். ஜெய் ஹிந்த் முழக்கத்துடன் இந்திய தேசிய ராணுவத்தை அவர் வடிவமைத்திருந்தபோது, இந்தியாவில் இந்து - முஸ்லிம் கலவரம் தீவிரமடைந்துகொண்டிருந்தது.

இரண்டாம் உலகப் போரின் இறுதியில் நேதாஜி ஆதரித்த அச்சு நாடுகள் வீழ்த்தப்பட்டன. நேதாஜியின் இந்திய தேசிய ராணுவம் விசுவாசப் பிரமாணம் எடுத்துக்கொண்ட ஹிட்லர் தற்கொலை செய்துகொண்டார். எந்தப் பின்னணியிலிருந்து பார்த்தாலும், நேதாஜியின் முயற்சி கவர்ச்சிகரமான வரலாற்று சாகசமே ஒழிய, முழு உலகச் சூழலுக்கும் உகந்த விவேகமான வீரமல்ல.

ஆனால், பொதுவெளியில் மர்மமான வாழ்க்கைப் பின்னணியோடு பார்க்கப்படும் நேதாஜி சாகசவாதியாகவும், வீரத்தின் அடையாளமாகவும் படிந்திருக்கிறார். நேதாஜி தனிப்பட்ட வாழ்விலும், ராணுவக் கட்டமைப்பிலும் சாதிகளைக் கழித்தல் என்பதைப் பின்பற்றிவந்தார். ஆனால், சாதித் திரட்சிக்கான தேசிய முகமாகவும், அடையாளக் குறியீடாகவும் இன்று மாறியிருக்கும் நேதாஜியை காந்தி வெறுப்புக் குறியீடாக இந்துத்துவம் பயன்படுத்துகிறது. நேருவுக்கு எதிரான இந்து முகமாகப் பிரச்சாரம் செய்கிறது. சோவியத் மீது பிடிப்பும், இடதுசாரி உணர்வும் கொண்ட நேதாஜியை பட்டேலைப் போலவே, காந்தி மரபுக்குக்கும், நேருவுக்கும் போட்டியாளராக இந்துத்துவ அரசியல் முன்வைக்கிறது.

தமிழ்நாட்டில் நேதாஜிக்கான வரவேற்புத்தளம் சிவகங்கை, மதுரை, இராமநாதபுரம் போன்ற மாவட்டங்களிலிருக்கும் கள்ளர், மறவர் சாதியினர் இடையே அதிகமாக உள்ளது. இதன் இணைப்புப்பாலம் பசும்பொன் முத்துராமலிங்கம். மற்ற தரப்புகளைக் காட்டிலும், காந்தி வெறுப்பை வெகுஜன வடிவில் கடத்தும் ஆற்றலோடு இருப்பதும் இந்த நேதாஜி ஆதரவுத்தளமே. செறிவான எண்ணிக்கைச் சாதியினராக இந்த ஆதரவுத்தளம் இருப்பதால் வாக்கரசியலிலும் இதன் பாதிப்பு கடுமையாக இருக்கிறது. விமர்சனத்துக்கு அப்பாற்பட்ட நம்பிக்கையாக நேதாஜி வழிபாட்டை இது மாற்றுகிறது. இதனாலேயே, வாக்கரசியல் இயக்கங்கள் வரலாற்றைக் குறித்த எந்தக் கவலையும் இல்லாமல் நேதாஜி ஆதரவுத்தளத்திடம் பணிய வேண்டியிருக்கிறது. இதனால், காந்தியின் நடைமுறை பயன்நிலை முறிவை வெகுஜனப்படுத்தும் ஆற்றல்மிக்கதாக இந்தத் தரப்பு இருக்கிறது.

(நாளை தொடரும்)

கட்டுரையாளர் விவேக் கணநாதனைத் தொடர்புகொள்ள: [email protected], ஃபேஸ்புக், ட்விட்டர்

பகுதி 1

சனி, 3 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon