மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 26 செப் 2020

நமக்குள் ஒருத்தி: வரலாறும்.. சமூகமும்.. பெண்களும்!

நமக்குள் ஒருத்தி: வரலாறும்.. சமூகமும்.. பெண்களும்!

நவீனா

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த புனிதரான ஜோன் ஆஃப் ஆர்க் (Joan of Arc) அவர்களின் வாழ்க்கையினை வரலாறுகளிலும், இலக்கியங்களிலும் மற்றும் பல திரைப்படங்களிலும், பலரும் பலவிதமாக பதிவு செய்திருக்கின்றனர். அடிப்படையில் அவற்றுக்குள் இருக்கும் ஒற்றுமை வேற்றுமைகளை ஆராயும்போது வரலாற்றிலும், இலக்கியத்திலும், திரைப்படங்களிலும் இயங்கிவரும் தனிமனித அல்லது ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் ஆதிக்கம் முழுமையாகப் புலப்படும்.

ஒரு நபர், இரண்டு பார்வைகள்

உதாரணமாக பிரெஞ்சு வரலாற்று ஆசிரியர்கள் ஜோன் தங்களது நாட்டைச் சேர்ந்த பெண் என்பதால் அவரைப் புனிதர் என்று காட்சிப்படுத்தும் வகையில், அவர் பல அற்புதங்களை நிகழ்த்தியதாக வரலாற்றில் பதிவிட்டுள்ளனர். ஆனால், பிரிட்டனைச் சேர்ந்த வரலாற்றாளர்கள், ஜோன் ஒரு சிறுமியாக இருந்தும் தங்களின் ராணுவப் படையை ஒரு முறை களத்தில் வீழ்த்திவிட்டார் என்கிற காழ்ப்புணர்ச்சியில் அவரை வரலாற்றில் ஹர்டிக் (Heretic) அதாவது மதத்தின் சட்டதிட்டங்களைப் பின்பற்றாதவள் என்று பதிவு செய்துள்ளனர்.

இலக்கியத்தில் பார்த்தோமேயானால் ஜார்ஜ் பெர்னாட்ஷா எழுதிய செயின்ட் ஜோன் (Saint Joan) என்னும் நாடகத்தில் ஜோனைப் புனிதராகக் காட்சிப்படுத்தியிருப்பதோடு அல்லாமல் அந்த நாடகத்தின் தலைப்பிலேயே செயின்ட் அதாவது புனிதர் என்று ஜோனைக் குறிப்பிட்டிருப்பார். இதன் பின்னணியை உற்று நோக்கினால் ஷா அயர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர். பொதுவாகவே ஐரிஷ் மக்களுக்கு பிரிட்டன் தங்கள் மேல் ஆதிக்கம் செலுத்துவதும், ஏன் பிரிட்டன் மக்களையும்கூட அறவே பிடிக்காது. இதன் பொருட்டு பிரிட்டன் மீதான தனது கோபத்தையும் வெறுப்பையும் காட்டுவதற்காகவே ஷா பிரிட்டனுக்குப் பிடிக்காதவரான ஜோனின் கதையைத் தேர்வு செய்து நாடகமாக்கினார் என்றும் அதற்கு செயின்ட் ஜோன் என்று பெயரிட்டார் என்றும் ஷா மேல் விமர்சனங்களும் வைக்கப்படுகின்றன.

இந்தப் பதிவுகளின் கோர்வையில் அடங்கியிருக்கும் அடிப்படை சாராம்சத்தைத்தான் ஸ்டீபன் கிரீன்பிளட் (Stephen Greenblatt) அவர்கள் தனது நியூ ஹிஸ்டாரிக்கல் தியரி (New Historical Theory) கட்டுரைகளில் எடுத்தாளுகிறார். அவர் கருத்துபடி, செய்திகளையும், வரலாறுகளையும் பொய்யென்று அவர் ஒதுக்குகிறார். அவை எல்லாமே ஒரு தனிப்பட்ட மனிதனின் கருத்துகளேயாகும் என்றும் தனது வாதத்தை அவர் முன்வைக்கிறார். பொதுவில் நியூ ஹிஸ்டாரிசிசம் சொல்லுவது என்னவென்றால் வரலாறுகள் பொய்களால் நிரப்பப்பட்டவை. உண்மைகளை ஆராயாமல் அவற்றைக் கண்மூடித்தனமாக நம்பிவிடக் கூடாது என்பதே ஆகும்.

வரலாறு தனிப்பட்ட சக்தி அல்ல. கலாச்சாரம், பண்பாடு, மதரீதியான நம்பிக்கைகள், இன்னும் சற்றேறக்குறைய அனைத்துச் சமூகக் கட்டமைப்புகளை உள்ளடக்கிய அல்லது அனைத்து சமூகக் கட்டமைப்புகளுக்குள் உள்ளடங்கிப்போன ஒரு குறியீடாகவே வரலாற்றைப் பார்க்க வேண்டும்.

கோயிலும் பெண்களும்

அவ்வகையில் குறிப்பிட்ட இந்து மதக் கோயில்களுக்குள் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்படுவது குறித்த சர்ச்சைகளில் அதன் வரலாற்றுப் பின்னணியையும் இணைத்து ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டிய சூழலே நிலவுகிறது. முன்னொரு காலத்தில் மாதவிடாய் நாட்களில் பெண்களின் ரத்தப் போக்கு காரணமாக அவர்கள் அதிகம் நடமாட முடியாத நிலையில் ஒரு மண்பானையில் அந்த உதிரத்தை வெளியேற்றும்படி கூறி ஓரிடத்திலேயே அவர்களை அமர வைக்கும் பழக்கம் இருந்து வந்தது. ஆனால், இன்றைய சூழலில் அறிவியல் வளர்ச்சியின் உச்ச கட்டத்தில் இருக்கும் நிலையில் பெண்களின் மாதவிடாய் சிரமங்களை சமாளிக்க நாப்கின் டெம்பான் (tampon), மென்ஸ்டுரல் கப் (menstrual cup) என உதிரத்தை உடலுக்குள்ளாகவே வெளியேற்றும் கண்டுபிடிப்புகள் உள்ளன. மாதவிடாயைத் தள்ளிப்போடும் மாத்திரைகளும் இன்று வந்துவிட்டன. பெண்களுக்கு அவர்களின் மாதவிடாயைக் காரணம் காட்டி மறுக்கப்பட்ட உரிமைகள் அனைத்தும் மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டிய சூழ்நிலை உருவாகிவிட்டது. மேலும் அவர்களின் அந்த உதிரத்திலிருந்தே குழந்தை உருவாகிறது என்பதைக் கருத்தில் கொள்ளும்போது அதனை எந்த வகையிலும் தீட்டு எனக் கருதுவது அபத்தமாகும்.

பெண்களைச் சில கோயில்களுக்குள் அனுமதிப்பது மத நம்பிக்கைகளை உடைத்தெறிவதாக இருப்பதாக ஒரு வாதம் முன்வைக்கப்படுகிறது. ஆனால், இந்து மதக் கோட்பாடுகளின் அடிப்படையும், அதன் பயன்பாடுகளும் பல்வேறு நிலைகளில் மாறுபடுவது மேற்சொன்ன மத நம்பிக்கை என்னும் வாதத்திற்கு எதிராகவே இருக்கிறது. உதாரணமாக வடஇந்தியாவில் உள்ள சிவன் கோயில்களிலும் இன்னும் வேறு சில கோயில்களிலும் கருவறைக்குள் அனுமதிக்கப்படும் பெண்கள் தாங்களே கடவுளுக்கு அபிஷேகம் செய்யவும் அனுமதிக்கப்படுகின்றனர். தென்னிந்தியக் கோயில்களில் அதற்கு அனுமதி கிடையாது.

ஐயப்பன் பிரம்மச்சரியக் கடவுள் என்று சபரிமலைக் கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்க மறுக்கும் அதேசமயத்தில், இந்தியாவின், தமிழகத்தின் மற்ற பகுதிகளில் இருக்கும் ஐயப்பன் கோயில்களுக்குள் பெண்கள் தடையின்றி நுழைந்து வழிபட அனுமதிக்கப்படுகின்றனர். இவ்வாறான பல குழப்பங்கள் மத நம்பிக்கை சார்ந்த வாதங்களைக் குறித்துக் கேள்வி எழுப்ப வைக்கின்றன.

தேவையற்ற அதிரடிகள்

நீதிமன்றத்தின் தீர்ப்பை சாதகமாகப் பயன்படுத்தி பல பெண்ணியவாதிகள் சபரிமலை கோயிலுக்கு அத்துமீறி நுழைய முற்படுவதும், அதன் மூலம் ஆதாயம் தேடிக்கொள்வதும், புதிய பிரச்சினைகளையும் சிக்கல்களையும் தான் விளைவித்துக் கொண்டிருக்கின்றன. இதுபோன்ற செயல்கள் பெண்கள் மீதான வெறுப்பினை அதிகரிக்குமே ஒழியப் பிரச்சினைக்கு தீர்வு காண உதவாது.

பெண்களைக் கோயில்களுக்குள் அனுமதிப்பதற்கான சாத்தியக்கூறுகளை வரலாற்றுப் பின்புலத்தில் துவங்கி, கலாச்சார மற்றும் மத நம்பிக்கையின் அடிப்படையில் தீவிரமாக ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வருவதே சிறந்தது. சட்டங்கள் எப்போதும் மக்களுக்காக மட்டுமே, சட்டங்களுக்காக மக்கள் என்றில்லை என்று வாதிட்டாலும், போராடி பெற்ற தீர்ப்பை வைத்துக்கொண்டு, பலரது மனங்களைப் புண்படுத்தலாம் என்று அர்த்தம் இல்லை. தங்கள் வீட்டில் இருக்கும் பெண்களை, முதலில் கோயிலுக்குச் செல்ல அனுமதிக்க வேண்டிய இடத்தில் ஆண்ளே இருப்பதும், அது குடும்பம் என்னும் கட்டமைப்பிலிருந்து தொடங்கப்பட வேண்டிய நிகழ்வு என்பதையும் மறுத்துவிட முடியாது என்பதால், இந்தப் பிரச்சினையில் எவரையும் கட்டாயப்படுத்துவது முற்றிலும் பயனற்றது.

இதைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி, பெண் பக்தர்கள் கோயிலுக்குள் செல்ல வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்த்துவதன் மூலம் இந்தப் பிரச்சினையை எடுத்தாளுவதே சிறந்த தீர்வாக இருக்க முடியும்.

பெண்கள் சில குறிப்பிட்ட கோயில்களுக்குள் நுழையக் கூடாது என்று சொல்வதற்கான திட்டவட்டமான காரணங்களும் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. எனவே அதன் பின்புலத்தை ஆராய்ந்து தீர்வு காண ஆண்களும் முனைப்புக்காட்ட வேண்டும். கண்மூடித்தனமாகப் பின்பற்றப்படும் நம்பிக்கைகளுக்கும், தேவையை அறிந்து பின்பற்றப்பட வேண்டிய நம்பிக்கைகளுக்கும் இடையிலான வித்தியாசங்களை ஆண், பெண் இருபாலருமே உணர வேண்டிய நேரமிது.

எந்தக் காரணம் காட்டினாலும் சரி, ஆண், பெண் பாலின வேறுபாட்டுக்கு அதன் மூலம் அடிகோலுவது தவறு என்றே கொள்ள வேண்டும். தன்னை விரும்பிய மாளிகைப்புரத்தம்மாளையே தனக்காகக் காத்திருக்க அனுமதி அளித்த சுவாமி ஐயப்பன், தன்னை நாடி வரும் உண்மையான பக்தி உள்ள பெண்களை எங்கனம் ஒதுக்குவார் என்பதும் சிந்தித்துப் பார்க்க வேண்டிய விஷயம் தான்.

இன்னும் பறக்கலாம்!

(தொடரின் அடுத்த பகுதி வரும் திங்களன்று வெளியாகும் - ஆசிரியர்)

(கட்டுரையாளர் நவீனா, ஆங்கிலப் பேராசிரியர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர், எழுத்தாளர். சமூகப் பிரச்சினைகள், பெண்ணியம், இலக்கியம் சார்ந்த படைப்புகளை எழுதி வருகிறார். இவரைத் தொடர்புகொள்ள: [email protected])

தொடரின் முதல் பகுதி

பகுதி 2

பகுதி 3

பகுதி 4

பகுதி 5

பகுதி 6

பகுதி 7

பகுதி 8

பகுதி 9

பகுதி 10

பகுதி 11

பகுதி 12

பகுதி 12

பகுதி 13

வெள்ளி, 2 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon