மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 26 பிப் 2020

காலையும் மாலையும் பட்டாசு வெடிக்கலாம்!

காலையும் மாலையும் பட்டாசு வெடிக்கலாம்!

“காலை 4 மணி முதல் 5 மணி வரையும், இரவு 9 மணி முதல் 10 மணி வரையும் பட்டாசு வெடிக்கலாம்” என்று தமிழக அரசு மனுதாக்கல் செய்த வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த அக்டோபர் 23ஆம் தேதியன்று, பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்குத் தடையில்லை என்று தீர்ப்பு வழங்கியது உச்ச நீதிமன்றம். அதே நேரத்தில் பல்வேறு நிபந்தனைகளையும் தெரிவித்தது. தீபாவளியன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரையும், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு காலங்களில் நள்ளிரவு 11.45 முதல் 12.30 வரையும் மட்டுமே பட்டாசு வெடிக்கலாம் என்று இத்தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு எதிராகத் தமிழக அரசு தாக்கல் செய்த மனுவில், காலை 4.30 மணி முதல் 6.30 மணி நேரம் வரை பட்டாசு வெடிக்கக் கூடுதல் நேரமாக ஒதுக்க வேண்டும் என்று திருத்தம் செய்யக் கோரிக்கை விடுத்தது.

நேற்று இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு, இரண்டு மணி நேரத்திற்கு மேல் பட்டாசு வெடிக்க அனுமதி அளிப்பதில்லை என்று உறுதியாகத் தெரிவித்தது. தமிழகத்தில் இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கலாம் என்றும், காலையா அல்லது மாலையா என்று பட்டாசு வெடிக்கும் நேரத்தை நிர்ணயம் செய்வதை தமிழக அரசே முடிவு செய்து கொள்ளலாம் என்றும் தெரிவித்தனர் நீதிபதிகள்.

தமிழக அரசு மற்றும் சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர் சங்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கானது இன்று (அக்டோபர் 31) விசாரணைக்கு வந்தது. அப்போது, தீபாவளியன்று காலை 4 மணி முதல் 5 மணி வரையும், இரவு 9 மணி முதல் 10 மணி வரையும் பட்டாசு வெடிக்கலாம் என்று உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். இந்த உத்தரவு தென்னிந்திய மாநிலங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று தெரிவித்தது.

புதன், 31 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon