மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 27 மே 2020

சிறப்புக் கட்டுரை: பாலியல் வன்முறைகளின் அடிப்படை எது?

சிறப்புக் கட்டுரை: பாலியல் வன்முறைகளின் அடிப்படை எது?

பெருந்தேவி

முதலில் தெளிவுக்காக என் பார்வையை, நிலைப்பாட்டை கூறிவிட்டு ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ நாவலை முன்வைத்துப் பாலியல் துன்புறுத்தல் பற்றி எழுத எண்ணுகிறேன். ஆண், பெண் என்பதை சாராம்சமான அடையாளமாக நான் கருதவில்லை. பாலியல் துன்புறுத்தல் (அல்லது வன்முறை) என்ற பொருளைப் பற்றி உரையாடும்போது ஒரு விஷயத்தில் மிக கவனம் தேவை. பெண்களைத் தன்னியல்பாகப் பாதிப்புக்கு ஆளாகுபவர் நிலையில் வைத்துப் பேசுவதிலோ, ஆண்களை வன்முறையாளர்கள் என்ற நிலையில் வைத்துப் பேசுவதிலோ எனக்கு ஏற்பில்லை. இப்படி லேபிள்களுக்கு அடியில் இரு பால்களையும் வரிசைப்படுத்துவது ஆணின் வலிமையையும், பெண்ணின் நொய்மையையும் அப்படியே மறுப்பின்றி ஏற்பதாகவும் அல்லவா இருக்கிறது?

இந்தத் தொடரில் சென்ற பகுதியில் குறிப்பிட்ட எடுத்துக்காட்டுகளைக் காட்டியே பாலியல் துன்புறுத்தல் அந்தந்தத் தருணங்களைப் பொறுத்து எவ்வாறு இயல்பாக்கம் செய்யப்படுகிறது என்பதைக் குறித்து எழுதியிருந்தேன். பாதிக்கப்படுபவர் / பாதிப்புக்கு உள்ளாக்குபவர் பற்றி நான் பேசுவது பால்களின் சாராம்ச குணமாக அல்லது அடையாளத்தில் வைத்து அல்ல.

எப்படிப் புரிந்துகொள்ளலாம்?

பிறகு என் கட்டுரைகளில் ஆண், பெண் என்ற பிரயோகங்களை எப்படிப் புரிந்துகொள்ளலாம்? தன்னிலைகள் என்ற அளவில். ஊறுபடுத்தும் தன்னிலை, ஊறுபடத்தக்க தன்னிலை என்று கூறும்போது சமூகச் செயற்பாடுகளுக்கே நான் முக்கியத்துவம் தருகிறேன், அவற்றின் பாரதூர விளைவுகளை ஆராயும் விதத்திலேயே இந்தப் பிரயோகங்களை நான் பயன்படுத்துகிறேன். என் ஆய்வுப் பார்வையை வடிவமைத்ததில் பின் - அமைப்பியல் பெண்ணியரும் தத்துவ அறிஞருமான ஜுடித் பட்லருக்கு இருக்கும் பங்களிப்பை நன்றியோடு அங்கீகரித்துவிட்டு, மேற்கொண்டு தொடர்கிறேன்.

பின் – அமைப்பியல் பெண்ணியத்தின் இன்றியமையாத பங்களிப்பு பால் என்பதை சாராம்சம் எனக் கொள்வதைச் சவாலுக்கு உள்ளாக்கியதே. இது தனிக் கட்டுரைக்கு உரியது. ஆனால், இந்தக் கட்டுரைத் தொடருக்காக ஓர் அடிப்படையான பார்வைச் சட்டகத்தைப் பகிர்ந்துவிட்டு மேற்கொண்டு எழுதுகிறேன். ஜுடித் பட்லர் முன்வைத்த பெண்ணியத் தத்துவத்தின் அடிப்படை சிமோன் தி போவார் உள்ளிட்டவர்களின் பால், பாலினம் பற்றிய கருத்தாக்கத்தை மறுத்ததே. அதாவது, பால் என்பது உடற்கூறாக ஏற்கெனவே தரப்பட்ட ஒன்று என்பதை மறுத்தவை பட்லரின் எழுத்துகள். பால் என்பதே பண்பாட்டுக் கட்டமைப்பு என்பதே அவரின் புரட்சிகரத் தத்துவப் புரிதல். பாலினம் என்பது பால் என்பதே சமூகக் கட்டமைப்பு என்பதை மறைக்க உதவும் ஒரு திரை மட்டுமே; பண்பாட்டுக்கு வெளியே பால் சுட்டுகிற உயிர்க் கூறு என்று ஒன்றில்லை என்பது அவர் கருத்து.

உடலை, உடலின் உயிரியல் யதார்த்தத்தை ஜுடித் பட்லர் மறுக்கிறார் என்று அவசரமாகப் புரிந்துகொள்வதைத் தவிர்க்கவும். பட்லர் கூறுவது சமூகச் சொல்லாடல்களின் எங்கெங்குமான பாரிய தாக்கம் பற்றி. இந்தச் சொல்லாடல்களைத் தாண்டி உடலை, அதன் உயிர்க் கூறு யதார்த்தத்தை நம்மால் பேச இயலாது என்பதே அவர் வாதம். ஓர் உடல் நமக்குப் பொருட்டாகும்போது, அது ஒரே சமயத்தில் இரண்டு விதமாகப் பொருளாகிறது: பருண்மைப் பொருளாகவும் (object), பொருள் எனப்படும் அர்த்தமாகவும் (significance).

Bodies that Matter என்பது ஜூடித் பட்லரின் முக்கியமான நூலொன்றின் தலைப்பு. நாம் வழங்குகிற அர்த்தத்தைத் தாண்டித் தன்னளவிலேயே சாராம்சமான பொருளாகப் பால் என்பதைச் சுட்டவே முடியாது என்று எளிமையாகச் சுருக்கி ஓரளவுக்குப் புரிந்துகொள்ளலாம்.

எதிர்ப் பாலியல் அதிகாரம்

ஆகவே, நாம் ஆண், பெண் எனும் போது, இந்தப் பயன்பாடுகள் ஒரு உடல் இருப்பைச் சாதாரணமாக விவரிப்பதாக (descriptive) அமைவதில்லை, மாறாக அவை அர்த்தம் வழங்கி ஒரு உடல் இருப்பைக் கட்டமைப்பதாக (constitutive), சில நியதிகளுக்குள் கொண்டுவருவதாக (normative) இயங்குகின்றன. இந்த நியதிகள் எதிர்ப்பாலியல் நியதிகளாக இருப்பதைக் குறிப்பிட வேண்டும். இங்கே நிலவும் சமூகச் சொல்லாடல்கள், எதிர்ப் பாலியல் நியதிகளின் பிரகாரம் வலம்வருகின்றன. இந்த நியதிகள் முன்வைக்கிற, இவற்றின் களமான (field) எதிர்ப் பாலியல் அதிகாரத்தோடு (heteronormative power) இயைந்திருக்கின்றன. இந்தப் பின்னணியிலேயே ஆண், பெண் தன்னிலைகள் சமூகத்தில் உருவாக்கப்படுகின்றன, இருமைப்படுத்தி வேறுபடுத்தப்பட்டு படிநிலையில் வைத்து வடிவமைக்கப்படுகின்றன.

ஒரு குழந்தை பிறந்தவுடன் ‘என்ன, ஆணா, பெண்ணா?’ என்ற முதல் கேள்வியிலேயே எதிர்ப் பாலியல் அதிகாரக் களத்துக்குள், சொல்லாடலுக்குள் நுழைந்துவிடுகிறோம் என பட்லர் சுட்டுவது எண்ணத்தக்கது.

தமிழ் அறிவுச் சூழலில் அதிகாரச் சொல்லாடல்கள் பற்றிப் பேசும் பலரும் இன்றும் அதிகாரத்தை வைப்பவர், அதிகாரத்தின் இலக்காகிறவர் என்பதுபோன்ற முகவர்களை (agents) முன்னிலைப்படுத்தி பழைய பாணியிலேயே பேசுவதையே பார்க்க முடிகிறது. ஆனால் அதிகாரம் என்பது கட்டுப்படுத்துவது, ஒழுங்குபடுத்துவது மட்டுமல்ல. அது தன்னிலைகளை, அடையாளங்களை உருவாக்கக்கூடியதும்கூட (productive power). அதிகாரத்தின் இந்த உருவாக்கப் பரிமாணத்தைப் பற்றி மிஷேல் ஃபூக்கோவிலிருந்து தொடங்கி தத்துவ அறிஞர்கள் விரிவாக எழுதியிருக்கிறார்கள். ஆண்பால், பெண்பால் ஆகிய பால்களின் கட்டமைப்பு, உருவாக்கத்தில், எதிர்ப் பாலியல் அதிகாரம் என்பதன் பங்களிப்பை இந்தப் பின்னணியில் வைத்து நாம் புரிந்துகொள்ள முயலலாம்.

மேற்குறிப்பிட்ட தத்துவ நோக்கின் பரந்த அடிப்படையிலேயே என் கட்டுரைகளில் (ஆனந்த விகடனின் வெளிவந்த ஆண்பால், பெண்பால், அன்பால் தொடரில் வெளியான கட்டுரை, மின்னம்பலத்தில் வெளிவந்த கத்துவா பாலியல் வன்முறை பற்றிய கட்டுரை உட்பட), சமூகச் செயற்பாடுகளைப் பார்க்க எத்தனித்திருக்கிறேன்.

நமது சமூகச் செயற்பாடுகள் பலவும், பேச்சுவழக்குகளிலிருந்து, உடை உள்ளிட்ட பழக்க வழக்கங்களிலிருந்து, சடங்கு, வழிபாட்டு முறைகளிலிருந்து, அரசியல், விளையாட்டு போன்றவை தொடர்பான நடைமுறைகளிலிருந்து, இப்படிப் பலவும், இரு பால்களின் கட்டமைப்பை மீண்டும் வலுப்படுத்துபவையாக (reinforce), அதை நோக்கிய நிகழ்த்துதல்களாக உள்ளன. இந்தச் செயல்பாடுகளில் மீறல்கள் நேரலாம். விதிவிலக்குகளாகவே இத்தகைய மீறல்கள் இருக்கின்றன என்பது எதிர்ப் பாலியல் நியதிகளின், அதிகாரத்தின் ஆற்றலை அறைகூவுவதாகவே உள்ளது.

பாலியல் துன்புறுத்தல் என்பதைப் பொறுத்தவரை, அது எதிர்ப் பாலியல் நியதிகளின்படி இயங்கும் சமூகச் செயற்பாடுகளில் ஒன்று. இது அதன் இன்றியமையாத வரையறை. அதனால்தான் வீட்டையும் பொதுவெளியையும் ஒரு தொடர்ச்சியில் வைத்தே பாலியல் துன்புறுத்தலை அணுக வேண்டியிருக்கிறது. ஒரு கும்பல் செய்யும் பாலியல் வன்புணர்வையும், திருமணம் செய்துகொண்டவன் வலிந்து தொடுவதையும், பஸ் பயணத்தில் ஒருவனின் பிடிக்காத தொடுகையையும் தொடர்ச்சியில் வைத்தே புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. இவற்றால் ஒருவருக்கு விளையும் அல்லது ஒருவர் உணரக்கூடிய பாதிப்புகளில் இருக்கக்கூடிய வேறுபாட்டை மறுத்து அல்ல இதை நான் சொல்வது; அடிப்படையில் இயங்கும் அதிகாரம் ஒன்று, அதன் இயல்பு ஒன்று என்பதே நான் சொல்லவருவது.

துன்புறுத்தல்களுக்கிடையே உள்ள தொடர்ச்சி

‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ நாவலில், கங்காவுக்கு பஸ் பயணத்தில் நேர்ந்தது, கங்காவின் மாமாவின் வீட்டில் நேர்ந்தது, கங்காவுக்கும் பிரபுவுக்கும் காரில் நேர்ந்த வல்லுறவு, இப்படிப் பல பாலியல் துன்புறுத்தல்களுக்கிடையில் தொடர்ச்சி ஒருபுறம் உள்ளது. கூடவே, அன்றாட வாழ்க்கை என்று நாவலில் காட்டப்படும் சில காட்சிக் கட்டங்களிலும், நாவலுக்கு வெளியே நம் அன்றாட வாழ்க்கையிலும், இன்று பேசுபொருளாகியிருக்கும் #MeToo தற்கதையாடல்களிலும், இந்தத் துன்புறுத்தல்களுக்குத் தொடர்ச்சியான எதிர்ப் பாலியல் நியதிகளோடான சமூகச் செயற்பாடுகளை ஒரு வாசகர் பார்க்கலாம். அதாவது, கூர்ந்து வாசித்தால். பெண், ஆண் தன்னிலைகள் இத்தகைய தொடர்ச்சியான சமூகச் செயல்பாடுகளிலேயே வடிவமைக்கப்படுகிறது. கலையிலும் சரி, கலை பரிசீலிக்கும் வாழ்க்கையிலும் சரி.

#MeToo குறித்த பெருந்தேவியின் இதர கட்டுரைகள்:

ஆண்மையச் சமூகக் கொள்ளை நோய்!

காமத்தின் பேரம்!

#MeToo மேட்டுக்குடிப் போராட்டமா?

பாலியல் வன்முறையை எப்படி வரையறுப்பது?

பாலியல் துன்புறுத்தல் இயல்பாக்கப்படும் விதம்!

செவ்வாய், 30 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon