மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 26 செப் 2020

நமக்குள் ஒருத்தி: சாதியைத் தாண்டிய ஒடுக்கு முறை!

நமக்குள் ஒருத்தி: சாதியைத் தாண்டிய ஒடுக்கு முறை!

நவீனா

சபால்டர்ன் (Subaltern) என்ற சொல்லை, அதாவது சமூக, அரசியல், பொருளாதார மற்றும் புவிப்பரப்பில் இருப்பிடம் சார்ந்து ஒடுக்கப்பட்டவர்கள் அல்லது மேலாதிக்கத்துக்கு உட்படுகிறவர்களைக் குறிப்பிடுவதற்காக, 'அந்தோனியோ கிராம்சி' (Antonio Gramsci) தனது 'நோட்ஸ் ஆன் இத்தாலியன் ஹிஸ்டரி' (Notes on Italian History 1934 - 35) என்னும் தனது நூலில் பயன்படுத்தியிருந்தார். காயத்ரி சக்கரவர்த்தி ஸ்பீவக் (Gayatri Chakraborty Spivak) என்னும் வங்காளப் பெண்ணியவாதி, தனது 'கேன் த சபால்டர்ன் ஸ்பீக்?' (Can the Subaltern Speak?) என்னும் ஆய்வுக் கட்டுரையில் சபால்டர்ன் என்ற சொல்லை ஆய்வுக்கு உட்படுத்தி, பெண் என்பவள் 'ஒடுக்கப்பட்டவரினும் ஒடுக்கப்பட்டவர்' அதாவது subaltern of the subaltern என்று குறிப்பிட்டிருப்பார்.

அவர் முன்வைக்கும் கருத்து என்னவென்றால், சமூக, அரசியல், பொருளாதார மற்றும் புவியியல் ரீதியாக ஒடுக்கப்பட்ட எந்த ஓர் ஆணும், தனது வீட்டில் இருக்கும் பெண்களை ஒடுக்கவே பார்க்கிறான். ஒடுக்கப்பட்ட அல்லது தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த எந்த ஒரு பெண்ணும் சமூக ரீதியாகவும், பாலின ரீதியாகவும் இருமுறை ஒடுக்கப்படுகிறாள் என்பதே அவரின் கருத்து.

இது உண்மைதான் என்றாலும், காயத்ரி நாணயத்தின் ஒரு பக்கத்தை பற்றி மட்டும் பேசிவிட்டு, மற்றொரு பக்கத்தைச் சற்று புறக்கணித்துவிட்டார் என்றே சொல்ல வேண்டும். தமிழ்ச் சமூகத்தில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் உள்ள பெண்களைப் பார்ப்பனப் பெண்கள், பார்ப்பனர் அல்லாத பெண்கள் என்று பிரித்து, அவர்களில் பார்ப்பனர் அல்லாதோர் மட்டுமே அதிகம் ஒடுக்கப்படுவதாக ஒரு கருத்து பொதுவெளியில் நிலவி வருகிறது. உண்மையில் சொல்லப்போனால் பார்ப்பனப் பெண்களும் அதிகமாக தனது சுதந்திரத்தை இழந்தவர்கள்தான் என்று சொல்லும் நிலையே இன்றளவும் இருந்துவருகிறது. மொழியில் தொடங்கும் கட்டுப்பாடுகள் உணவு, கலாச்சாரம், பழக்கவழக்கம், உடை என அனைத்திலும் விரிவடைந்து

பிராமணப் பெண்களைக் கூட்டுப் புழுவாக அடைத்து வைக்கவே சமூகம் எத்தனிக்கிறது. பிராமணப் பேச்சு வழக்கில், 'அம்மா வந்தாள், அம்மா சொன்னாள், அம்மா சமையல் செய்கிறாள்' என்று அம்மாவையும் பெண்களையும் ஒருமையில் அழைக்கும் வழக்கம் இருப்பதுபோல், பார்ப்பனர் அல்லாத வேறு எந்தச் சாதியிலும் இருப்பதாகத் தென்படவில்லை. ஆச்சாரம் என்று சொல்லி மாதவிடாய் சமயத்தில் அடுப்பறைக்குள்ளும், வீட்டின் பூஜையறைக்குள்ளும் அனுமதிக்காமல் சொந்த வீட்டுக்குள்ளேயே ஒதுக்கி, ஒடுக்கி வைப்பதும் பிராமண, மேல்குடி சாதிகளிடையே அதிகமாக நிலவுகிறது. கூடவே கைம்பெண் கலாச்சாரத்தையும் இன்றுவரை பிராமண சமூகம் முற்றாகக் கைவிடாமல் கடைப்பிடித்துவருகிறது. அரசு வழங்கும் பெண்களுக்கான நலத்திட்டங்கள், சிறப்புச் சலுகைகள், சான்றிதழ்கள் எதுவுமே பிராமணப் பெண்களுக்குக் கிட்டுவது இல்லை.

உணவில்கூட சைவம் மட்டுமே உண்ணுவதற்குத்தான் அவர்களின் சமூகம் அவர்களை அனுமதித்திருக்கிறது. அப்படியே மீறி அவள் அசைவ உணவுகளை உண்டால் சமூகத்தின் பார்வையில் அந்தப் பெண் தவறானவளாவதோடு, சொந்தக் குற்ற உணர்ச்சியும் அவளைத் துரத்த ஆரம்பித்துவிடுகிறது. மஞ்சு கபூர் எழுதிய 'த இமிகிரன்ட்' (The Immigrant) என்னும் நாவலில் வரும் நினா ஒரு பிராமணப் பெண். பல ஆண்டுகளாக வெளிநாட்டிலிருந்தும் அசைவ உணவுகள் எதுவுமே உட்கொள்ளாமல் தவிர்த்துவரும் நினா, ஒரு நாள் நியூயார்க்கில் உள்ள உணவு விடுதி ஒன்றில், சுஷி (Sushi) என்னும் சமைக்கப்படாத பச்சை மீன் உணவைச் சாப்பிட நேர்கிறது. அந்த உணவு உண்ண வேண்டிய கட்டாய நிலை வரும்போது பயமும் குற்ற உணர்வும் அவளை நிறைத்துவிட்டிருந்தன என மஞ்சு கபூர் குறிப்பிட்டிருப்பார்.

'மீ டூ' விவகாரத்தில்கூட பிராமணப் பெண்ணின் குற்றச்சாட்டைப் பற்றிப் பேசும்போது, அதற்கு அரசியல் சாயம் பூசி அந்தக் குற்றச்சாட்டின் உண்மை பொய்க்கு அப்பாற்பட்டு, அதைப் புறக்கணிக்கவே சமூகம் விரும்புகிறது. 'மீ டூ' தொடர்பாகப் பத்திரிகை நிருபர் ஒருவர், உளவியல் வல்லுநர் ஒருவரிடம், 'பிராமணப் பெண்கள் பெரும்பாலும் பாலியல் ரீதியாகப் பிற ஆண்களிடம் ஒத்துப்போவது இயல்பானதுதானே?' என்று கேள்வி எழுப்புகிறார். சாதிக்கு அப்பாற்பட்டு, பெண் என்கிற முறையில்கூட மேற்குறிப்பிட்ட கேள்விக்காகச் சமூகத்தில் எவரும் கொந்தளிக்கவில்லை.

பெண் என்பவள் மேட்டுக்குடியாய் இருந்தாலென்ன? கீழ்த்தட்டாய் இருந்தாலென்ன? இரண்டுக்கும் இடைப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவளாக இருந்தால் என்ன? பெண் என்பவள் எப்போதும் சமூகத்தின் கௌரவத்திற்கு இரையாகும் பாலினம்தான். பார்ப்பன வன்மமாக இருந்தாலும் சரி, தாழ்த்தப்பட்ட சமூகத்தின் மீதான காழ்ப்புணர்ச்சியாக இருந்தாலும் சரி, அது பெண்ணின் மீதே முதலில் பாய்கிறது. அந்த வகையில் பெண் என்பவள், எந்தச் சமூகத்தில் பிறந்திருப்பினும் ஒடுக்கப்பட்டவனைக் காட்டிலும் ஒடுக்கப்பட்டவள்தான்.

இன்னும் பறக்கலாம்!

(தொடரின் அடுத்த பகுதி வரும் திங்கள் அன்று வெளியாகும் - ஆசிரியர்)

(கட்டுரையாளர் நவீனா, ஆங்கிலப் பேராசிரியர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர், எழுத்தாளர். சமூகப் பிரச்சினைகள், பெண்ணியம், இலக்கியம் சார்ந்த படைப்புகளை எழுதிவருகிறார். இவரைத் தொடர்புகொள்ள: [email protected])

தொடரின் முதல் பகுதி

பகுதி 2

பகுதி 3

பகுதி 4

பகுதி 5

பகுதி 6

பகுதி 7

பகுதி 8

பகுதி 9

பகுதி 10

பகுதி 11

பகுதி 12

பகுதி 13

ஞாயிறு, 28 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon