மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 24 செப் 2020

காஞ்சிபுரம் கோயில் சிலைகள் ஒப்படைப்பு!

காஞ்சிபுரம் கோயில் சிலைகள் ஒப்படைப்பு!

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் சோமாஸ்கந்தர் சிலை செய்வதில் முறைகேடு நடந்ததாகக் கூறி தொடுக்கப்பட்ட வழக்கில், நேற்று (அக்டோபர் 25) அந்தச் சிலைகளைக் கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார்.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் உள்ள சோமாஸ்கந்தர் சிலை சிதிலமடைந்ததால் புதிய சிலை செய்யப்பட்டது. அவ்வாறு செய்யப்பட்டதில் முறைகேடு நடந்ததாகப் புகார் எழுந்தது. புதிய சிலையானது, 2015ஆம் ஆண்டு அவசர அவசரமாக பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதையடுத்து, சிலை செய்வதில் பயன்படுத்தப்பட்ட தங்கத்தில் முறைகேடு நடந்துள்ளதாக, ஏகாம்பரநாதர் கோயில் பக்தர்கள் குழுவைச் சேர்ந்த அண்ணாமலை என்பவர் காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இது குறித்த விசாரணையில் சிலையில் சிறிதளவு தங்கம்கூடப் பயன்படுத்தவில்லை என்பது தெரிய வந்தது. இதையடுத்து, அக்கோயிலின் செயல் அலுவலர், ஸ்தபதி உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதுதொடர்பான வழக்கு கும்பகோணம் நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதால், சிலைகளை அங்கு ஒப்படைக்குமாறு காஞ்சிபுரம் நீதிமன்றம் உத்தரவிட்டது. நேற்று (அக்டோபர் 25) அதிகாலை 3 மணியளவில் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஆய்வாளர் முத்துக்குமார் தலைமையில் சோமாஸ்கந்தர் மற்றும் ஏலவார்குழலி அம்மன் சிலைகள் உரிய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன. பின்பு, இந்தச் சிலைகள் கும்பகோணம் சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டன.

வெள்ளி, 26 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon