மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 3 ஆக 2020

நமக்குள் ஒருத்தி: கனவுகளை வாழ்ந்து காட்டுங்கள்!

நமக்குள் ஒருத்தி: கனவுகளை வாழ்ந்து காட்டுங்கள்!

நவீனா

பெண் விடுதலைக்கு முனைப்பான முதல் படியாகத் திகழ்வது பெண்களின் முன்னேற்றமும் சாதனைகளுமேயாகும். கற்பனைத் திறன் அதிகம் வாய்க்கப்பெற்ற பாலினம் பெண்தான். அந்தக் கற்பனைத் திறனின் பிரதிபலிப்பாகவே பெண்கள் கைதேர்ந்த கதைசொல்லிகளாகக் குழந்தைகளின் பொழுதுகளை நிறைத்துவருகின்றனர். சிறுவயதில் பாட்டியும் அம்மாவும் சொன்ன கதைகள் அனைத்தும் எந்த வயதிலும் மனதைவிட்டு அகலாமல் இருப்பவை. ஆனால், அவர்களின் கற்பனைகளும் கனவுகளும் குழந்தைகளுக்குச் சோறூட்டுவதோடும், அவர்களைத் தூங்கவைப்பதோடும் நின்றுவிடுகின்றன. பால்ய வயதிலிருந்தே தன் வருங்காலத்தைக் குறித்து எண்ணற்ற கனவுகளைக் காணும் பெரும்பாலான பெண்கள், தனது பதின்ம வயதை எட்டும்போது தனது கனவுகளைத் துரத்திச் செல்ல மறந்துவிடுகின்றனர். நடுத்தர வயதுகளில் தனது கனவுகளையும் சேர்த்தே மறந்துவிடுகின்றனர். கனவுகள் காண்பது என்பது எவ்வளவு முக்கியமோ, அதைவிடவும் அந்தக் கனவுகளைத் துரத்தி வாழ்க்கையில் ஓடிக்கொண்டே இருப்பது முக்கியம்.

நினைவான கனவுகள்

பெளலோ கொய்லோ (Paulo Coelho) என்னும் பிரேசிலிய எழுத்தாளர், 1988ஆம் ஆண்டு போர்ச்சுகீசிய மொழியில் எழுதிய, ‘த அல்கெமிஸ்ட்’ (The Alchemist) என்னும் புத்தகம் உலகம் முழுக்க சுமார் 64 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தமிழிலும் அது ‘ரஸவாதி’ என்னும் பெயரில் மொழிபெயர்ப்பானது. தன்னை ஓர் எழுத்தாளராக நிலைப்படுத்திக்கொள்ளவும், உலகுக்குத் தன் திறமைகளை நிரூபிக்கவும், பல ஆண்டுகளாகப் போராடிக்கொண்டிருந்த பௌலோ கொய்லோவுக்கு, ஒருநாள் ஹார்பர் காலின்ஸ் (Harper Collins) பதிப்பாளரிடமிருந்து ஒரு கடிதம் வருகிறது. ‘த அல்கெமிஸ்ட் நாவலை வாசிப்பது, உலகம் முழுவதும் உறங்கிக்கொண்டிருக்கும்போது, அதிகாலையில் எழும் சூரியனைப் பார்ப்பது போன்றதோர் அமைதியை மனம் முழுவதும் பரப்பிவிட்டது’ என குறிப்பிடப்பட்டிருந்தது. தெளிந்த வானத்தைப் பார்த்து பௌலோ கொய்லோ தனக்குத்தானே சொல்லிக்கொள்கிறார், ‘இந்தப் புத்தகம் மொழியாக்கம் செய்யப்படவிருக்கிறது’ என்று.

அவர் கனவுகள் அனைத்தும் நனவாகின்றன. பத்து, நூறு, ஆயிரம், மில்லியன் என அமெரிக்கா முழுவதும் பிரதிகள் விற்றுத் தீர்கின்றன. அப்போதைய அமெரிக்க அதிபர் பில் கிளின்டன் ‘த அல்கெமிஸ்ட்’ புத்தகத்தைப் படிப்பது போன்றதொரு புகைப்படத்தைப் பத்திரிகைகளில் வெளியிட்டுப் பாராட்டுகிறார். ‘வேனிட்டி ஃபேர்’ (Vanity Fair) என்கிற பிரபல பத்திரிகையில் ஜூலியா ராபர்ட்ஸ் ‘த அல்கெமிஸ்ட்’ புத்தகத்துக்குப் புகழாரம் சூட்டி, பேட்டி ஒன்றை அளித்திருப்பதை துருக்கியில் இருக்கும்போது பெளலோ பார்க்க நேரிடுகிறது.

மியாமியின் தெருக்களில் பெளலோ நடந்து செல்லும்போது, ஒரு தாய்க்கும் மகளுக்குமான உரையாடலில், மகள் தாயிடம், ‘நீங்க அவசியம் த அல்கெமிஸ்ட் வாசிக்கணும்மா’ என்று கூறிக்கொண்டே நடந்து செல்வதைக் கேட்கிறார். அத்தனை ஆண்டுகளாகத் தான் பட்டபாடுகளுக்கு எல்லாம் பலன் கிடைப்பதைத் தன் கண்ணாரப் பார்த்துப் பூரித்துப்போகிறார். வெற்றியின் கனிகளைச் சுவைக்கத் தொடங்குகிறார். பெளலோ கொய்லோவின் வெற்றி, எட்டாத உயரங்களை எட்டியது. உலகின் குறிப்பிடத்தகுந்த பிரபலங்களில் ஒருவராக அப்போது அவர் மாறிவிட்டிருந்தார்.

உங்களுக்கான அழைப்பு எது?

அந்தக் காலகட்டத்தில் பெளலோவைச் சந்தித்த மக்கள் அனைவரும் அவரின் மாபெரும் வெற்றிக்கான ரகசியத்தைக் கேட்கின்றனர். அதற்கு அவர் இவ்வாறாகப் பதிலளிக்கிறார். ‘உண்மையில் சொல்லப்போனால், ரகசியம் என்று எதுவும் எனக்குத் தெரியாது. எனக்குத் தெரிந்ததெல்லாம், த அல்கெமிஸ்ட் கதையில் வரும் சான்டியாகோ எனும் ஆடு மேய்க்கும் சிறுவனைப் போலவே, எனக்கான அழைப்பு எது என்பதை நான் உணர்ந்திருந்தேன்’ என்றார்.

அனைவருமே கனவுகள் காண்கின்றோம். கனவுகளில் வரும் வெற்றிகளைக் கொண்டாடுகிறோம். கனவுகளை மீண்டும் மீண்டும் மனக்கண்களில் ஓட்டிப் பார்க்கிறோம். ஆனால், அவை யாவும் கனவுகளாகவே நின்றுவிடுகின்றன. கனவுகளை வாழ்க்கையாக மாற்றும் அடுத்த படிநிலைக்குப் பயணிப்பவர்கள் எண்ணிக்கையில் மிகவும் குறைவானவர்கள்தான். இது இரு பாலருக்கும் பொருந்தும் என்றாலும், பெண்களுக்கு இயல்பாகவே இது நிகழ்ந்து விடுகிறது. திருமணத்தின் பொருட்டோ, குழந்தைப்பேறு காரணமாகவோ, இன்னும் பிற சமூக காரணங்களினாலோ பெண்களில் பெரும்பாலானோர் தங்கள் கனவுகளைத் தியாகம் செய்துவிடுகின்றனர். அவர்களின் திறமைகளையும் தகுதிகளையும் நாளடைவில் அவர்களே மறந்துவிடுகின்றனர். ஆனால், அத்தோடு அவர்களின் கனவுகள் கரைந்துவிடுவதில்லை. வயது முதிர்ந்த காலத்தில் தன் பிள்ளைகளிடமும், பேரப்பிள்ளைகளிடமும் அவர்கள் இழந்துவிட்ட, தியாகம் செய்துவிட்ட கனவுகளைப் பற்றிப் பேசித் தன் மனதை அழுத்திக்கொண்டிருக்கும் பாரத்தை இறக்கி வைக்க முயன்று, அதில் தோற்று, அதை மீண்டும் தூக்கிச் சுமக்க ஆரம்பித்துவிடுவார்கள்.

இதன் பொருட்டு உருவாகும் பின்விளைவுகள் சமூகத்தையும் தாக்கவே செய்கின்றன. தனிப்பட்ட பெண்ணின் வீழ்ச்சி பெண் சமுதாயத்தின் வீழ்ச்சியாகும். ஒரு தனிப்பட்ட பெண்ணின் சாதனை பெண் சமுதாயத்திற்கான உயர்வின் ஒரு படியாகவே அமையும். மகளாக, மனைவியாக, தாயாக, தோழியாக இன்னும் பிற சமூக கதாபாத்திரங்களாக இருக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் கனவுகள் இருக்கின்றன. அதை சுமையாக மாற்றாமல் வாழ்வாக வாழ்ந்து காட்டுவதில்தான் பெண் விடுதலையின் முக்கியத்துவம் அடங்கியிருக்கிறது. அது பெண் மீதான ஆணின் பார்வையை மாற்றும் சமூக நிகழ்வாகவும் அமையும்.

இன்னும் பறக்கலாம்!

(தொடரின் அடுத்த பகுதி வரும் திங்கள் அன்று வெளியாகும் - ஆசிரியர்)

(கட்டுரையாளர் நவீனா, ஆங்கிலப் பேராசிரியர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர், எழுத்தாளர். சமூகப் பிரச்சினைகள், பெண்ணியம், இலக்கியம் சார்ந்த படைப்புகளை எழுதிவருகிறார். இவரைத்தொடர்புகொள்ள: [email protected])

தொடரின் முதல் பகுதி

பகுதி 2

பகுதி 3

பகுதி 4

பகுதி 5

பகுதி 6

பகுதி 7

பகுதி 8

பகுதி 9

பகுதி 10

பகுதி 11

பகுதி 12

வியாழன், 25 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon