மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 1 ஜுன் 2020

மகனது படத்தில் தந்தை!

மகனது படத்தில் தந்தை!

யுவன் ஷங்கர் ராஜா தயாரிக்கவுள்ள புதிய படத்தில் அவருடைய தந்தை இளையராஜாவே இசையமைக்கவுள்ளார்.

இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், தமன்னா காம்போவில் உருவாகிவரும் படம் ‘கண்ணே கலைமானே’. இதன் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்துவரும் நிலையில் புதிய படத்துக்குத் தயாராகியுள்ளார் இயக்குநர் சீனு ராமசாமி. அதன்படி யுவன் ஷங்கர் ராஜாவின் தயாரிப்பு நிறுவனமான ஒய்எஸ்ஆர் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் தற்போது இணைந்துள்ளார்.

சமீபத்தில் தனது பட நிறுவனத்தைத் தொடங்கிய யுவன் தனது முதல் படமாக இயக்குநர் இளனை வைத்து பியார் பிரேமா காதல் எனும் படத்தை தயாரித்திருந்தார். தற்போது சீனு ராமசாமியுடன் இணைந்திருக்கும் இந்தப் படம் அவரது தயாரிப்பில் இரண்டாவது படமாக அமைந்துள்ளது.

தென்மேற்கு பருவக்காற்று, இடம் பொருள் ஏவல், தர்மதுரை என சீனு ராமசாமி இயக்கிய முந்தைய சில படங்களில் நடித்த விஜய் சேதுபதியே இந்தப் படத்திலும் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். பியார் பிரேமா காதலில் யுவன் இசையமைத்திருந்த நிலையில் சுவாரஸ்யமான விஷயமாக இந்தப் படத்துக்கு இளையராஜாவே இசையமைக்கவுள்ளார்.

கற்றது தமிழ், பருத்தி வீரன், கோவா போன்ற யுவன் இசையமைத்திருந்த சில படங்களில் இணைந்து பாடல்களைப் பாடியுள்ள இளையராஜா, இந்தப் படத்தில் இணைந்திருப்பதன் வாயிலாக மகனது தயாரிப்பில் இசையையும் அமைக்கவுள்ளார்.

திங்கள், 22 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon