மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 28 ஜன 2020

சிறப்புக் கட்டுரை: பாலியல் துன்புறுத்தல் இயல்பாக்கப்படும் விதம்!

சிறப்புக் கட்டுரை: பாலியல் துன்புறுத்தல் இயல்பாக்கப்படும் விதம்!

பெருந்தேவி

‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ நாவல், ஒரு பெண்ணுக்கு வீட்டில் நெருங்கிய உறவினர் தரக்கூடிய துன்புறுத்தலை மட்டுமல்லாமல், வெளியே பொதுவெளியில் கிட்டத்தட்ட சம்மதமின்றி நேர்ந்த வல்லுறவு போன்ற ஒன்றையும், பஸ் பயணத்தில் அவள் சந்திக்கும் தொல்லையையும் ஒருங்கே, அடுத்தடுத்து நேர்பவையாகக் குறிப்பிடுகிறது. வல்லுறவு என்பதை ஏதோ தனிப்பட்ட, அபூர்வ நிகழ்வு எனச் சித்திரிக்காமல், பெண் சந்திக்கும் பாலியல் துன்புறுத்தல்களின் தொடர்ச்சியில் வைத்து ஜெயகாந்தன் அன்றே எழுதியிருக்கிறார் என்பது வியப்பூட்டுகிறது. போலவே, ஒரு பெண்ணுக்கான பாலியல் துன்புறுத்தல் உறவு, அந்தஸ்து, வயது போன்றவற்றில் வேறுபட்ட வெவ்வேறு மனிதர்களிடமிருந்து வருகிறது. சொந்த மாமாவிலிருந்து, முன்பின் தெரியாத அந்நியனிலிருந்து, முதல் சந்திப்பில் பரிச்சயமான ஆண் வரை.

நாவலின் கதைப் போக்கும் முடிவும் மரபான கற்புக் கருத்தியலைத் தூக்கிப்பிடித்திருந்தாலும், இடையறாத மேற்கூறிய சூழ்நிலைகளில் பெண்ணுக்கு இருக்கக்கூடிய மனக் கொந்தளிப்புகளை விரிவாக விவரிக்கிறது நாவல். கல்லூரியில் சேர்ந்த புதிதில் ஓர் இளம் பெண்ணுக்கு விபத்துபோல் நேர்ந்த பாலியல் வல்லுறவு, இதனால் குடும்பத்தாரால் அவள் அனுபவிக்கும் பாதிக்கப்பட்டவரையே குறைசொல்லும் போக்கு (victim-blaming), தஞ்சம் புகுந்த மாமா வீட்டில் அவரது பாலியல் அத்துமீறல், அவர் மனைவி அனுபவிக்கும் (பாலியல் சித்ரவதை போன்ற?) வன்முறை எனப் பாலியல் துன்புறுத்தலின் பல்வேறு சாயைகளை தொடர்க் கண்ணிகளாக இந்த நாவலில் எழுதிக்காட்டியிருக்கிறார் ஜெயகாந்தன். தனிக் கட்டுரையாக, நூலாக அலசப்பட வேண்டிய நாவல் இது. இந்தக் கட்டுரைக்காகத் தொடக்கப் பகுதியை மட்டும் குறிப்பிட நினைக்கிறேன்.

பஸ் பயணத்தில் பாலியல் சீண்டலை எதிர்கொள்ளும் பெண்ணின் மன ஓட்டத்தைத் தொடக்கப் பகுதி பல பத்திகளில் சொல்கிறது. இந்தப் பகுதி பாலியல் சீண்டலைப் பற்றிப் பேசும்போது ஒரு பெண்ணுக்கு இருக்கிற குழப்பம், வரக்கூடிய சந்தேகம், கையறு நிலை, நம் சூழலில் நிலவும் பெண் - வெறுப்பு போன்றவற்றைப் போகிறபோக்கில் தெரிவிக்கிறது. பல்லாண்டுகளுக்கு முன்பே இந்த நாவல் வெளிவந்திருந்தாலும் இன்றுவரையிலும் இந்த விவரணை பொருத்தமாகவே உள்ளது.

நாவலின் தொடக்கம் இப்படி இருக்கிறது:

“வெளிலே மழை பெய்யறது. பஸ் திரும்பறச்சே எல்லாரும் ஒருத்தர் மேல ஒருத்தர் சாயறா. எனக்கு முன்னாடி நின்னுண்டிருக்கானே, அவன் வேணும்னே அழுத்திண்டு என்மேல சாயறான். எனக்கு நன்னாத் தெரியறது. வேணும்னேதான் சாயறான். என்ன பண்றது? பொண்ணாப் பொறந்துட்டு ’நாங்களும் ஆம்பளைக்கு சமானம்னு’ படிக்கறதுக்கும் சம்பாதிக்கறதுக்கும் வெளியிலே புறப்பட்டுட்டா இதையெல்லாம் தாங்கிக்கத்தான் வேணும்.”

பெண்ணுக்கு இடம் வீடுதான் என்ற பண்பாட்டு மதிப்பீட்டால் ஒழுங்குபடுத்தப்படுகிறது பெண்பாலுக்கான இடம். மாறாக வெளியே வரும்போது ஒழுங்கை மீறியதாக அவளே நினைக்கும் வகையில் அந்த ஒழுங்குபடுத்தல் செயல்படுகிறது. பால் அதிகாரத்தைக் காட்டும் ஆணை எதிர்க்க முடியாத நிலையில், தனக்கு விதிக்கப்பட்டதாகத் தன் கையறு நிலையை எண்ணிக்கொள்கிறாள்.

“இப்ப ஒண்ணும் பஸ் திரும்பல. லெவலாத்தான் போயிட்டு இருக்கு. ஆனா எனக்குப் பின்னாடி இருக்கானே, அவன் கொஞ்சங் கொஞ்சமா நகர்ந்து வந்து வேணுமினே என் மேலே உரசி உரசி சாயரான். இவனுக்கு என்ன தைரியம்? இது என்ன நியாயம்?

அன்னிக்கு ஒரு நாள் கலா சொன்னாளே, இந்த மாதிரி ஒருத்தன் ‘மிஸ்பிகேவ்’ பண்ணினப்ப ஸ்லிப்பரைக் கழட்டிண்டு அவனை அடிக்கப்போய் ஒரே ரகளை ஆயிடுத்துன்னு. அவள் செய்யக்கூடியவள்தான். ஆனா இது கொஞ்சம் கப்ஸா. அடிக்கணும்னு நினைச்சிருப்பாள்…. இப்போ நான் நினைக்கலியா? ஆனா ஒரு பொம்மனாட்டி நினைச்சதையெல்லாம் செய்துட முடியுதா என்ன? பாவம்! நிஜமாகவே அவன் தெரியாமத்தான் சாயறானோ என்னவோ! வயசான ஆளோ என்னவோ!”

ஆணின் வயதும் பாலியல் அத்துமீறலும்

இங்கே, கதை ஆணின் வயதை முன்வைத்து ஒரு சமூக முன்முடிவை நிறுவுகிறது. காலம்காலமாக இருக்கும் அனுமானம் அது. ‘வயதானவர்கள் பாலியல் அத்துமீறலில் ஈடுபட மாட்டார்கள்.’ அத்தகைய அனுமானத்தை அப்படியே ஏற்றிருக்கும் கதாபாத்திரத்துக்குத் தன் மேல் சாய்கிறவன் வயதானவன் அல்ல என்று தெரியவருகிறது. ஆனால், வேறொரு குழப்பமும் இருக்கிறது. வேண்டுமென்றே சாய்கிறானா இல்லை தற்செயலா?

தன் எதிர்ப்பற்ற கையறு நிலையை உணர்ந்தவுடன், அதற்கேற்ப, தான் எண்ணியதைப் பற்றியே சந்தேகம் கொள்கிறாள். வேண்டுமென்றே சாய்கிறான் என்று முதலில் நினைத்தவள் இப்போது வேறுவிதமாக நினைக்கிறாள். கையறு நிலையை மறுக்க, தன் தனிநபர் முகமையை உறுதிப்படுத்திக்கொள்ள, சந்தேகத்தின் பலனைத் துன்புறுத்துபவருக்குக் கொடுத்துவிடப் பார்க்கிறாள்.

கர்னாடக இசை வித்வான் ஓ.எஸ்.தியாகராஜனிடம் சங்கீதம் கற்றுக்கொண்டபோது, அத்துமீறலைச் சந்தித்த ஒரு பெண் பாடகர் சமீபத்தில் கூறியது இது. அப்போது அந்தப் பெண்ணுக்கு 20 வயது:

“என்னால் அழ முடியவில்லை. எதையும் வெளிக்காட்டக் கொள்ள முடியவில்லை. அவர் எல்லோருக்கும் தெரிந்த பெரிய ஆளுமை, என்னால் எதுவும் சொல்ல முடியாது என்று அப்போதே உணர்ந்திருந்தேன். நான் ஏதாவது கூறியிருந்தால் என் குடும்பத்தில் ஒருவரும் என்னை நம்பியிருக்க மாட்டார்கள். என் சொந்தக்காரர் வீட்டுக்குச் சென்றபோது எனக்கு எதுவுமே நடக்கவில்லை என்று என்னை நானே நம்பச் செய்திருந்தேன். இது எல்லாமே நானே உருவாக்கியது, கற்பனை செய்தது என்று முடிவுக்கு வந்திருந்தேன்.”

ஜெயகாந்தனின் நாவலின் இந்தப் பகுதியைப் பாருங்கள்:

”இவன் ஒண்ணும் வயசானவனா இருக்க மாட்டான், நன்னாத் தெரியறது எனக்கு. ஆக்ஸிடெண்டலா சாயறவா ஒண்ணும் கொஞ்சம் கொஞ்சமா ஒட்டி ஒட்டிச் சாயமாட்டா, எனக்கு உடம்பெல்லாம் கூசறது; இன்னிக்கு மழையா இருக்கே, குளிக்க வாண்டாம்னு நினைச்சிருந்தேன். ஆனா, இப்ப வீட்டுக்குப் போனதும் நன்னா ஒரு தடவை குளிக்கணும்.”

குளித்தல் என்னும் அம்சம்

அடுத்த பகுதிக்குச் செல்லும் முன், குளித்தல் என்பதைப் பார்ப்போம். இதை மிகைப்படுத்தல் அல்லது அக்காலப் பெண் மனோநிலை என்று தள்ளிவிட முடியாது. சமீபத்தில் தமிழகக் கவர்னர் புரோகித் சர்ச்சைக்குள்ளான நிகழ்வில் ‘தாத்தா வயதுள்ளவர்’ என வயதை முன்வைத்துக்கூட சாதாரண விஷயம் என்பதுபோல கருத்துரைத்தவர்கள் பலர். அந்த சர்ச்சையில் சம்பந்தப்பட்ட பத்திரிகையாளர் அதன் பிறகு தன் கன்னத்தைக் கழுவினேன் என்றார். ஒரு சுத்திகரித்தலைப் போல, உடலிலிருந்து அப்புறப்படுத்துவதான ஒரு சடங்குச் செய்கை. மனதிலிருந்து அப்புறப்படுத்துவதாகவும் ஆகிற சாத்தியம் உண்டு.

தொடர்ந்து அவள் யோசிக்கிறாள். இவன் ஏன் நம்மேல் சாய்கிறான் என்று.

“எல்லார் மாதிரியும் நான் ஸ்டைல் பண்ணிக்கறதில்லை; இப்படி இருக்கறச்சேயே இதோ வந்து இப்படி சாயறான்; ஸ்டைலும் பண்ணிண்டா குறைச்சலில்லை. எப்படி என்னைப் பார்த்து இவாளுக்கெல்லாம் இப்படி தோன்றதோ?”

தான் தோற்றத்தில் கவனமாகத்தானே இருந்தோம் என்ற யோசனை. பிறகு ஏன் இப்படி என்கிற குழப்பம். பாலியல் அத்துமீறலோ, வன்புணர்வோ நேர்ந்துவிட்டால் பெண் அணிந்திருந்த ஆடையை, அவள் தோற்றத்தைக் காரணமாக்குவதை சாதாரணமாக நாம் கேட்டிருக்கிறோம். இந்தப் பொதுவெளிச் சொல்லாடலை இன்றுவரையிலும் பெண்களும் சுவீகரித்திருப்பதைக் காண்கிறோம்.

உதாரணமாக, சமீபத்தில் #MeToo சர்ச்சை தமிழகத்தில் உருவானபின், திரையிசைப் பாடகர் ரிஹானா முகநூலில் பகிர்ந்த நிலைத்தகவல் இது (11 அக்டோபர் 2018):

“Thankfully in this industry I have not faced even a single mistreatment by the men because I treat them like a brother father son and friend I show my decency in wearing the right clothes n have the right behaviour and conduct . There r still lovely people in the industry as far as I'm concerned.”

“நல்லவேளையாக இந்தத் துறையில் ஒரு முறைகூட ஆண்களின் தவறான நடத்தையை நான் எதிர்கொண்டதில்லை. ஏனென்றால், நான் அவர்களைச் சகோதரனாக, தந்தையாக, அகனாக, நண்பனாக நடத்துகிறேன். சரியான ஆடைகள், சரியான நடத்தை ஆகியவை மூலம் என் கண்ணியத்தை நான் காட்டுகிறேன். என்னைப் பொறுத்தவரை இந்தத் துறையில் இன்னமும் மிகவும் சிறந்த மனிதர்கள் இருக்கிறார்கள்.”

’கண்ணியமான’ உடை அணியவில்லை என்று சொல்லி ஆண் செய்கிற தவற்றுக்குப் பெண்ணைப் பொறுப்பாக்கும் பால் பாகுபாட்டுப் பண்பாடு இது. மேலும் “ஊசி இடம் கொடுக்காவிட்டால்’ என்ற பழமொழி கைவசம் இருக்கவே இருக்கிறதே. இதே பழமொழியை சமீபத்தில் இயக்குநர் பாரதிராஜா, திரைப்படத் துறையினர் மீது ஸ்ரீரெட்டி பாலியல் குற்றச்சாட்டுகளை வைத்தபோது சொன்னது நினைவுக்கு வரலாம்: ”ஊசி இடம் கொடுக்காமல் நூல் எப்படி நுழையும்? ஸ்ரீரெட்டி அனைத்திற்கும் அனுமதி கொடுத்துள்ளார். ஸ்ரீரெட்டியின் சம்மதத்துடன் எல்லாம் நடந்திருக்கிறது.”

அதிகாரமும் பாலியல் பேரமும்

திரைப்படத் துறை உள்ளிட்ட துறைகளில் நிலவும் ஆண்பால் அதிகாரத்தைக் கணக்கிலெடுக்காமல், இந்தப் பால் அதிகாரத்தின் காரணமாகச் சில சமயம் சில பெண்கள் செய்ய வேண்டியிருக்கும் பாலியல் பேரத்துக்கு, பெண் கொடுக்கிற இடம் என்று சுட்டுவிரல் நீள்வது முதலில் பெண் பக்கம்தான். முக்கியமாக, இந்தப் பழமொழியின் பெண் சாடல் கருத்து, பேரம் செய்பவர்கள் / செய்யாதவர்கள் என்ற பேதத்தைத் தாண்டி, பெண் பாலியலை, பால் படிநிலையின் பிரகாரம் முறைப்படுத்தும் வகையில் இயங்குகிறது என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

நாவலுக்கு வருவோம். பிறகு, அந்தப் பெண் கதாபாத்திரத்துக்கு தான் பார்த்த எல்லா ஆண்களுக்கும் தன்னிடம் முறைகேடாக நடந்துகொள்ள நினைப்பதாகத் தோன்றுகிறது. இங்கே தன் அண்ணனையும் இப்படி நடந்துகொள்ளக் கூடியவர்களின் பட்டியலில் அவள் வைக்கிறாள்.

“எல்லா ஆம்பிளைகளுக்கும்… ஒருத்தன்கூட விதிவிலக்கு இல்லை. அப்பாவை நான் பார்த்ததில்லை. அண்ணா? ஆமா, ரொம்ப யோக்கியன்தான். …

இந்த மாதிரி பஸ்ஸில வரும்போது அவனையும் பஸ்ஸில பார்த்திருக்கேன். - இதோ என் மேல சாயறானே அவன் எவ்வளவோ யோக்கியன் - அந்தக் கூடப் பொறந்த அண்ணனோட பார்வை இதைவிட அசிங்கமா இருக்கும். அவன் என்னென்ன நினைச்சுண்டு என்னைப் பார்க்கறானோ?”

ஊறுபடத்தக்க நிலையில் இருக்கும் பெண்ணின் தன்னிலை இந்த வரிகளில் காட்டப்படுகிறது. ஊறு உண்டாக்கக்கூடியவர்களில் சொந்தம் / அந்நியம், வீடு / வெளி என்ற பேதமேயில்லை. இந்தப் பெண்சார்புப் புரிதலைக் கதாபாத்திரத்தில் குரலாக அநாயாசமாகச் எழுதிச் செல்கிறார் ஜெயகாந்தன்.

உடனடியாக அந்தப் பெண் இந்த நினைப்பிலிருந்து நகர்ந்து, தனது அண்ணன் பஸ்ஸில் இப்படி சாய்கிற ஒருவனோடு தன்னைப் பார்த்தால் அதை எப்படி பொருள்கொள்வான் என யோசிக்கிறாள்.

“அப்புறம் இவனுக்கு எங்க ஆபீசிலேயே என்னோடவே வேல குடுத்துடுவான்! பஸ்ஸிலே வரச்சே நேக்கும் சேர்த்து இவன்தான் டிக்கட் வாங்கினானாம்! … எனக்குத் திமிராம்! ‘என்னை எவன் கேக்கறது, நானே படிச்சி நானே உத்யோகம் தேடிண்டு, அவனை விடப் பெரிய பொஸிஷன்ல இருக்கேன்’கிற திமிராம்.”

நேர்ந்த பாலியல் சீண்டலைச் சொன்னால் வீட்டில் யாரும் நம்பப்போவதில்லை. பாடகர் ஓ.எஸ். தியாகராஜன் தொடர்பான அத்துமீறல் அனுபவம் குறித்து இளம் பெண் பாடகர் கூறியதிலும் இதே நம்பிக்கையின்மை எதிரொலிக்கப் பார்த்தோம். வீடு இங்கே பெண்ணுக்கு இடமானாலும் அவளுக்கான புகலிடமாக அது இல்லை. வீடெனும் வெளியில் அவளை முன்னிட்டு அரங்கேறும் குடும்ப நாடகம் (script), அவள் தரப்பை முன்வைப்பது அல்ல. எதிர்ப்பாலியல் (heterosexual) நியதிகளின்படி, ஆணுக்கென வழங்கப்பட்டிருக்கும் பால் அதிகாரத்தின் நாடகப் பிரதி அது. கல்வி, வேலை போன்றவற்றில் ஏதோ ஓரிடத்தில் பெண் மிஞ்சிவிட்டால் அதை அவள் பாலியலை ஒழுங்குபடுத்துதலோடு தொடர்புறுத்தி அந்த இடத்தைக் கேள்விக்குள்ளாக்கக்கூடிய பிரதியாகவும் செயல்படக்கூடியது அது.

மேலே நான் சுட்டிக்காட்டியிருக்கிற நாவலின் பகுதி பாலியல் துன்புறுத்தலின் ஒரு பரிமாணத்தைக் கூறுவதோடு கூடவே அதன் இயல்பாக்கம் (normalization) நடைபெறும் விதத்தையும் கூறுகிறது. பஸ் பயணம் போன்ற அன்றாடச் செயல்பாடுகள் இந்த இயல்பாக்கத்தை நோக்கிய, வலியுறுத்துகிற செயல்பாடுகளாகவும் உள்ளன. ஆண், பெண் என்ற பால் வகை இருமைக் கட்டமைப்பையும், அவற்றின் படிநிலையையும் வலுப்படுத்தும் செயல்பாடுகளும் இவை என்று சொல்லவும் வேண்டுமா?

கட்டுரைத் தரவுகள்:

https://www.thenewsminute.com/article/os-thyagarajan-molested-me-carnatic-singer-s-former-student-speaks-out-89849

https://www.theguardian.com/world/2018/jan/15/me-too-founder-tarana-burke-women-sexual-assault

https://www.bbc.com/tamil/india-43820003

நூல் தரவு:

ஜெயகாந்தன். “சில நேரங்களில் சில மனிதர்கள்.” சென்னை: மீனாட்சி புத்தக நிலையம், 1970.

#MeToo குறித்த பெருந்தேவியின் இதர கட்டுரைகள்:

ஆண்மையச் சமூகக் கொள்ளை நோய்!

காமத்தின் பேரம்!

#MeToo மேட்டுக்குடிப் போராட்டமா?

பாலியல் வன்முறையை எப்படி வரையறுப்பது?

செவ்வாய், 23 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon