மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 31 மே 2020

மீ டூ: மத்திய தகவல் ஆணையம் கண்டிப்பு!

மீ டூ: மத்திய தகவல் ஆணையம் கண்டிப்பு!

பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தலினால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்காத நிறுவனத்துக்கே அவருடைய புகாரை திருப்பி அனுப்பிய தேசிய மகளிர் ஆணையத்தை மத்திய தகவல் ஆணையம் கண்டித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய தகவல் ஆணையத்தின் தலைவர் எம்.ஸ்ரீதர் ஆச்சார்யலு நேற்று முன்தினம் (அக்டோபர் 20) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

சமீபத்தில் தேசிய மகளிர் ஆணையம் பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல்களால் பாதிக்கப்பட்டு மீ டூ இயக்கத்தின் மூலமாக தங்களது குமுறல்களை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் பெண்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்தது. அதில், பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களது புகார்களை தேசிய மகளிர் ஆணையத்துக்கு அனுப்புங்கள். உங்களுக்குச் சாத்தியமான உதவிகள் செய்யப்படும் என்று கூறியிருந்தது. ஆனால், ஆணையத்துக்கு வந்த புகார்களை பாலியல் துன்புறுத்தல்களால் பாதிக்கப்பட்டு நீதி கிடைக்காத நிறுவனங்களுக்கே அது அனுப்பியுள்ளது. இச்செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தேசிய மகளிர் ஆணையம் என்ன தபால் நிலையம் போன்று செயல்படுகிறதா?

தாமோதர் வேலி கார்ப்பரேஷனில் பணிபுரியும் பெண் அந்த நிறுவனத்தில் உள்ள ஊழியர் ஒருவரால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானார். அவருக்கு அந்த நிறுவனத்தில் உரிய நீதி கிடைக்கவில்லை. குற்றவாளியும் அந்த நிறுவனத்தில் சுதந்திரமாக சுற்றி வருகிறார். இதைத் தொடர்ந்து தேசிய மகளிர் ஆணையத்தின் வேண்டுகோளைத் தொடர்ந்து அவர் தனது புகாரை ஆணையத்துக்கு அனுப்பினார். மகளிர் ஆணையம் அவரது புகாரை அதே நிறுவனத்துக்கு அனுப்பியுள்ளது. ஆணையம் அவரது வழக்கை மோசமான முறையில் கையாண்டுள்ளது. இவ்விஷயத்தில் தேசிய மகளிர் ஆணையம் தனது அதிகாரங்களைப் பயன்படுத்தி வழக்கை விசாரித்திருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஞாயிறு, 21 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon