மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 28 ஜன 2020

சிறப்புக் கட்டுரை: பாலியல் வன்முறையை எப்படி வரையறுப்பது?

சிறப்புக் கட்டுரை: பாலியல் வன்முறையை எப்படி வரையறுப்பது?

பெருந்தேவி

வீட்டிலும் வீட்டுக்கு வெளியே பணியிடம் போன்ற இடங்களில் கிசுகிசுவாக மட்டுமே பகிரப்பட்ட பாலியல் துன்புறுத்தல், சீண்டல் போன்றவற்றைப் பொதுவெளியில் விவாதப் பொருளாக மாற்றியதே #MeToo போராட்ட அலையின் இன்றியமையாத பங்களிப்பு. பொதுவெளியில் பலரும் துய்க்கக்கூடிய வகையில் பாலியல் சொல்லாடல்கள் வைக்கப்படுவதால் trauma porn போல அவை கருதப்படக்கூடும். என்றாலுமே, அதிகார வலைப்பின்னல்களில் மையத்திலிருந்து விலகி இருக்கும் பெண்கள் உள்ளிட்டவர்களின் அடைத்து வைக்கப்பட்டிருந்த கோபமும் ஆற்றாமையும் வெளியே வர இது வழிசெய்திருக்கிறது.

ஹார்வே வெய்ன்ஸ்டின், எம்.ஜே.அக்பர் போன்ற அதிகாரம் மிக்க பிரபலங்களை அம்பலப்படுத்தியது என்று மட்டும் இந்தப் போராட்டத்தை உள்வாங்குவது பிரச்சினையானது. உண்மையில் இந்தப் போராட்டம் அன்றாட சமூக வாழ்வின் வரலாற்றை வேறொரு சட்டகத்துக்குள் நம்முன் ஓட்டிக் காட்டுகிறது. இந்தச் சட்டகத்தின் ஊடாகப் பார்க்கும்போது இதுவரைக்கும் இயல்பானது, ஆபத்தற்றது, நகைச்சுவை, விடலைத்தனம் என்று நாம் கடந்துவிட்டிருக்கிற சில பல விவகாரங்களுமேகூட விகாரத்தன்மையோடு இருப்பதைக் காண்கிறோம். அன்றாட வாழ்க்கையில் பால்கள் (Sexes) இடையிலான உறவின் இயக்கத்தையே மாற்றிப்போடக்கூடியது இந்தச் சட்டகம்.

அம்பலப்பட்ட பல வித அபாயங்கள்

அன்றாடச் சமூக வாழ்வின் வரலாறு, சாதாரண மனிதர்கள் அன்றாடம் புழங்கும் வெளிகளின் பால்மயப்பட்ட வரலாறும்கூட. திரையுலகம், ஆங்கிலப் பத்திரிகை அலுவலகம் போன்றவை ஊடகத்தில் அதிகம் விவாதத்துக்குள்ளானாலும், வெளிவந்திருக்கும் பலரது தற்சொல்லாடல்களில் வீடுகள், வகுப்பறைகள், இசை, நாட்டிய வகுப்புகள் போன்றவை, பேருந்து போன்ற வாகனங்கள், சாலைகள் போன்ற வெளிகளில் மறைந்திருக்கும் அபாயங்கள் அம்பலப்படுத்தப்பட்டிருக்கின்றன. நண்பர்களின், காதலர்களின் அணுக்கமான உரையாடல்களில் பாலியல் துன்புறுத்தல் இப்போது ஒரு பேசுபொருளாகியிருக்கிறது.

இங்கே பாலியல் துன்புறுத்தல் என்பது எது என்ற கேள்வி முக்கியத்துவம் கொள்கிறது. பாலியல் விவகாரங்களில் Comfort என்ற வகையில் உணராத எல்லாமே பாலியல் துன்புறுத்தல் என்ற லேபிளின் அடியின் வருவதல்ல. பெண்கள் எல்லோருமே இவற்றை அத்துமீறல் என்று வரையறுப்பதுமில்லை. அதே நேரத்தில், ஏற்றுக்கொள்ளத்தக்க நடவடிக்கைகள் / பாலியல் துன்புறுத்தல் என்ற இரண்டை வேறுபடுத்தும் கோடு கொஞ்சம் கொஞ்சமாக பொதுவெளிச் சொல்லாடலில் அழுத்தம்பெற ஆரம்பித்திருக்கிறது.

வகைப்படுத்துவதில் உள்ள சிக்கல்கள்

நம் சூழலில் பெண் கற்பு என்று புனிதம் பெற்றிருப்பதை அடியோடு குலைப்பதாகக் கருதப்படும் வன்புணர்வுகூடச் சில நாட்களுக்கு மேல் பொதுமக்களின் கவனத்திலிருந்தும் அக்கறையிலிருந்தும் நீங்கிவிடுகிறது. சில நாட்களுக்குக் கிடைக்கும் அக்கறையிலும் கவனத்திலும்கூட பாதிக்கப்பட்டவரது மத, சாதிய, வர்க்க இடம் பொறுத்து பாகுபாடு நிலவுகிற சூழல் நமது. இந்த நிலையில் வன்புணர்வு என்று வகைப்படுத்த முடியாத, அதே நேரத்தில் பாதிப்பு தரக்கூடிய இதர செயல்களைப் ‘பாலியல் துன்புறுத்தல்’ என்ற வகைமைக்குள் எப்படிக் கொண்டுவருவது? ஏனெனில், ஒரு தளத்தில் இந்த வகைமை, இந்தச் செயலைச் செய்பவரின் நோக்கம், இலக்காகும் நபர் இதை உணர்கிற விதம், செயலின் தீவிரத்தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் உள்ளது. எனவே, இந்தக் காரணிகளால் சூழல், நபர் சார்ந்து அமைவது. இன்னொரு தளத்தில், ஒரு செயலுக்கு அர்த்தம் தரப்படுகிற விதம். இந்த அர்த்தம் காலத்துக்குக் காலம், இடத்துக்கு இடம் மாறும் பண்பாட்டு மதிப்பீடுகளால் மாறிக்கொண்டே வருவதாக உள்ளது. பாலியல் துன்புறுத்தல் என்பதை வரையறுப்பதன் சிக்கல்களை இவை காட்டித் தருகின்றன.

நோக்கம், செயலின் தன்மை, இலக்காகுபவரின் உணர்வு போன்றவை மட்டுமின்றி, சம்பந்தப்பட்ட நபரிடம் நாம் கொண்டிருக்கும் நெருக்கமும் இவ்விஷயத்தில் பங்களிக்கிறது. நாம் நெருங்கிப் பழகும் ஒருவரிடம் சந்திக்க நேர்வதை துன்புறுத்தல், அத்துமீறல், சீண்டல் என்ற வகைமைகளுக்குள் கொண்டு வருவதென்பது பெரும்பாலான பெண்களுக்கு இன்னமும் சவாலாகவே உள்ளது. கூடவே, பாலியல் துன்புறுத்தல் என்ற வகைமையைக் குறித்தே பரிச்சயமின்மை, உரையாடல் போதாமை இவற்றையும் இங்கே குறிப்பிட வேண்டும்.

யாருடைய உணர்வு முக்கியம்?

பொதுவாக, ஒரு செயல் பாலியல் துன்புறுத்தலா, இல்லையா என வகைப்படுத்த முடியாத, குழப்பத் தருணங்களில் ஒரு சொல்லோ, செய்கையோ யாரை இலக்காகக்கொள்கிறதோ, அவர் தருகிற அர்த்தத்துக்கே முதன்மையான இடமுண்டு எனக் கருதுகிறேன். ’Me Too’வை களப் பணிக் குழுவாகத் தொடங்கிவைத்த சிவில் உரிமைப் போராளியான தாரனா பர்க், ஒரு செயல் சின்னப் பிறழ்வா, அல்லது அதைத் தாண்டியதா என்று வகைமைப்படுத்துவது பற்றிக் கூறும்போது, “குழப்பமான தருணம் என்று ஒன்றிருந்தது, ஒருவேளை இப்போதும்கூட இருக்கலாம். இப்படிக் கேட்பவர்கள் உண்டு: ’இந்த ஆள் ஒரு தரம் என் மார்பைத் தொட்டான். இதை #MeToo என்று நான் சொல்லலாமா?’ அவர்களிடம் நான் கூறும் பதில்: ‘உங்கள் உடல் இதற்கெல்லாம் எப்படி எதிர்வினை செய்கிறது என்று என்னால் வரையறை செய்ய முடியாது. அது trauma இல்லை என்று என்னால் சொல்ல முடியாது.’

தவிர, பாலியல் துன்புறுத்தல் பற்றிய பரிச்சயமின்மை குறித்து ஓர் அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார் பர்க். அலபாமாவில் பள்ளி மாணவிகளுக்கு நடத்திய #MeToo பட்டறையில் இது நடந்திருக்கிறது. பட்டறைக்கு வந்த பின்பு அவர்கள் தெரிந்துகொண்ட மூன்று விஷயங்களை எழுதி, அவர்களுக்கு உதவி தேவைப்படுமானால் #MeToo என எழுதித்தரக் கேட்டிருக்கிறார். ஐந்தாறு மாணவிகள் எழுதித்தருவார்கள் என எதிர்பார்த்திருக்கிறார். ஆனால் இருபது மாணவிகள் உதவி கேட்டிருக்கிறார்கள். அதாவது அவர்களுக்குத் தாங்கள் சந்தித்தது பாலியல் துன்புறுத்தல் என்று அப்போதுதான் புரிந்திருக்கிறது.

MeToo சொல்லாடல்கள் வலுப்பெற்றுவரும் தமிழகச் சூழலில், பாலியல் துன்புறுத்தல் குறித்த பெண் பார்வையை அணுகுதல் அவசியமாகிறது. இலக்கியத்தைப் பொறுத்தவரை இதை வாசகர்கள் முன் காட்டித்தந்த எழுத்து என ஜெயகாந்தனின் சில ஆக்கங்களைக் கூறலாம். உடனடியாக நினைவுக்கு வருவது, ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ நாவல் (1974). ‘அக்கினிப் பிரவேசம்’ சிறுகதையை மூலமாகக் கொண்டது இது. இந்த நாவலின் சில பகுதிகளை வைத்து தற்போது நாம் வாசிக்கும், கேட்கும் சமகாலத்தியப் பெண் குரல்களை அணுகிப் பார்க்கலாம்.

(இக்கட்டுரையின் தொடர்ச்சி நாளை...)

#MeToo குறித்த பெருந்தேவியின் இதர கட்டுரைகள்:

ஆண்மையச் சமூகக் கொள்ளை நோய்!

காமத்தின் பேரம்!

#MeToo மேட்டுக்குடிப் போராட்டமா?

ஞாயிறு, 21 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon