மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 31 மே 2020

வெற்றியுடன் கணக்கை தொடங்கிய இந்தியா!

வெற்றியுடன் கணக்கை தொடங்கிய இந்தியா!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வெற்றியுடன் கணக்கை தொடங்கியுள்ளது.

இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் வந்துள்ள மேற்கிந்திய தீவுகள் அணி 2 டெஸ்ட், 5 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று வருகிறது. முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை இந்தியா 2-0 என்று கைப்பற்றி அசத்தியது. இந்த நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டி கவுஹாத்தியில் நேற்று (அக்டோபர் 21) நடைபெற்றது. சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இந்திய அணிக்குத் திரும்பிய கேப்டன் விராட் கோலி, இந்தப் போட்டியில் அவரது வழக்கமான சுழற்பந்துவீச்சு கூட்டணியில் இருக்கும் குல்தீப் யாதவுக்குப் பதிலாக ரவீந்திர ஜடேஜாவை இணைத்து ஆச்சரியமளித்தார்.

டாஸ் வென்ற கோலி, பந்துவீச்சைத் தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 322 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஷிம்ரன் ஹெட்மயர் 106 ரன்கள் சேர்த்தார். இந்தியாவின் பந்துவீச்சில் யுஜ்வேந்திர சஹல் 3 விக்கெட்டுகளையும் முகமது ஷமி, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

சவாலான இலக்கைத் துரத்திய இந்திய அணிக்குச் சிறப்பான தொடக்கம் அமையவில்லை. 4 ரன்கள் எடுத்து ஷிகர் தவன் இரண்டாவது ஓவரிலேயே வெளியேறி ஏமாற்றமளித்தார். பின்னர் வந்த கேப்டன் விராட் கோலி தொடக்க வீரர் ரோஹித் சர்மாவுடன் இணைந்து ரன் குவிப்பில் ஈடுபட்டார். சிறப்பாக ஆடிய இருவரும் சதம் கடந்தனர். இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 256 ரன்கள் சேர்த்த நிலையில் 140 ரன்கள் எடுத்து விராட் கோலி ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து வந்த அம்பத்தி ராயுடு, ரோஹித் சர்மாவுடன் இணைந்தார். இந்த ஜோடி கடைசி வரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றது.

இந்தியா 42.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து வெற்றி இலக்கை எட்டியது. ரோஹித் சர்மா 152 ரன்களுடனும், ராயுடு 22 ரன்களுடனும் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். விராட் கோலி ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவ்விரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி அக்டோபர் 24ஆம் தேதியன்று விசாகபட்டினத்தில் நடைபெறவுள்ளது.

கோலியின் ஸ்பெஷல் சதம்

நேற்று தனது 204ஆவது ஒருநாள் இன்னிங்ஸில் விளையாடிய விராட் கோலி, அவரது 36ஆவது சதத்தைப் பூர்த்தி செய்தார். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளை சேர்த்து இது அவரது 60ஆவது சதமாகவும் பதிவானது. இந்தப் பட்டியலில் 100 சதங்களுடன் சச்சின் டெண்டுல்கர் முதல் இடத்தில் உள்ளார். ஒருநாள் அரங்கில் சச்சின், அவரது 36ஆவது சதத்தை கடக்க அவருக்கு 311 இன்னிங்ஸ் தேவைப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சச்சினை முந்திய ரோஹித்

ஒருநாள் கிரிக்கெட்டில் அதிகமுறை 150 ரன்களைக் கடந்தவர் என்ற வரிசையில் சச்சினை (5 முறை) பின்னுக்குத் தள்ளி ரோஹித் சர்மா (6 முறை) முதலிடம் பிடித்துள்ளார்.

மோசமான பந்துவீச்சாளர்

இந்தப் போட்டியில் அறிமுகமான மேற்கிந்தியத் தீவுகள் அணியைச் சேர்ந்த ஒஸானே தாமஸ் 9 ஓவர்கள் பந்து வீசி 83 ரன்களை வாரி வழங்கினார். இதன்மூலம் மேற்கிந்திய தீவுகள் அணியில் அறிமுகப் போட்டியில் அதிக ரன்கள் விட்டுக்கொடுத்த மோசமான பந்துவீச்சாளர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

ஞாயிறு, 21 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon