மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 21 செப் 2020

நமக்குள் ஒருத்தி: பாராட்டுவதில் ஏன் கஞ்சத்தனம்?

நமக்குள் ஒருத்தி: பாராட்டுவதில் ஏன் கஞ்சத்தனம்?

நவீனா

தென்னிந்தியாவிலிருந்து தோராயமாக கிமு 2717இல் ஆஸ்திரேலியாவுக்குப் புலம்பெயர்ந்த குடும்பங்கள் சந்திக்கும் உளவியல் மற்றும் சமூகப் பிரச்சினைகளை, அவர்களில் ஒருவரான ஆஸ்திரேலியப் பூர்வகுடி எழுத்தாளர் ஷேலி மார்கன் (Sally Morgan) தனது 'மை பிளேஸ்' (My Place) என்ற சுயசரிதையில் விவரிக்கிறார்.

அதில் 'எ பிளாக் கிராண்ட்மதர்' (A Black Grandmother) என்கிற அத்தியாயத்தில் தலைமுறை இடைவெளிகளால் பெண்களுக்கு இடையில் நிகழும் உளவியல் முரண்பாடுகளையும், பிரச்சினைகளையும் விளக்குகிறார். தகப்பன் இல்லாத பதினைந்து வயதுப் பெண்ணான ஷேலி தனது தாயாலும் தாயின் அன்னை, அதாவது பாட்டியாலும் வளர்க்கப்படுகிறார்.

ஷேலிக்குப் படிப்பில் நாட்டமே இல்லை. அவளுக்கு வரையும் கலையில்தான் ஈடுபாடு. பதின்ம வயது வரை அவளது சித்திரங்கள் மேல் ஆர்வம் காட்டிவந்த அவளது பாட்டி திடீரென முரண்பாடான குணத்தை அவளிடம் காட்ட ஆரம்பிக்கிறார். அதுவரையில் ஷேலியை விளையாட்டுப் பிள்ளையாகப் பார்த்துவந்த அவளின் பாட்டி, திடீரெனக் காட்டும் கண்டிப்புகள் அவளுக்கு ஒரு வித வெறுப்பை உண்டாக்குகின்றன.

பாட்டியோ வேறு விதமாக யோசிக்கிறார். ஷேலியை அதுவரை தகப்பன் நிலையிலிருந்து பார்த்துவந்த பாட்டி, அவள் பதின்ம வயதை எட்டியதும், கூடுதல் கண்டிப்பு தேவை என நினைத்து ஒரு தலைமுறை பின்னோக்கிச் சென்று பாட்டி என்கிற தனது கதாபாத்திரத்தை ஏற்று நடக்க ஆரம்பிக்கிறார். அவளின் விளையாட்டான செயல்களையும் கண்டிக்க ஆரம்பிக்கிறார்.

பாட்டியின் இந்த நடவடிக்கையால் உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்ட ஷேலி தனது பள்ளித் தேர்வுகள் அனைத்திலும் தோல்வி அடைந்து தனது வெறுப்பைக் குடும்பத்திற்குத் தெரியப்படுத்துகிறாள். அவளது தாய் அதற்குக் காரணம் கேட்கும்போது, 'எனக்குப் படம் வரைய தான் புடிச்சிருக்கு, ஸ்கூலுக்குப் போகப் புடிக்கல' என்று பதில் கூறுகிறாள். அதற்கு அவளின் பாட்டி, ஓவியர்கள், எழுத்தாளர்கள் எல்லாம் இறப்புக்குப் பின்னால் மட்டுமே கொண்டாடப்படுவார்கள் என்றும், ஓவியரானால் ஷேலி சாப்பாட்டுக்குக்கூடக் கஷ்டப்பட வேண்டிய நிலை வந்துவிடும் என்றும் எடுத்துக் கூறுவார்.

தன்னையும் தன் திறமையையும் ஏற்றுக்கொள்ளவும் புரிந்துகொள்ளவும் யாரும் தயாராக இல்லை என்கிற விரக்தியில் தனது ஓவியங்கள் அனைத்தையும் எரித்துவிடுவாள்.

மேற்கூறிய நிகழ்வு ஷேலியின் வாழ்வில் நிகழ்ந்த உண்மைச் சம்பவம். ஆனால், பின்னாளில் ஷேலியின் 'அவுட் பிரேக்' (Out Break) என்னும் ஓவியம், அகில உலகக் கலை மற்றும் வரலாற்று ஆய்வுக் கழகத்தினால், மனித உரிமைகளுக்குக் குரல் கொடுக்கும் சிறந்த முப்பது ஓவியங்களுக்குள் ஒன்றாகத் தேர்வு செய்யப்பட்டு, தபால்தலையில் இடம் பெற்றது.

ஷேலி சித்திரம் வரைவதில் கைதேர்ந்தவர் என்பது இந்த நிகழ்வில் இருந்து புலப்படுகிறது. ஆனால், அவளுடைய ஆர்வம் சிறு வயதில் அங்கீகரிக்கப்படவோ, பாராட்டப்படவோ இல்லை. பெண்கள் தங்கள் திறமைகளை எது வரையில் வெளிக்காட்ட இந்தச் சமூகம் அனுமதிக்கிறது என்பதே அவர் எழுப்பும் கேள்வி.

பதின்ம வயது வரை தோழியைப் போல் நடந்துகொள்ளும் தாயோ, பாட்டியோ இவள் தனது பருவத்தை எட்டியதும், இலகுவான போக்கைக் காட்டுவதில்லை. அதன் பின்னணியில் பல சமூகக் காரணங்களும், உடல் ரீதியான மாற்றங்களும் இருந்தாலும், ஒரு பெண் தனது பருவத்தை எட்டும்போது, மனதளவில் அதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்போ அல்லது ஓரிரு தினங்களுக்கு முன்போ இருந்த குழந்தையாகத்தான் இருக்கிறாள். அவளது உடலில் ஏற்படும் முதிர்ச்சி உடனடியாக அவள் மனதிலும் பிரதிபலிக்க வேண்டும் என்று சமூகம் எதிர்பார்க்கிறது.

பருவம் அடையும்போது உடலில் நிகழும் மாற்றங்கள் குறித்து ஏற்கெனவே ஒருவித பயம் பெண்ணைத் தொற்றிக்கொள்ளும். அதிலிருந்தே அவள் வெளிவராத நிலையில், அவளுக்குச் சமூகத்தால் விதிக்கப்படும் புதுப்புதுக் கட்டுப்பாடுகள் மென்மேலும் சலிப்பையே ஏற்படுத்தும். அவள் மனதளவில் முதிர்ச்சி அடைய எடுத்துக்கொள்ளும் கால இடைவெளியில், இவ்வகையான அவளின் விருப்பங்களும் திறமைகளும் அவளின் வயதையும் பருவத்தையும் காரணம் காட்டி நசுக்கப்படுகின்றன. தன் திறமைக்கான அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்கிற எண்ணம் அவள் மனதில் வேரூன்ற ஆரம்பித்துவிடுகிறது.

பாராட்டுகளுக்கு எளிதில் மயங்கிவிடுவார்கள் என்று பெண்கள் மீது பொதுவில் ஒரு குற்றச்சாட்டு இருக்கிறது. மேற்கூறியது போன்ற நிகழ்வும் அதற்கு ஒரு வகையில் காரணமாக இருக்கலாம். குடும்பக் கட்டமைப்பில் அவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்காதபட்சத்தில் மட்டுமே பிறரின் பாராட்டுகள் அவர்களுக்குப் பெரிதாகத் தெரியும். ஏனெனில், ஆண்களுக்குச் சமூகவெளியை மையமாக இருப்பது போல் பெண்களுக்கு இயற்கையில் அது அமைந்துவிடவில்லை. பெண்களின் சிறு உலகம், குடும்பம் என்னும் சிறு புள்ளியிலிருந்துதான் தொடங்குகிறது. ஆகவே, அவர்களின் சிறு முயற்சிகளைக்கூட மனதாரப் பாராட்டலாமே!

இன்னும் பறக்கலாம்!

(தொடரின் அடுத்த பகுதி வரும் வெள்ளியன்று வெளியாகும் - ஆசிரியர்)

(கட்டுரையாளர் நவீனா, ஆங்கிலப் பேராசிரியர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர், எழுத்தாளர். சமூகப் பிரச்சினைகள், பெண்ணியம், இலக்கியம் சார்ந்த படைப்புகளை எழுதிவருகிறார். இவரைத் தொடர்புகொள்ள: [email protected])

தொடரின் முதல் பகுதி

பகுதி 2

பகுதி 3

பகுதி 4

பகுதி 5

பகுதி 6

பகுதி 7

பகுதி 8

பகுதி 9

பகுதி 10

பகுதி 11

திங்கள், 22 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon