மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 7 ஜூலை 2020

சிறப்புக் கட்டுரை: #MeToo மேட்டுக்குடிப் போராட்டமா?

சிறப்புக் கட்டுரை: #MeToo மேட்டுக்குடிப் போராட்டமா?

பெருந்தேவி

MeToo போராட்டம் இயங்கும் விதத்தை அறியாதவர்கள் முன்வைக்கிற ஒரு விமர்சனம், இது மேட்டுக்குடிகளுக்கான போராட்டம் என்பது. மேட்டுக்குடி என்பது இனம், வர்க்கம், நம் சூழலில் சாதி மற்றும் மொழி. இப்படிப் பல அலகுகளையும் பொறுத்துக் கூறப்படுவது. தமிழ்ச் சூழலில் இணையத்தில் ட்விட்டரில் இந்த ஹேஷ்டாக் பயன்பாடு திரையுலகம் சார்ந்தும், ஆங்கில ஊடகம் சார்ந்தும் இயங்குபவர்களால் ஆங்கில வெளிப்பாடுகள் மூலம் பரவலாக்கப்பட்டதால் இவ்விமர்சனம் புரிந்துகொள்ளத்தக்கதே. அதே நேரத்தில் இந்தப் போராட்டத்தின் தொடக்கங்கள் இனத்தால் அல்லது சாதியால் ஒடுக்கப்பட்ட பெண்களிடமிருந்தே வந்திருக்கின்றன என்பது நினைவுகூரத்தக்கது.

மேற்கிலும் இந்தப் போராட்டத்தின் போதாமையென “lack of intersectionality,” அதாவது பால் அடையாளம் தவிர இதர ’குறுக்கு வெட்டு’ அடையாளங்களுக்கு இந்தப் போராட்டத்தில் இடமில்லை எனச் சொல்லப்பட்டது. ஆப்பிரிக்க-அமெரிக்கர்கள், queer போன்ற ஒடுக்கப்பட்டவர்களுக்குப் போதுமான அளவு பிரதிநிதித்துவமில்லை என்ற விமர்சனம் வைக்கப்பட்டது.

இரண்டாம் அலையில் அலிசா மிலனோ போன்ற ஹாலிவுட் பெண் நடிகர்கள் முன்னெடுத்ததால் இந்த விமர்சனம் என்றாலும், இந்த இயக்கம் அவர்களோடு நிற்கவில்லை, இதை அமைப்பு சார்ந்த, அமைப்புசாராத தொழிலாளர்கள் தங்களுக்கானதாக மாற்றிக்கொண்டு வருகிறார்கள். ட்விட்டர் ஹேஷ்டேக் என்பதிலிருந்து நகர்ந்து பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான கோஷமாக “MeToo“ மாறியிருக்கிறது என்பதுதான் நிதர்சனம்.

அமெரிக்காவில் நான் வசிக்கும் ஆல்பனியில் என் கல்லூரியின் பணியாற்றுபவர்களோடான உரையாடல்களிலிருந்து நான் தெரிந்துகொண்டது: ஹார்வே வெய்ன்ஸ்டினுக்கு எதிராகத் தொடங்கிய போராட்டத்துக்குப் பிறகு, பாலியல் துன்புறுத்தல் என்பது கல்லூரி வகுப்பறைகளிலும் மாணவர் மத்தியிலும் நடுத்தர வர்க்கக் குடும்பத்தினர் இரவு உணவு உண்ணும்போது விவாதிக்கக்கூடிய விஷயமாகவும் கவனத்துக்கு வந்திருக்கிறது. அனைவருக்குமே தெரிந்த, ஆனால் மூடுமந்திரமாக இருந்த ஒரு கொள்ளை நோய் வெளியே வந்திருக்கிறது. #MeToo என்பது பாலியல் துன்புறுத்தல் என்கிற சமூக அவலத்தின் திரை விலகல் நிகழ்வு. எனவே மானுட சமுதாய, பெண்ணிய வரலாற்றில் ஒரு முக்கியத் தருணம்.

இங்கே நான் சுட்டிக்காட்ட நினைப்பது, சமீபத்தில் அமெரிக்காவில் ஓட்டல்களில் பணியாற்றும் பெண் பணியாளர்கள் தங்களுக்கானதாக இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தது. ஓட்டல்களில் தங்கவரும் வாடிக்கையாளர்களால் (சமயத்தில், சக பணியாளர்களால்) பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதை அவர்கள் முன்வந்து தெரிவித்திருக்கிறார்கள். வெய்ன்ஸ்டினுக்கு எதிரான போராட்டம் தொடங்கிய பின்னரே பல காலமாக நடந்துகொண்டிருந்தவை எல்லாம் பொதுவெளிக்கு வந்திருக்கின்றன. ஓட்டல்களில் வந்து தங்கும் அரசியல்வாதிகள், திரைப்படத் தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட பெரும்புள்ளிகளால் பல்வேறு பாலியல் துன்புறுத்தல்களுக்கு (மசாஜ் செய்ய வலியுறுத்தல், முறைகேடாகத் தொடுதல் உள்ளிட்டவை) உள்ளானதை சமீபத்தில் பணியாளர்கள் பொதுவெளியில் தெரிவித்திருக்கிறார்கள்.

சிகாகோவில் நடத்தப்பட்ட ஒரு கணிப்பில் 58 சதவிகிதப் பணியாளர்கள் தங்களிடம் விருந்தினர்கள் பாலியல் அத்துமீறல் செய்ததைக் குறிப்பிட்டிருக்கிறார்கள். அக்டோபர் 2017இல் சிகாகோ நகரத்தில் பணியாற்றும் ஓட்டல் பணியாளர்களுக்கு ‘panic buttons’ தரப்பட்டிருக்கின்றன. இவற்றின் மூலம் ஒருவேளை விருந்தினரோ, சக பணியாளரோ முறைகேடாக நடந்துகொள்ளும்போது ஓட்டல் பாதுகாவலர்களை அவர்கள் உதவிக்கு அழைக்க முடியும். நியூயார்க்கில் யூனியன் உறுப்பினர்களான ஓட்டல் பணியாளர்களுக்கும் இவை வழங்கப்பட்டிருக்கின்றன.

அதேபோல, கலிபோர்னியா உள்ளிட்ட மாகாணத்தில் ஓட்டல் பணியாளர்கள் அனைவருக்கும் panic buttons தருவதற்கும், முறைகேடாக நடந்ததாகக் குற்றம்சாட்டப்படும் விருந்தினரை மூன்று வருடம் தடை செய்வதற்கும் வகைசெய்ய சட்ட விதி முன்மொழியப்பட்டிருக்கிறது. ஓட்டல் பணியாளர்களின் தொழிற்சங்கமான “Unite Here,” பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக ஓட்டல் பணியாளர்கள் முன்வந்து தாங்கள் எதிர்கொண்டதை வெளிப்படுத்தியதே அரசின் கொள்கை மாறுதல்களுக்குக் காரணம் எனக் கூறுகிறது. டைம் பத்திரிகையின் 2017ஆம் ஆண்டுக்கான “மௌனத்தை உடைப்பவர்கள்” விருது இத்தகைய ஓட்டல் பணியாளர்களுக்குக் கிடைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தனிநபரின் அடையாளம் எனும் சிக்கல்

இந்தியாவைப் பொறுத்தவரை, சென்ற ஆண்டு ரயா சர்க்காரின் “பட்டியலில்” இடம்பெற்ற கல்வியாளர்களிடம் பயின்று பாலியல் அத்துமீறலைச் சந்தித்தவர்களெல்லாம் ’உயர்’ சாதியினரா, மேட்டுக்குடியினரா என்று நாம் ஒருகணம் யோசித்துப் பார்க்க வேண்டும். இப்போது பரபரப்பாக இருக்கும் #MeToo அலையில் தாங்கள் எதிர்கொண்ட மோசமான பாலியல் துன்புறுத்தல்களைக் கூறுபவர்கள் எல்லோரையும் ‘மேட்டுக்குடி’ அல்லது ‘உயர்’சாதி என்று அடைப்புக்குறிகளுக்குள் அடைக்க முடியுமா என்று கேட்க வேண்டியிருக்கிறது.

எடுத்துக்காட்டாக, தற்போது இந்தப் போராட்டத்தால் அமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய வைக்கப்பட்ட எம்.ஜே.அக்பர் தந்த பாலியல் துன்புறுத்தலைப் பதிவு செய்திருக்கும் பத்திரிகையாளர் கஸலா வஹாப், இத்தகைய ஒரு நிகழ்வுக்குப் பின்னான தன் மனநிலையை விளக்குகிறார்: “என் மொத்த வாழ்க்கையே என் கண் முன்னால் தெரிந்தது. என் குடும்பத்திலிருந்து சிறு நகரம் ஆக்ராவிலிருந்து டெல்லிக்குப் படிப்பதற்கும் வேலை செய்வதற்கும் வந்த முதல் ஆள் நாள். இங்கே வருவதற்காக மூன்று வருடங்கள் வீட்டில் குடும்பத்தில் பலநேரங்களில் போராடியிருக்கிறேன். என் குடும்பத்திலிருந்து வீட்டிலிருந்து வெளியே வேலைக்கு வந்தவர்கள் யாருமில்லை. வியாபாரக் குடும்பங்களில் மணம்முடித்து அந்த ஊரிலேயே வாழ்பவர்கள்தான் உண்டு. …என் தந்தையின் காசு வேண்டாமென்று மறுத்தேன். சுயமாக வாழ நினைத்தேன். வெற்றிகரமான, மரியாதைமிக்க பத்திரிகையாளராக. இதையெல்லாம் அப்படியே விட்டுவிட்டு தோற்றுப்போய் ஊருக்குச் செல்ல விரும்பவில்லை.”

இந்தத் தற்குறிப்பின் பின்னணியை கவனமெடுத்து வாசிக்கும்போது, இன்றைய சூழலில் தனிநபரின் அடையாளம் என்பது எவ்வளவு சிக்கலானது என்று புரியும். கஸலா உயர் நடுத்தர வர்க்கப் பத்திரிகையாளர். ஆனால் அவர் குடும்பப் பின்னணியைப் பார்க்கும்போது ஒடுக்கப்பட்ட பெண் ஒருவரின் பின்னணி. நகரத்தில் வேலை செய்கிறார். ஆனால் அங்கே வந்து சேரப் போராடியிருக்கிறார். ஆங்கிலப் பத்திரிகையாளர், ஆங்கிலத்தில் தன் பாலியல் பிரச்சினையைப் பேசுகிறார் என்பதற்காக அவரை மேட்டிமை அடையாளத்தில் வைக்கமுடியுமா? அல்லது, அவர் அனுபவித்த பாலியல் துன்புறுத்தலை இதனால் புறந்தள்ளிவிட முடியுமா?

மேலும், எந்த ஒரு பெண்ணுமே இன்றைக்குக் கல்வி கற்கிறார், வெளியே வேலைக்கு வருகிறார் என்றால் அது ‘உயர்’சாதி ஆணுக்குரியதைப் போல இயல்பாக, காலம்காலமாக நடப்பதல்ல. சமூகத்தில் சாதி ஒடுக்குமுறையைப் போலவே பால் ஒடுக்குமுறையும் பொருண்மையானது. ஒவ்வொரு சாதியிலும், குடும்பத்திலும் சமீபகாலம் வரை பெண்கள் இதற்காகப் போராடியிருக்கிறார்கள். வரலாற்றுச் சூழல்களை மனதில்கொள்வது அவசியம்.

பாலியல் துன்புறுத்தல் என்பது ஒன்றுபோல் நடப்பதில்லை. குடும்பத்தில் தொடங்கிப் பயணம், பணியிடம், சமூக வலைதளம் வரை வெவ்வேறு வகைகளில் நடக்கக்கூடியது அது. ஒடுக்கப்பட்ட பட்டியலினப் பெண்கள் அனுபவிக்கக்கூடிய பாலியல் தொல்லைகளின் பரிமாணம் மற்ற சாதிப் பெண்கள் அனுபவிப்பதைக் காட்டிலும் கொடிய முகத்தைக் கொண்டது.

கஸலாவைப் போலவே இன்னோர் உதாரணத்தைத் தருகிறேன். பாடகர் சின்மயி பகிர்ந்த ஒரு ட்வீட்டில், ஓர் இளம் பெண் தன் பதினாறு வயதில், கர்னாடக இசைக் கலைஞர் சசிகிரண் தந்த தொல்லை குறித்து எழுதியதைப் பகிர்ந்திருக்கிறார். அமெரிக்காவில் வாழ்பவர் அவர் என்பதால், அல்லது கர்நாடக சங்கீதமே மேட்டிமைக் கலை என்ற குறுகிய புரிதலால், மேட்டிமை என்று தள்ளிவிடுவோமா, இல்லை இது ஒரு பெண் குழந்தை சந்தித்த தொல்லை என்று பார்ப்போமா?

ஒற்றை அடையாளம் என்னும் சிலுவை

அடையாளம் என்பது முன்னெப்போதையும்விட பல அடுக்குகள், குறுக்குவெட்டுகள் கொண்டதாக மாறிக்கொண்டிருக்கிற காலகட்டம் இது. உலகளாவிய முதலீட்டியம் ஒருபுறம். இன்னொரு புறம், இணையம் வாயிலாக தகவல் தொழில்நுட்பத்தால் இணைக்கப்பட்டிருக்கிற நிலை. இணையத் தொழில்நுட்பம் எல்லோருக்கும் ஒன்றேபோலக் கிட்டவில்லை என்ற யதார்த்த நிலை இதை இன்னும் சிக்கலாக்குகிறது. ஆனால் அந்த ஒரு காரணத்தாலேயே இணையத்துக்கு வந்து பேசுபவர்கள் எல்லோரையும் ஒற்றை அடையாளச் சிலுவையில் அறைந்துவிட முடியாது.

மேலே கூறியவற்றின் அடிப்படையில், சின்மயி, தனுஸ்ரீ தத்தா போன்ற திரைப் பிரபலங்கள் இந்தப் போராட்டத்தில் குதித்திருப்பதால், வேறு பிரச்சினைகளில் அவர்களின் நிலைப்பாடுகள் மேட்டிமைத்தனத்தை அல்லது சாதியத்தைக் காட்டுவதால், இந்தப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்துவது சிறுபிள்ளைத்தனம் என்றே தோன்றுகிறது.

இந்த இடத்தில் #MeTooவைக் களப்பணிக் குழுவாகத் தொடங்கிவைத்த தாரனா புர்கேயின் நிலைப்பாட்டைச் சொல்லியாக வேண்டும். ஹாலிவுட் பெண் நடிகர்கள் இதைச் சமூக வலைதளத்தில் #MeToo ஹேஷ்டாகை முன்னெடுத்தபோது அதை fad என்று இந்த இயக்கத்தை எதிர்த்தவர்கள் புறந்தள்ளியதை அவர் ஏற்கவில்லை. உண்மையை வெளியே பேசினால் மோசமான நிலைக்குத் தள்ளப்படுவோம் என்று தெரிந்தே அவர்கள் பேசுகிறார்கள் என்றுதான் பரிந்து பேசினார். முக்கியமாக, பிரபலங்கள் இதைப் பேசினால் ஒதுக்கிவைப்போம் என்பதாக இல்லை அவரது நிலைப்பாடு. “பிரபலங்களின் ஒளிவட்டச் சிலாகிப்பில் ஒரு சமூகம் இருக்கும்போது, பனிக்கட்டியை (மக்கள் கவனம் கொள்ளாத விஷயங்களுக்கான உருவகம் இது) உடைக்க ஏதோ ஒன்று தேவைப்படுகிறது, எனவே வேறெந்த வகையிலாவது இது நடந்திருக்கலாமே என்றெல்லாம் எரிச்சல்பட எனக்கு நேரமில்லை” என்றார். பாலியல் துன்புறுத்தலை மக்கள் கவனத்துக்கு கொண்டுவந்ததில், நாடு முழுவதும் பேசுபொருளாக ஆக்கியதில் ஹாலிவுட் பிரபலங்களின் பங்களிப்பை அங்கீகரிப்பதாகக் கூறினார். இவ்விஷயத்தில் தானொரு யதார்த்தவாதி என்றும் அறிவித்தார். அலிசா மிலனோவை ally (நண்பர்) என்று அவர் கூறியதை இந்தப் பின்னணியில்தான் புரிந்துகொள்கிறேன்.

இந்தியாவை, தமிழ்நாட்டைப் பொறுத்தவரையிலும்கூட பாலியல் துன்புறுத்தல் இன்று #MeTooவால் பேசுபொருளாகி இருக்கிறது. இதுதான் இன்று கவனத்தில் கொள்ள வேண்டியது. இதிலிருக்கும் பாதிக்கப்பட்டிருக்கும் பல தரப்பினரின் பிரதிநிதித்துவப் போதாமைகளைக் களைய நிச்சயம் முயற்சி எடுக்க வேண்டும். அது நம்முன் இருக்கும் அத்தியாவசியமான பணி.

பாலியல் துன்புறுத்தல் என்பது ஒன்றுபோல் நடப்பதில்லை. குடும்பத்தில் தொடங்கி பயணம், பணியிடம், சமூக வலைதளம் வரை வெவ்வேறு வகைகளில் நடக்கக்கூடியது அது. அமைப்பு சார்ந்த, அமைப்புசாராத பணிகளில் ஈடுபடுபவர்கள், தத்தம் அன்றாட வாழ்க்கையில் எதிர்கொள்ளும் இத்தகைய பிரச்சினைகளை எடுத்துச் சொல்ல, எதிர்ப்பைத் தெரிவிக்க, அவர்களுக்கு இதற்கான தேர்வு இருக்கும் வகையில் உரையாடல் வெளிகள் வேண்டும். அந்த வெளிகள் அவர்களால் அவர்களுக்காகக் கட்டியமைக்கப்பட வேண்டும். வேண்டுமானால் அதற்குச் சிறு துரும்பாகக் களப்பணியாளர்கள், சிந்தனையாளர்கள் உதவலாம். பல தளங்களில் ஒடுக்கப்படுபவர்களுக்கு உதவும் வகையில், அரசின் கொள்கை மாறுதல்களுக்கு, சட்டத் திருத்தங்களுக்கு அவை வழிசெய்யக்கூடும்.

கட்டுரைத் தரவுகள்:

https://thewire.in/media/mj-akbar-sexual-harassment

https://twitter.com/Chinmayi/status/1049641862674300928

https://variety.com/2018/biz/news/tarana-burke-times-up-me-too-backlash-1202748822/

https://aflcio.org/2018/1/26/hotel-workers-say-metoo-and-fight-back

#MeToo குறித்த பெருந்தேவியின் இதர கட்டுரைகள்:

ஆண்மையச் சமூகக் கொள்ளை நோய்!

காமத்தின் பேரம்!

வெள்ளி, 19 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon