மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 12 ஜூலை 2020

சிறப்புப் பத்தி: சுரங்கக் குத்தகை!

சிறப்புப் பத்தி: சுரங்கக் குத்தகை!

முரளி சண்முகவேலன்

லண்டனிலிருந்து முரளி சண்முகவேலன் எழுதும் தொடர்

தாதுக்களைப் பிரித்தெடுப்பது, அரிய உலோகங்களைத் தோண்டி எடுப்பது ஆகியன இயந்திரம் மற்றும் தொழிற் புரட்சியின் விளைவுகள். இது காலனியத்தோடு பின்னிப் பிணைந்திருப்பது பற்றி இத்தொடரின் முன் அத்தியாயங்களில் பார்த்தோம். எனவே, காலனியத்தின் கீழ் அடிமைப்பட்ட நாடுகளில் உள்ள சுரங்கங்களைத் தோண்டி வளம் சுரண்டப்பட்டபோது பிரிட்டன் போன்ற அரசுகள் அடிமை நாடுகளுக்கு எந்த விதமான ராயல்டி கட்டணமும் செலுத்த வேண்டிய அவசியம் இருக்கவில்லை.

சுரங்கக் குத்தகைக்காரர்கள் பிரிட்டன் தொழிலதிபர்கள். ‘அவர்களின்’ கச்சா உற்பத்தி பிரிட்டனின் உள்ளூர் தொழிற் புரட்சிக்கு உதவியாக, அதாவது ஒரு வகையில் தொழில் மானியமாகவும் திகழ்ந்துவந்தது. ஜாம்பியாவிலிருந்து பிரித்து எடுக்கப்பட்ட செம்பு பிரிட்டனில் உள்ள தொழிற்சாலைகளுக்கு மிகச் சொற்ப விலையில் கிடைக்கும் பட்சத்தில் ஏன் அந்த உற்பத்தியை நிறுத்த வேண்டும்? அதே சமயத்தில் ஜாம்பியாவில் உள்ள வெள்ளை அதிகாரத்தின் செலவினத்தையும் பிரிட்டன் சமாளித்தாக வேண்டும். இதற்கு ஒரு வழியை பிரிட்டன் மற்றும் இதர மேற்கத்திய காலனிய அதிகாரங்கள் ஒரு வழியைக் கண்டுபிடித்தன. அதுதான் ரெண்ட் சீக்கிங் (rent seeking) எனப்படும் சுரங்கக் குத்தகை. ஆக, சுரங்கக் குத்தகை அல்லது நவீன rent seeking என்னும் பொருளாதாரப் பண்பு ஒரு காலனியக் கருத்தியல். எப்படி என்று பார்க்கலாம்.

வெறும் கூலியாக மாற்றப்பட்ட குத்தகை

குத்தகை என்பது ஒரு நிலத்தின் பயன்பாட்டின் தன்மையைப் பொறுத்து வேறுபடும். உதாரணமாக மூன்று போகம் விளையும் நிலத்திற்கான குத்தகைத் தொகை இரண்டு போகம் விளையும் நிலத்திற்கான குத்தகைத் தொகையைவிட அதிகமாக இருக்கும். இதை அறியப் பெரிதாகப் பொருளாதார அறிவு தேவை இல்லை. ஆனால், சுரங்கக் குத்தகைத் தொகையை இவ்வாறாக நிர்ணயிப்பது கிடையாது. காலனியச் சட்டத்தின்படி, சுரங்கக் குத்தகை என்பது சுரங்க முதலாளிகள் (காலனிய) அரசுக்குச் செய்யும் சேவையின் பலனாக விளையும் லாபத்தில் ஒரு விகிதாச்சாரத்தை அளிப்பதாகும் (“a percentage of profit gained from a service rendered to the state”).

அதாவது, பிரிட்டனின் பொருளாதார வளர்ச்சிக்குப் பயன் பெறும் ஒரு உற்பத்திக்கு பாதுகாப்பாக இருந்து வரும் ஜாம்பிய வெள்ளை அரசாங்கத்தின் நிர்வாகச் செலவுக்கு அளிக்கப்படும் ஒரு கொடையே இந்த குத்தகைப் பணம். இது பிரிட்டனுக்கு மட்டுமல்ல: ஃப்ரான்ஸ் – செனெகல்; பெல்ஜியம் – காங்கோ; ஸ்பெயின் – சிலே, என அனைத்துக் காலனிய அதிகாரங்களுக்கும் பொருந்தும். ஆக குத்தகைத் தொகை என்பது உள்ளூரில் உள்ள காலனிய எஜமானர்கள் தரும் பாதுகாப்புக்குத் தரும் கூலி. இதை எப்படி நியாயப்படுத்துவது?

இதற்கும் மேற்கத்தியக் காலனிய அரசாங்கங்கள் ஒரு காரணத்தைத் தயாரித்து வைத்திருந்தன: சுரங்கங்களில் இருந்து செம்பு கலந்த மண்ணைத் தோண்டி எடுத்து ஒரு கச்சாப் பொருளாக மாற்றுவது வெறும் உடல் உழைப்பு. ஆனால் அதே செம்பை உருக்கி பல்வேறு தொழில் பயன்களுக்கு ஏற்ற மாதிரியான உலோகமாக்குவது தொழில் மற்றும் அறிவு (industry based on knowledge and skills) சார்ந்த உழைப்பு. எனவே செம்பு என்ற கச்சாப் பொருளுக்குச் சொற்ப விலை. அதை உருக்கி, குறிப்பிட்ட தொழில் பயன்பாட்டிற்கு தகுந்தாற்போல ‘உற்பத்தி’ மாற்றம் செய்யும்போது அப்பண்டம் மிக அதிக விலையைச் சந்தையில் பெறுகிறது. நம்மில் பலரும் இந்த விதிமுறையில் நியாயம் உண்டெனெ நம்புவர்கள்தான். ஆனால், இம்மாதிரியான குத்தகைக் கணக்கு காலனியச் சுரண்டலின் அடிப்படை. அது மட்டுமல்ல, இம்மாதிரியான குத்தகைக் கணக்கு இன்றைய உலகமயமாக்கலில் மிக முக்கிய விதியாகவும் தொடர்ந்து நடப்பில் இருந்துவருகிறது.

இன்றைய தினத்தில் ஜாம்பியாவில் கச்சாப் பொருளாக ஒரு டன் செம்பின் ஏற்றுமதி மதிப்பு சராசரியாக ஆறாயிரத்தில் இருந்து ஏழாயிரம் அமெரிக்க டாலர் விலை. இது பங்குச் சந்தையைப் பொறுத்ததும் ஆகும். ஆனால், தொழில் பயனுக்காக “உற்பத்தி செய்யப்பட்ட” செம்புகோ முப்பத்து மூன்றிலிருந்து முப்பத்து ஐந்தாயிரம் டாலர் வரை சந்தையில் மதிப்புள்ளது. தொழில் உபயோகத்துக்காகத் தயார் நிலையில் இருக்கும் செம்பின் மதிப்பானது பங்குச் சந்தையில் மிகுந்த பலம் வாய்ந்தது. கச்சாச் செம்பின் மதிப்பை நொடியில் குறைத்துவிடும் (ஏனெனில், தொழில் வர்த்தகமே கச்சாப் பொருளின் மதிப்பை நிர்ணயிக்கும்படி உலகமயமாக்கலின் விதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது).

காலனிய வர்த்தகம் என்னும் சுரண்டல்

நம்மில் பலருக்கும், கச்சாப் பொருளை உற்பத்தி செய்பவரைவிடத் தொழில் உற்பத்திப் பொருள் செய்பவருக்கு அதிகம் பங்கு போவது நியாயம்தானே என்ற கேள்வி எழலாம். இன்றைய உலகமயமாக்கலும் இதே விதியின் கீழ்தான் இயங்குகிறது. உதாரணமாக வங்க தேசத்தில் பெண்களும் குழந்தைகளும் சட்டை தைப்பது உடல் உழைப்பு என்பது நமது பொதுப்புத்தி. ஆனால் எந்த மாதிரியான சட்டை தைப்பது என்பது அறிவு சார்ந்த (ஃபாஷன்) சொத்து. ஆக டாக்காவின் ஒடுக்குத் தெருவில் தைக்கப்படும் சட்டையின் மதிப்பிற்கும் நியுயார்க்கின் மன்ஹாட்டனில் கேப் (Gap) என்ற வில்லைகளுடன் விற்கப்படும் சட்டைகளுக்கும் உள்ள விலை இடைவெளி “மிக மிக” அதிகம். இம்மாதிரியான வியாபாரச் சுரண்டலின் அடிப்படையில் இருப்பது காலனிய வர்த்தகப் பண்பு.

செம்பு என்ற உலோகம் உருவாக்க மிக அதிக அளவில் இயற்கை வளங்கள் சேதப்படுத்தப்படுகிறது அல்லது தேவைப்படுகிறது. ஒரு கிலோ செம்பு கச்சாப் பொருளை உருவாக்க சராசரியாக 238 லிட்டர் நீர் தேவைப்படுகிறது. இந்த நீரின் அளவு இடம் மற்றும் தொழில்நுட்பத்துக்கு ஏற்றவாறும் மாறும். இந்த நீரில் சல்பர் போன்ற பல்வேறு வேதிப்பொருள்கள் கலக்கப்படுவதால் இயற்கை மாசு ஏற்படவும் காரணமாகிறது. இதைப் பின்னர் குடிநீர், விவசாயம் போன்ற பயன்களுக்கு ஏதுவற்றதாகி விடுகிறது.

ஒரு ஆய்வின்படி, மேற்குலகில் ஒரு வீடு கட்ட 90 கிலோ செம்பு தேவைப்படுகிறது. 90 கிலோ செம்பு கச்சாப் பொருளைச் செய்யச் சுரங்க நாடுகள் 22,000 லிட்டர் நீரினை மாசுபடுத்த வேண்டும். அந்நீர் பெரும்பாலும் திறந்த வெளியிலும் விளைநிலங்களிலும் திறந்துவிடப்படுகிறது. 90 கிலோ கச்சாப் பொருளைத் தயாரிக்க 12, 860 கிலோ பாறைகளை (ஒரு கிலோவிலிருந்து 0.7 சதவீதம் செம்பு மட்டுமே கிடைக்கும்) உடைக்க வேண்டியுள்ளது. இப்பாறைகளும் வேதிப் பொருள்களின் பயன்பாட்டுக்கு உட்பட்டு மாசு படிந்து பொது உபயோகத்துக்குத் தகாததாகிவிடுகின்றன.

கார்ப்பரேட் லாப – நட்ட மோசடிக் கணக்கு

உலகெங்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களது லாப நட்ட கணக்குகளை ஆண்டறிக்கைகளாக வெளியிடுவது வழக்கம். இந்த ஆண்டறிக்கைகள் நிதி நிலைகளின் (financial balance sheet) லாப நட்டம் பற்றி மட்டுமே சொல்கிறது.

ஒரு செம்புச் சுரங்கத்தின் நிதி ஆண்டறிக்கை – அல்லது எந்த கார்ப்பரேட்டுகளின் ஆண்டறிக்கையும் - அவர்களின் உற்பத்தியால் இயற்கை வளத்தின் மீது ஏற்பட்ட லாப நட்டத்தையும் உள்வாங்கி (integrated environmental and financial balance sheet) ஒருங்கிணைத்த ஆண்டறிக்கை வெளியிடுவதில்லை. உதாரணமாக ஒரு செம்புச் சுரங்கத்தின் ஆண்டறிக்கை 1 மில்லியன் டன் செம்பு கச்சாவை உற்பத்தி செய்ததினால் ஏற்பட்ட லாபத்தை அச்சுரங்கத்தினால் விளைவிக்கப்பட்ட இயற்கை இடர்களின் நட்டத்தோடு ஒப்பிட்டால் அனைத்து கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆண்டறிக்கையும் மில்லியன் டாலர் நட்டத்திலேயே இருக்கும்.

செம்பு என்ற கச்சாப் பொருளின் உற்பத்தியின் விலை உடல் உழைப்பு மட்டுமல்ல. இயற்கை வளங்களின் சுரண்டலும்கூட. பாறைகளின் மாசு, குடி நீர் நச்சுப்படுத்தப்படுவது, அதனால் தாவரங்களுக்கு, கால்நடைகளுக்கு, விளைநிலங்களுக்கு, மக்களுக்கு ஏற்படும் சுகாதார, சுற்றுப்புறக் கேடும் கச்சாப்பொருளின் உற்பத்தியின் பின்னால் உள்ளன. குத்தகைத் தொகை இதையெல்லாம் கணக்கில் எடுப்பதே கிடையாது. காலனியக் குத்தகைத் தொகை என்பது சுரங்க முதலாளிகள் ஜாம்பியா போன்ற அரசுக்குச் செய்யும் ‘சேவையின் பலனாக விளையும் லாபத்தில்’ ஒரு விகிதாச்சாரத்தை அளிப்பதாகும்’ என்பதே. இதுவே ராயல்டி மற்றும் ரெண்ட் சீக்கிங் என்ற பொருளாதாரப் பண்பாக, உலகமயமாக்கலின் கீழ் தொடர்ந்துவருகிறது.

லண்டனில் உள்ள பங்குச் சந்தையில் பதிவு செய்யப்பட்டுள்ள வேதாந்தாவின் கிளை நிறுவனமான கேசிஎம் (கொன்கொலா செம்புச் சுரங்கம்) ஜாம்பியா அரசாங்கத்திற்கு 0.6% சதவீதம் மட்டுமே குத்தகைத் தொகை (ராயல்டி) அளிக்கிறது. வேதாந்தாவின் கேசிஎம் சுரங்கமானது இக்குத்தகைத் தொகையை இந்தியா போன்ற வெளிநாட்டில் உருக்கும் செலவு, அதை உற்பத்தியாக மாற்றுவதற்குத் தேவைப்படும் அதிநவீன தொழில் மற்றும் நிர்வாகச் செலவுகள் எல்லாம் கழித்த பின்னரே வழங்கப்படும் என ஜாம்பிய அரசாங்கத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

வேதாந்தாவினுடைய கேசிஎம்மின் 2013ஆம் ஆண்டின் ஆண்டறிக்கையின்படி, மேற்குறிப்பிட்ட செலவினங்களின் மதிப்பு மட்டும் ஒன்றேகால் பில்லியன் டாலர் எனக் குறிப்படப்பட்டுள்ளது. 2022ஆம் ஆண்டு வரை இந்தச் செலவினங்களை லாபங்களுக்கு எதிராகக் கழிக்கலாம் எனவும் இந்த ஆண்டறிக்கை பெருமையுடன் தனது பங்குதாரர்களுக்குக் கூறிக்கொள்கிறது. ஆக பங்குதாரர்களுக்குத் தொடர்ந்து லாபப் பங்கு தரும் வேதாந்தா ஜாம்பியா அரசாங்கத்திடம் தொடர்ந்து நட்டக் கணக்கு காண்பித்துவருகிறது. இதனால் ஒட்டுமொத்த வறுமைக்குத் தள்ளப்படுபவர்கள் ஜாம்பியக் குடிமக்களே. நம் உலகமயமாக்கப்பட்ட வர்த்தகத்தில் வேரூன்றியுள்ள பண்புகளே இந்நிலைக்குக் காரணம்.

பின்குறிப்பு: இந்த வாரக் கட்டுரைக்கான முக்கியத்தரவு Foil Vedanta என்ற தன்னார்வ நிறுவனத்தின் செம்புக் காலனியம் குறித்த ஆய்வு அறிக்கையாகும்.

கட்டுரை 1: பிரிட்டனின் இளவரசர் திருமணம் சொல்லும் செய்தி என்ன?

கட்டுரை 2: விண்ட்ரஷின் குழந்தைகள் சொல்லும் பாடம் என்ன?

கட்டுரை 3: காலனியமும் சேவை நிறுவனங்களும்

கட்டுரை 4: காலனியத்துக்கு ஆதரவான சமகாலக் குரல்கள்

கட்டுரை 5: சாம் செல்வன்; டரினிடாட் தமிழர்

கட்டுரை 6: சிறப்புப் பத்தி: நிழல் உலக அறிவுஜீவி சிவானந்தன்

கட்டுரை 7: கலைஞரும் காலனியமும்

கட்டுரை 8: காலனியத்தின் வித்துக்களும் விளைவுகளும்!

கட்டுரை 9: எல்லைப் பாதுகாப்பும் காலனியமும்

கட்டுரை 10: சிறப்புப் பத்தி: சுவர் சொல்லும் பாடம்

கட்டுரை 11: சிறப்புப் பத்தி: உலோகமும் காலனியமும்!

கட்டுரை 12: சிறப்புப் பத்தி: காப்பர் காலனியம்

கட்டுரை 13: இன்றைய உலகில் செம்பு

கட்டுரை 14. செம்புச் சுரண்டல்

(கட்டுரையாளர்: முரளி சண்முகவேலன், ஊடக மானுடவியலாளர். லண்டனில் உள்ள ஸ்கூல் ஆஃப் ஓரியண்டல் அண்டு ஆப்பிரிக்கன் ஸ்டடீஸில், சாதி மற்றும் தகவல்தொடர்பு குறித்து ஆய்வு மேற்கொண்டிருப்பவர்.)

(தொடரின் அடுத்த பகுதி வரும் புதன்கிழமை…)

புதன், 17 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon