மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 21 செப் 2020

நமக்குள் ஒருத்தி: தற்காலப் பெண்ணியத்தின் பிரச்சினைகள்!

நமக்குள் ஒருத்தி: தற்காலப் பெண்ணியத்தின் பிரச்சினைகள்!

நவீனா

சமூகத்தில் பாலினப் பிரிவுகளில் ஆண், ஆண் அல்லாதவர் என்கிற இரண்டு பிரிவுகள்தான் இருக்கின்றன. பெண்ணை, மற்ற அல்லது இரண்டாம் பாலினமாகத்தான் பெரும்பாலான ஆண்கள் பார்க்கிறார்கள். சமமான பாலினமாக அல்ல. ஓர் ஆணுக்குப் பெண் மீதான பார்வை இவ்வாறாகத்தான் இருக்கிறது என்பன போன்ற வாதங்களை அடிப்படையாக வைத்துத்தான் பெண்ணியவாதம் தொடங்கியது. இது பல படிநிலைகளில் வளர்ச்சி அடைந்து ஆண் - பெண் உறவு நிலைகளில் தேவைப்பட்ட அனைத்து மாற்றங்களையும் கேள்விக்கு உட்படுத்தியது.

அதற்கு அடுத்த கட்டமாக, ஆணின் போக்கைக் குறித்தும், அவர்களின் அனைத்துச் செயல்பாடுகள் குறித்தும் (அது பெண்ணுடன் சம்பந்தப்பட்டதாக இருந்தாலும், இல்லாவிட்டாலும்) கேள்வி எழுப்ப ஆரம்பித்து, அது இறுதியில் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான உறவில் முன்னெப்போதுமில்லாத சிக்கலை ஏற்படுத்தி, பெரியதொரு பிளவில் கொண்டுபோய் நிறுத்திவிட்டது. பெண்ணியவாதிகள் என்றாலே ஒருகட்டத்தில் ஆண்கள் வெறுக்கும் நிலை வந்துவிட, அவர்களின் பெண்ணியக் கருத்துகள் மட்டும் எப்படி ஆண்களைச் சென்றடையும் என்பது ஒரு பெரிய கேள்வியாக தற்கால பெண்ணியத்தின் முன் நிற்கிறது.

பெண்ணியத்தின் தொடக்கம்

1984ஆம் ஆண்டு பிரெஞ்சு பெண்ணியவாதி மற்றும் தத்துவவாதியான 'லூஸ் இரிகாரி' எழுதிய 'ஆன் எதிக்ஸ் ஆப் செக்ஸுவல் டிஃபரன்ஸஸ்' (An Ethics of Sexual Differences) என்கிற கட்டுரைத் தொகுப்பு வெளியானது. இவர் மனோதத்துவ அறிஞர் லக்கானின் நேரடி மாணவியாக இருந்து, பின்னர் பிராய்ட் மற்றும் லக்கானின் வாதங்களை எதிர்த்து பெண்ணியத்தின் அடிப்படையில் கேள்விகள் எழுப்பிய முதல் பெண்ணியவாதியாக அடையாளப்படுத்தப்படுகிறார். மொழி மற்றும் கலாச்சாரம் சார்ந்து பேசப்பட வேண்டிய பெண்ணியக் காரணிகளை முன்வைத்து வாதாடிய இரிகாரி, தனது கட்டுரையில் மொழியின் கட்டமைப்பை, அந்நாளில் கேள்விக்கு உட்படுத்தியதைப் பலரும் ஏற்றுக்கொண்டனர் என்றே சொல்ல வேண்டும்.

தொன்றுதொட்டு பெரும்பாலும் ஆண்களே தனது காதலை முதலில் பெண்களிடம் வெளிப்படுத்தி வந்திருக்கின்றனர். பெண்கள் முதலில் தன் காதலை ஆண்களிடம் வெளிப்படுத்துவதைச் சமூகம் அவ்வளவாக அனுமதிக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அவ்வாறான சூழலில் ஆண்கள் மட்டுமே பயன்படுத்திவந்த 'ஐ லவ் யூ' என்ற வாக்கியத்தை உதாரணமாக எடுத்து மொழியின் கட்டமைப்பு பற்றி இரிகாரி வாதிட்டிருப்பார். அந்த வாக்கியத்தில் கூட 'ஐ' என்கிற ஆணே முதன்மைப் பொருளாக இருக்கிறான் என்றும், 'யூ' என்ற வார்த்தையால் குறிக்கப்படுகிற பெண், ஆணுக்கு அடுத்த இடத்தில்தான் வைக்கப்படுகிறார் என்றும் கூறியிருப்பார்.

அதற்கு மாற்றாக 'ஐ லவ் டு யூ' (I love to you) என்கிற புதிய வாக்கியம் ஒன்றை அறிமுகப்படுத்தி, அந்த வாக்கியத்தில், ஆணுக்கும் பெண்ணுக்கும் மொழி மூலமாக ஒரு சமநிலையை ஏற்படுத்த முயற்சி செய்திருப்பார். அதாவது, ஆங்கிலத்தில் 'டு' (to) என்ற வார்த்தையானது, கடைச்சொல்லுக்கு முன் பயன்படுத்தப்படும்போது, அது முதற்சொல்லுக்கு நிகரான மதிப்பைப் பெறுகிறது. தமிழ் வழக்கிலும் 'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று அந்த வாக்கியம் கட்டமைக்கப்பட்டிருந்தாலும் தற்காலச் சூழலில் அதைப் பெண்களும் பயன்படுத்துகிறார்கள் என்பது ஏற்றுக்கொள்ள வேண்டிய ஒன்றுதான். இருப்பினும், இவ்வளவு நாகரிகம் அடைந்துவிட்ட போதும்கூட, முதலில் ஆண்களிடம் தன் காதலைச் சொல்லும் பெண்களை இன்னும் உலகம் விசித்திரமாகத்தான் பார்த்துவருகிறது.

இரிகாரி கூறும் வேறு ஒரு முக்கியமான கருத்தும் தற்காலப் பெண்ணியவாதிகளால் அதிகம் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். ஓர் ஆணைப் பற்றி கூறும்போது அவன் பெண்ணை, 'ஆண் அல்லாத, மற்ற அல்லது இரண்டாம்' பாலினமாகப் பார்க்கிறான் என்கிற குற்றச்சாட்டை முன்வைக்கும் பெண்கள், பெரும்பாலும் பெண் என்கிற பாலினத்திற்கு, ஆண் என்பவன், 'பெண் அல்லாத அல்லது மற்ற' பாலினம் தான் என்பதை முற்றிலும் மறந்துவிடுகின்றனர் ஓர் ஆண் தன்னைப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதில் முனைப்பு காட்டும் பெண்கள், தன் பாலினமான பெண்களை எந்த வரையில் புரிந்து வைத்திருக்கிறார்கள் என்பதும் சிந்திக்க வேண்டியதே ஆகும். அதே போன்று ஆண்களும் தன் பாலினத்தின் மீது தேவையான புரிதலுடன்தான் சமூகத்தில் வலம் வருகிறார்களா என்றால், இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இதைத்தான், 'தன் பாலினத்தின் மீதான அன்பு, பிற பாலினத்தின் மீதான அன்பு' (love of same, love of other) என்று இரிகாரி எடுத்துக் கூறுகிறார்.

இன்றைய பெண்ணியவாதிகளின் குழப்பங்கள்

இன்றைய சூழலில், தற்காலப் பெண்ணியவாதிகள் பலர், 'பெரியார் ஒரு தலைசிறந்த பெண்ணியவாதி. அவர் மட்டும் உயிருடன் இருந்திருந்தால், நான் அவரைத் திருமணம் செய்திருந்திருப்பேன்' என்றும் 'சே குவேரா ஒரு பெரும் போராளி, அவர் மட்டும் உயிரோடு இருந்திருந்தால், நான் அவரைத் திருமணம் செய்திருந்திருப்பேன்' என்றும் பேசுவதை பெண்ணியம் என்று கருதுகிறார்கள். அடிப்படையில் தன் பாலினத்தைப் பற்றிய முழுமையான புரிதல் இல்லாமல், பெண்ணியம் பேசும் ஆண் ஆளுமைகளைத் திருமணம் செய்துகொள்வேன் என்று கூறுவதன் மூலம் எவ்வாறான பெண்ணியத்தை வளர்த்துவிட முடியும்? பெண்ணியம் என்பது பெண்களுக்கு எதிரான, பெண்களை அடிமைப்படுத்தக்கூடிய தளைகளை உடைத்தெறியப் பயன்பட்ட பெரும் போர்க்கருவி. அது பெண்ணினத்திற்கு ஆற்றியிருக்கும் தொண்டுகள் கணக்கில் அடங்காதது. ஆனால், இவ்வகைப் பெண்ணியவாதிகள் பெண்ணியத்தை அதன் அடிப்படைக் கோட்பாடுகளிலிருந்து திசை திருப்பிவிடுகின்றனர் என்றே சொல்ல வேண்டும்.

உண்மையில் பெண்ணியம் என்பது முதலில் தன் பாலினத்தின் மீதான அன்பும், மற்ற பாலினத்தின் மீதான புரிதலும் தான். தன் பாலினத்தின் மீது எதிர்மறை எண்ணங்களை வைத்திருக்கும் எந்த ஓர் ஆணும் சரி, பெண்ணும் சரி, மற்ற பாலினத்தின் மேல் நேர்மறையான எண்ணங்கள் கொண்ட அணுகுமுறையைக் காட்ட வேண்டும் என்று எதிர்பார்ப்பது நடைமுறையில் சாத்தியம் அல்ல. தற்காலப் பெண்ணியம் ஆண் - பெண் சமநிலை ஏற்படுவதற்கான அடிப்படையில் அமையாவிட்டாலும், ஆண் பெண் இடையிலான பிளவை இன்னும் பெரிதுபடுத்தாமல் இருந்தாலே போதும் என்பதே பல சமூக ஆர்வலர்களின் கருத்தாக இருக்கிறது.

இன்னும் பறக்கலாம்!

(தொடரின் அடுத்த பகுதி வரும் திங்களன்று வெளியாகும் - ஆசிரியர்)

(கட்டுரையாளர்: நவீனா, ஆங்கிலப் பேராசிரியர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர், எழுத்தாளர். சமூகப் பிரச்சினைகள், பெண்ணியம், இலக்கியம் சார்ந்த படைப்புகளை எழுதிவருகிறார். இவரைத் தொடர்புகொள்ள: [email protected])

தொடரின் முதல் பகுதி

பகுதி 2

பகுதி 3

பகுதி 4

பகுதி 5

பகுதி 6

பகுதி 7

பகுதி 8

பகுதி 9

ஞாயிறு, 14 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon