மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 15 அக் 2018

விசாரணையில் கால தாமதம் இல்லை: ஆணையம் விளக்கம்!

விசாரணையில் கால தாமதம் இல்லை: ஆணையம் விளக்கம்!

ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை சரியான பாதையில் சென்றுகொண்டிருப்பதாகவும், இதில் எந்தக் கால தாமதமும் இல்லை என்றும் விசாரணை ஆணையத்தின் வழக்கறிஞர் பார்த்தசாரதி விளக்கம் அளித்துள்ளார்.

ஜெயலலிதாவின் மரண மர்மத்தைக் கண்டறிய உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுக் கடந்த ஒராண்டாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சம்மன் அனுப்பப்பட்டதையடுத்து சசிகலாவின் உறவினர்கள், அப்போலோ மருத்துவர்கள், அரசு அதிகாரிகள் எனப் பல்வேறு தரப்பினரும் விசாரணை ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்து வருகின்றனர். ஆணையத்துக்கான அவகாசம் இரண்டு முறை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், இரண்டாவது முறையாக நீட்டிக்கப்பட்டதன் கால அவகாசம் வரும் 24ஆம் தேதியுடன் முடிவடையவுள்ளது.

இந்த நிலையில்இன்னும் பலரிடம் விசாரணை நடத்த வேண்டியிருப்பதால் மேலும் நான்கு மாதங்களுக்கு ஆணையத்துக்கு அவகாசம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு விசாரணை ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. இந்தத் தகவலை ஆணையத்தின் வழக்கறிஞர் பார்த்தசாரதி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நேற்று (அக்டோபர் 14) அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “எங்கள் கடிதத்துக்கு அரசின் பதிலை எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம். விசாரணையில் இழுத்தடித்தலுக்கான நோக்கம் எதுவும் கிடையாது. அநாவசியமாக கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டிய தேவையுமில்லை. ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை சரியான பாதையில் சென்று கொண்டிருக்கி்றது, இதில் எந்தக் கால தாமதமும் இல்லை” என்று விளக்கமளித்துள்ளார்.

மேலும், “ஆணையம் தொடங்கப்பட்டபோது, விசாரிக்கப்பட வேண்டியவர்கள் குறித்த பட்டியல் அரசு தரப்பில் வழங்கப்படவில்லை. ஆணையமே தானாக முன்வந்து போயஸ் தோட்டத்தில் துவங்கி, அப்போலோ மருத்துவனை வரை விசாரணைக்குத் தொடர்புடையவர்கள் எனக் கருதிய, 110 பேரிடம் விசாரித்துள்ளது. விசாரணையில் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் இன்னும் தொடர்புடையவர்களிடம் விசாரிக்க வேண்டியுள்ளது” என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

திங்கள், 15 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon