தமிழகத்தில் ஆட்சி செய்த திமுக, அதிமுக தான் ஊழல் நிறைந்த கட்சிகள் என்று தெரிவித்த மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஊழல் இல்லாத ஆட்சி பாஜக மட்டுமே என்று கூறியுள்ளார்.
ரஃபேல் ஒப்பந்த விவகாரத்தில் மோடி தலைமையிலான பாஜக அரசு மீது ஊழல் குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி அடுக்கி வருகிறார். இதற்கு பாஜக மறுப்புத் தெரிவித்து வரும் நிலையில் இன்று (அக்டோபர் 13) சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், “எந்த அமைப்பு மீதும் எந்தவிதமான குற்றச்சாட்டுகளை வேண்டுமானாலும் சொல்லலாம். சிபிஐ மீதும் குற்றச்சாட்டு சொல்வார்கள். அவர்களுக்குச் சாதகமாக சொன்னால், நீதி வென்றது என்பார்கள். மாற்றிக் கூறினால், அதனைப் பின்னிருந்து ஆட்டிப் படைப்பதாக குற்றம்சாட்டுவார்கள்” என்று கூறியுள்ளார்.
“உலகம் போற்றும் வகையில் மத்தியில் பிரதமர் மோடி ஆட்சி செய்து வருகிறார். பாஜக மாநிலங்களில் வளர்ச்சியை பார்த்துக் கொண்டிருக்கிறோம். அந்த வளர்ச்சியை ஏன் தமிழகத்தில் கொண்டுவரவில்லை. ஊழலற்ற வளர்ச்சி தரக் கூடிய ஒரு அரசாங்கம் தமிழகத்துக்கு வர வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். அதன்படி, தமிழகத்தில், தூய்மையான, ஊழலற்ற வளர்ச்சி தரக் கூடிய ஒரே கட்சி பாஜகதான்” என்று தெரிவித்துள்ளார்.
தேர்தல் வருவதனால் வேறு வழியின்றி மத்திய அரசு மீது ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர் என்று தெரிவித்த அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், “நான் கரையில்லாத வெள்ளை சட்டை போட்டிருக்கிறேன் என்று நீங்கள் மைத் தெளித்தால் அதற்கு நான் பொறுப்புகிடையாது” என்று விளக்கமளித்தார். எந்த நாட்டோடு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதோ அந்த நாட்டுடைய அரசாங்கமே கூறியிருக்கும் நிலையில் திட்டமிட்டு கூறி வரும் குற்றச்சாட்டுகளுக்கு பாஜக பொறுப்பு ஏற்காது என்றும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், கடந்த 50 ஆண்டுகளாக திமுக அதிமுக ஆட்சியில் என்னென்ன ஊழல் நடந்துள்ளது என்பதை நிரூபிக்க வேண்டிய காலம் இது. ஊழல் பற்றிப் பேச இருகட்சிகளுக்கும் தகுதியில்லை, இரு கட்சிகளுமே ஊழல் நிறைந்த கட்சிகள் தான். இதில் யோக்கியர் என்று யாருமில்லை என்று அவர் தெரிவித்தார்.