மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 13 ஆக 2020

தொடரும் தீண்டாமைக் கொடுமை!

தொடரும் தீண்டாமைக் கொடுமை!

சேலம் மாவட்டத்தில் தலித் சமூகத்தைச் சேர்ந்த பெண் சத்துணவு அமைப்பாளரை இடமாற்றம் செய்வதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.

சேலம் மாவட்டம் ஓமலூர் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உட்பட்டது குப்பன்கொட்டாய் கிராமம். சமீபத்தில் இங்குள்ள அரசுத் தொடக்கப்பள்ளியில் சத்துணவுச் சமையலராகப் பணியாற்றி வந்தவர் ஓய்வு பெற்றார். இதையடுத்து, கே.மோரூர் மேல்நிலைப் பள்ளியில் சமையல் உதவியாளராக 10 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றி வந்த ஜோதி என்பவர், பதவி உயர்வு பெற்று இப்பள்ளியின் சமையலராக பணியமர்த்தப்பட்டார். தலித் சமூகத்தைச் சேர்ந்த இவர், குப்பன்கொட்டாய் அரசுத் தொடக்கப்பள்ளியில் தன்னுடைய பணியைத் தொடங்கினார்.

தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் சமைக்கும் உணவை தங்கள் குழந்தைகள் சாப்பிடுவதை ஏற்க முடியாது என்றும், அவரை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று கூறிவந்தனர் அக்கிராமத்திலுள்ள சாதிஇந்துக்கள் சிலர். இவர்கள், ஜோதியைச் சாதி ரீதியாகத் திட்டியதாகக் கூறப்படுகிறது. அத்துடன், ஜோதியை இடமாற்றம் செய்யாவிட்டால், தங்களது குழந்தைகளை வேறு பள்ளியில் சேர்ப்போம் என்று அவர்கள் மிரட்டியுள்ளதாகத் தகவல் வெளியானது.

தான் சமைக்கும் உணவைப் பள்ளிக் குழந்தைகள் சாப்பிடுவதாகவும், அவர்களின் பெற்றோர்கள் தான் தன்னை மிரட்டுவதாகவும் ஜோதி தெரிவித்துள்ளார். தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், சத்துணவு அமைப்பாளர் ஜோதியை இடமாற்றம் செய்ய வலியுறுத்துவதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. அவரை இடமாற்றம் செய்தால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரியுள்ளனர்.

கடந்த ஜூலை மாதம் திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகேயுள்ள அரசுப் பள்ளியொன்றில் தலித் சமூகத்தைச் சேர்ந்த சத்துணவு ஊழியர் பாப்பம்மாள் சமையல் செய்வதற்கு எதிராகச் சில சாதி இந்துக்கள் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், அதேபோன்று ஜோதியும் பாதிப்புக்குள்ளாகியுள்ளார்.

சனி, 13 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon