மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 2 ஜூலை 2020

ஊழல் : முதல்வருக்கு ஆளுநர் மறுப்பு!

ஊழல் : முதல்வருக்கு ஆளுநர் மறுப்பு!

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கும், அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமிக்கும் இடையே நீண்ட நாட்களாக மோதல் போக்கு இருந்து வருகிறது. இந்நிலையில் கிரண்பேடி மீது நாராயணசாமி இன்று (அக்டோபர் 13) ஊழல் குற்றச்சாட்டை கூறியுள்ளார். இதற்கு கிரண்பேடி மறுப்புத் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் நாராயணசாமி, "சிஎஸ்ஆர் (சமூக பொறுப்புணர்வு திட்டம் ) நிதி சம்பந்தமாக விதிமுறைகள் இருக்கும் போது துணைநிலை ஆளுநர் அலுவலகத்திலிருந்து பல நிறுவனங்களை நேரடியாக தொடர்புக்கொள்வது, மேலும், ரோட்டரி கிளப் போன்ற அமைப்புகளைத் தொடர்புகொண்டு நிதி கொடுக்க வேண்டும் என்று கேட்டு சிஎஸ்ஆர் திட்டத்திற்கு நிதி வசூல் செய்யப்பட்டிருக்கிறது. எனக்குக் கிடைத்த தகவலின் படி சுமார் 85 லட்சம் இதுவரை வசூல் செய்து இருக்கிறார்கள். அந்த நிதி யார் யாரிடம் இருந்து வசூல் செய்யப்பட்டது என்ற விவரம் யாருக்கும் கொடுக்கப்படவில்லை. துணைநிலை ஆளுநர் எதற்கெடுத்தாலும் வெளிப்படையான நிர்வாகம், ஊழலற்ற நிர்வாகம் என்று கூறுகிறார் ஆனால் தற்போது வசூல் செய்த தொகையை சிஎஸ்ஆர் கமிட்டிக்கு அவர் அனுப்பவில்லை. துணைநிலை ஆளுநர் அலுவலகமே ஊழலுக்குத் துணை போகிறது" என்று குற்றம்சாட்டியிருந்தார்.

இந்நிலையில், நாராயணசாமியின் குற்றச்சாட்டிற்கு மறுப்பு தெரிவித்துள்ள துணைநிலை ஆளுநர் கிரண்பேடி,"பொதுப்பணித்துறை நீர்நிலைகளை துர்வாரும் பணிகளை மேற்கொள்ளவில்லை. வடமேற்கு பருவநிலை வர இருப்பதால், நிறைய நீர்நிலைகள் துர்வாரப்பட வேண்டும். அதற்காக நிதி தேவைப்பட்டது. இந்த நிலையில் சில கல்வி நிலையங்கள், நிறுவனங்களுடன் ஒன்றிணைந்து அவற்றை துர்வாரும் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். துணைநிலை ஆளுநர் அலுவலகம், நிதிகளைப் பரிவர்த்தனை ஏதும் செய்வதில்லை. அதனால் அவருடைய குற்றச்சாட்டு முற்றிலும் தவறு" என்று கூறியுள்ளார்.

சனி, 13 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon