மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 13 ஜூலை 2020

பரிதி இளம்வழுதி மரணம்!

பரிதி இளம்வழுதி மரணம்!

முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி மாரடைப்பு காரணமாக இன்று (அக்டோபர் 13) காலை காலமானார்.

திமுகவின் முன்னணி தலைவர்களில் ஒருவராக இருந்தவர் பரிதி இளம்வழுதி (58). 1996 - 2001ஆம் ஆண்டு சட்டப்பேரவை துணை சபாநாயகராக பதவி வகித்தார். 2006 - 2011ஆம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சராக பதவி வகித்தார். 2013ஆம் ஆண்டு திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். சிறிது காலம் அக்கட்சியின் செயற்குழு உறுப்பினராகவும் இருந்த பரிதி, அதிமுக இரண்டாக பிரிந்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் அணியில் இணைந்தார். பின்னர் தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டதாகக் கூறி கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

மாரடைப்பு காரணமாக அடையாரில் உள்ள மலர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போதே இன்று (அக்டோபர் 13) அதிகாலை உயிரிழந்துவிட்டார். அவரது மரணத்திற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பெசன்ட் நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள உடலுக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பரிதி இளம்வழுதியின் உடலுக்கு இன்று காலை அஞ்சலி செலுத்தினார். மா. சுப்ரமணியன், ஏ.வ.வேலு ஆகியோர் உடன் இருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மு.க. ஸ்டாலின், “பரிதியின் இறப்பு மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுகவின் துணை அமைப்புகளில் ஒன்றான இளைஞர் அணி தொடங்கியபோது என்னோடு இருந்து பணியாற்றியவர். சட்டமன்றத்தில் தன்னந்தனியாக ஆளும்கட்சியை எதிர்த்து குரல் கொடுக்கும் வல்லமை படைத்தவர். தலைவர் கலைஞரால் துணை சபாநாயகராக, செய்தித் துறை அமைச்சராக ஆக்கப்பட்டவர். கலைஞரால் இந்திரஜித் என்றும் வீர அபிமன்யூ என்று பாராட்டப்பட்டவர். கலைஞரின் செல்ல பிள்ளையாகவே அவர் இருந்தார்” என்று தெரிவித்தார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.

பரிதியின் இறப்பு வேதனையை ஏற்படுத்தியுள்ளதாக டிடிவி தினகரன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ அமமுக அமைப்பு செயலாளர் பரிதி இளம்வழுதி காலமானார் என்ற செய்தியை கேட்டு வேதனையடைந்தேன். பொது வாழ்க்கையில் நெடிய பயணத்திற்கு உரியவராக திகழ்ந்து ஜெயலலிதாவின் தலைமையை ஏற்று தீவிர தொண்டாற்றியவர் பரிதி.

ஜெயலலிதாவின் மரணத்திற்கு பின், தியாகத்திற்கும் துரோகத்திற்குமான யுத்தத்தில் தியாகத்தின் பின் நின்றவர். அவரது மறைவை முன்னிட்டு அமமுக சார்பில் மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார். திமுக தொண்டர்கள் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நாளை காலை 10 மணியளவில் அவரது உடல் அடக்கம் செய்யப்படவிருக்கிறது.

சனி, 13 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon