மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 2 ஜூலை 2020

சிறப்புக் கட்டுரை: வாழ்க்கையில் சரியான வடிவியலை எட்டுவது எப்படி?

சிறப்புக் கட்டுரை: வாழ்க்கையில் சரியான வடிவியலை எட்டுவது எப்படி?

சத்குரு ஜகி வாசுதேவ்

ஏன் ஒரு குறிப்பிட்ட விதத்தில் அமர்கிறீர்கள் சத்குரு?

(தில்லி ஸ்ரீராம் வணிகவியல் கல்லூரியில் நிகழ்ந்த 'இளைஞரும் உண்மையும்' நிகழ்ச்சியில், சத்குருவிடம் அவர் ஏன் ஒரு குறிப்பிட்ட விதத்தில் அமர்கிறார் என்று மாணவர்கள் கேட்டதற்கு சத்குரு விளக்கமளித்தார்.)

கேள்வியாளர்:

சத்குரு, எதனால் நீங்கள் எங்கு சென்றாலும் ஒரு குறிப்பிட்ட விதமாக அமர்கிறீர்கள்? இடது காலிலிருந்து காலணியைக் கழற்றி, இடதுகாலை மேலே வைத்து, வலது காலை கீழே வைத்து எதனால் இப்படி அமர்கிறீர்கள்? இது நீங்கள் அமரும் பாணியா, அல்லது இப்படித்தான் அமர வேண்டுமா?

சத்குரு:

இன்றும் நீங்கள் இந்தியக் கழிப்பறையை பயன்படுத்துவதுண்டா?

கேள்வியாளர்:

ஆம்.

சத்குரு:

அப்போது ஒரு குறிப்பிட்ட விதமாக அமர்கிறீர்கள் அல்லவா? எதனால் அப்படி? ஏனென்றால் உடல் அப்படித்தான் உருவாக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் ஏதோவொரு பல்கலைக்கழகம் இதை ஆய்வுசெய்து, "கழிவுகளை வெளியேற்ற இப்படி அமர்வதுதான் சிறந்தது" என்றது. ஏனென்றால் உங்கள் தொடைகள் வயிற்றை அழுத்தும், வெளியே வர வேண்டியது அனைத்தும் வந்துவிடும். வெளியே வர வேண்டியது வெளியேறாவிட்டால், அது மெதுமெதுவாக உங்கள் தலைக்கு ஏறும்.

ஒத்திசைவை ஏற்படுத்துவது

யோக அறிவியலில், குறிப்பிட்ட சில உடல்நிலைகள், குறிப்பிட்ட சில செயல்களுக்கு உறுதுணையாக இருப்பதை கவனித்தார்கள். வேறு விதமாகச் சொல்வதென்றால், ஹட யோகா எனப்படுவது, உடல் எடுக்கும் நிலைகள் மூலம் வடிவியல் ரீதியான கச்சிதத்தை அடையும் விதமாக உடலை உபயோகிப்பது. உங்களின் வடிவியல், அதனினும் பெரிய படைப்பின் வடிவியலுடன் இணங்கும் விதமாக மாறினால், நீங்கள் எப்போதும் ஒத்திசைவாக இருப்பீர்கள், ஒருபோதும் அதிலிருந்து பிறழ மாட்டீர்கள்.

நீங்கள் எந்த அளவு சமநிலையாக இருக்கிறீர்கள், எந்த அளவு தெளிவாக எல்லாவற்றையும் பார்க்கிறீர்கள், எந்த அளவு சிறப்பாகச் செயலாற்றுகிறீர்கள் என்பது, நீங்கள் எந்த அளவு ஒத்திசைவாக இருக்கிறீர்கள் என்பதைச் சார்ந்தது. நீங்கள் மக்களுடன், மரங்களுடன், உயிருடன், அல்லது உங்களைச் சுற்றியுள்ள வெளியுடன் ஒத்திசைவாக இருக்கிறீர்களா என்பதுதான் நீங்கள் எந்த அளவு வழுவழுப்பாக, உராய்வின்றி உலகில் செயலாற்றுகிறீர்கள் என்பதை நிர்ணயிக்கும்.

நான் எப்போதும் இப்படி அமர்வதில்லை, பேசும்போது மட்டும்தான் இப்படி அமர்கிறேன். சித்தாசனம் என்றொரு ஆசனம் இருக்கிறது. அதில் பல அம்சங்கள் இருக்கின்றன. ஒரு எளிய அம்சம் என்னவென்றால், மருத்துவ அறிவியலில் இன்று இடது குதிகாலின் ஒரு புள்ளியை 'அக்கிலிஸ்' என்று குறிப்பிடுகிறார்கள். அக்கிலிஸ் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

இடது குதிகாலின் இந்த அக்கிலிஸ் பகுதியை உங்கள் மூலாதாரா அல்லது பெரினியம் எனும் பகுதியில் வைத்தால், இவ்விரண்டும் தொட்டால், உங்களுக்குள் பல அம்சங்கள் தெளிகின்றன. உங்கள் எண்ணங்கள் தெளிகின்றன, உணர்வுகள் இல்லாதிருக்கின்றன, உங்களைச் சுற்றி நடப்பவற்றை இந்நிலையில் தெளிவாக கிரகிக்கிறீர்கள்.

தனது குதிகாலில் குத்திய அம்பால் அக்கிலிஸ் இறந்தது உங்களுக்குத் தெரிந்திருக்கும். குதிகாலில் காயம் ஏற்பட்டதால் ஒருவர் உயிரிழக்க நேரிடும் என்று நீங்கள் நம்புகிறீர்களா? ஆனால் அக்கிலிஸ் அப்படித்தான் இறந்தார். அவருக்குப் பலகாலம் முன்பே அதேவிதமாக ஒருவர் இந்தியாவில் உயிரிழந்தார். அவர் கிருஷ்ணர்.

இக்கதைகளின் மூலம் அவர்கள் மிகவும் நேர்த்தியாகக் கொல்லப்பட்டார்கள் என்கிறார்கள். அவர்கள் கழுத்தறுத்தோ, தலை உடைத்தோ கொல்லப்படவில்லை. அக்கிலிஸ் எனும் குதிகாலின் ஒரு புள்ளியில் குத்தியதால் அவர்கள் இறந்தார்கள். உடலில் ஒருவித சக்தி அமைப்பு இருக்கிறது. குதிகாலின் அக்கிலிஸ் பகுதி மூலாதாராவைத் தொடும் விதமாக நீங்கள் அமரும்போது, நீங்கள் எந்தவொரு பக்கமும் சாயாத விதமான ஒரு சமநிலை வருகிறது.

எந்தப் பக்கமும் சாயாதிருப்பது

நம் அனைவருக்கும் கருத்துக்கள், கோட்பாடுகள் மற்றும் சார்புகள் உள்ளன. உங்கள் சொந்த வாழ்க்கை அனுபவங்களும், உங்கள் மனதுள் நீங்கள் எடுத்துள்ள பதிவுகளுமே நீங்கள் பார்க்கும் எல்லாவற்றையும் பாதிக்கின்றன. உங்களுக்கு இது பிடிக்கும், அது பிடிக்காது, இவர் மேல் அன்பு, அவர் மேல் வெறுப்பு - இவையனைத்தும் நீங்கள் உங்களுக்குள் ஏதோவொரு பக்கம் சாய்வதால்தான். ஆனால் நீங்கள் உண்மையில் உயிரை உணர விரும்பினால், நீங்கள் எந்தப் பக்கமும் சாயாதிருப்பது மிகவும் முக்கியம். எல்லாவற்றையும் முற்றிலும் புதிதாக, உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் பார்க்க நீங்கள் விருப்பத்துடன் இருக்க வேண்டும்.

இதை மக்கள் புரிந்துகொள்வது மிகவும் கடினம். என்னுடன் சிலர் 30 வருடங்களுக்கு மேலாக இருக்கிறார்கள், தினசரி அளவில் என்னுடன் வேலை செய்கிறார்கள், பல விஷயங்கள் செய்கிறார்கள், ஆனால், அவர்களைப் பற்றி என்னிடம் ஒரு கருத்துக்கூடக் கிடையாது. நான் ஏதாவது செய்யத் தேவையாக இருந்தால் மட்டும், அவர்களின் திறமையைப் பார்ப்பேன். அவர்கள் பற்றி என்னிடம் ஒரு கருத்துக்கூடக் கிடையாது. அதற்குள் நீங்கள் கருத்துக்கள் உருவாக்கியிருப்பீர்கள், ஆனால் நான் அப்படி கருத்து உருவாக்குவதில்லை, ஏனென்றால் அதுதான் ஆன்மிகச் செயல்முறையின் சாராம்சம். நாம் தொடர்ந்து ஒவ்வொரு உயிரையும் ஒரு புதிய சாத்தியமாகப் பார்க்கிறோம்.

இதில் சாத்தியத்திற்கும் நிஜத்திற்கும் இடையே நிச்சயம் இடைவெளி இருக்கிறது. சிலரிடம் அந்த இடைவெளியைக் கடக்கும் துணிவும் செயலுறுதியும் இருக்கின்றன, சிலரிடம் இருப்பதில்லை. ஆனால், ஒவ்வொரு உயிரும் ஒரு சாத்தியமே. நீங்கள் அந்த சாத்தியத்தைத் திறந்து வைத்திருக்க விரும்பினால், எவரைப் பற்றியும் எவ்விதக் கருத்தும் உருவாக்காமல் இருக்கவேண்டும்.

நல்லது, கெட்டது, அசிங்கம் என்று எந்த கருத்தும் உருவாக்காமல் இருக்க வேண்டும்; அவர்கள் தற்போது எப்படி இருக்கிறார்கள் என்று மட்டும் பாருங்கள். இந்தக் கணத்தில் அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பது மட்டும்தான் எனக்கு முக்கியம். நீங்கள் நேற்று எப்படி இருந்தீர்கள் என்பது எனக்கு முக்கியமில்லை. நாளை எப்படி இருக்கப்போகிறீர்கள் என்பதைக் காத்திருந்து பார்ப்போம். நாளை என்பதை நாம் உருவாக்க வேண்டும், இன்றே உறுதிப்படுத்தக் கூடாது.

சரியான வடிவியலை எட்டுவது

உடலின் ஒருவித வடிவியலிது. தற்போது மேற்கத்திய கலாச்சாரங்களில் "யோகா என்பது உடற்பயிற்சி, அதற்கு பதிலாக நீங்கள் பிலேட்ஸ், குத்துச்சண்டை, டென்னிஸ் விளையாடலாம்" என்று பிரச்சாரம் செய்கிறார்கள். உடலை திடமாக வைத்துக்கொள்ள மட்டுமே விரும்பினால், நீங்கள் எங்காவது ஓடலாம், மலையேறலாம், டென்னிஸ் விளையாடலாம், அல்லது வேறு ஏதாவது செய்யலாம். யோகா என்பது உடல் திடத்திற்கானது அல்ல. உடல் திடம் என்பது அதன் ஒரு பக்கவிளைவு மட்டும்தான். வாழ்க்கையில் சரியான வடிவியலை எட்டுவதுதான் முக்கியமானது, ஏனென்றால் பொருள்நிலையிலான பிரபஞ்சமே வடிவியல்தான்.

ஒரு கட்டிடம் இன்று நம் தலைமேல் இடிந்து விழுமா, அல்லது நெடுங்காலம் நீடித்து நிற்குமா என்பது, கட்டிடம் வடிவியல்ரீதியாக எந்த அளவு கச்சிதமாக இருக்கிறது என்பதைப் பொறுத்தது. இது உடலுக்கும் பொருந்தும், கோள்களுக்கும், பிரபஞ்சத்திற்கும், எல்லாவற்றுக்கும் பொருந்தும். பூமி சூரியனைச் சுற்றி வருவது, இரும்புக் கம்பியால் அதை இணைத்துள்ளதால் அல்ல, வடிவியல்ரீதியான கச்சிதத்தால். வடிவியல் ரீதியாகச் சிறு பிழை நேர்ந்தாலும், அது நிரந்தரமாகத் தொலைந்து மறைந்துவிடும். இது உங்களுக்கும் பொருந்தும். உங்கள் அடிப்படையான வடிவியலிலிருந்து நீங்கள் பிறழ நேர்ந்தால், தொலைந்து மறைந்துவிடுவீர்கள்.

இளமைப் பருவம் முதலே, சரியான வடிவியலைக் கொண்டுவரும் சரியான விஷயங்களை நீங்கள் செய்வது மிகவும் முக்கியம். அப்போதுதான் வாழ்க்கையை எதிர்கொள்ளும் திறமை படைத்தவராய் மாறுவீர்கள். தங்களுக்கு நல்ல விஷயங்கள் மட்டும்தான் நிகழ வேண்டும் என்று நினைப்பவர்கள் வாழத் தகுதியில்லாதவர்கள் என்பது தெள்ளத் தெளிவாகிறது, ஏனென்றால் கடினமான சூழ்நிலைகளை உங்களால் சந்தோஷமாக எதிர்கொள்ள முடியாவிட்டால், அனைத்து சாத்தியங்களையும் தவிர்ப்பீர்கள். சற்று சிரமத்தைத் தவிர்க்கும் நோக்கத்தில் வாழ்க்கையின் அற்புதமான சாத்தியங்கள் அனைத்தையும் தவிர்ப்பீர்கள். வடிவியல்ரீதியாக நீங்கள் சற்று இசைவாக இருந்தால் மட்டும்தான், சூழ்நிலை எப்படிப்பட்டதாக இருந்தாலும் அதை எதிர்கொள்ள விருப்பத்துடன் இருப்பீர்கள்.

வெள்ளி, 12 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon