மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 2 ஜூலை 2020

ஐநா தேர்தலில் இந்தியா வெற்றி!

ஐநா தேர்தலில் இந்தியா வெற்றி!

ஐநா சபையின் மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினர் பதவிக்கு நேற்று நடந்த தேர்தலில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

193 நாடுகள் உறுப்பினராகக் கொண்ட ஐநா சபை மனித உரிமை ஆணையத்திற்கு 18 உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் ரகசிய வாக்கெடுப்பு மூலம் சமீபத்தில் நடந்தது. இந்தத் தேர்தலில் ஆசிய பசிபிக் பிரிவில் இந்தியா போட்டியிடுவதாக அறிவித்தது. இப்பிரிவில் இந்தியா,பஹ்ரைன், வங்காள தேசம், பிஜி மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளும் போட்டியிட்டன. இத்தேர்தல் முடிவில் இந்தியாவுக்கு 188 நாடுகள் வாக்களித்துள்ளன. இதன் மூலம் இந்தியா ஐநா சபையின் மனித உரிமை ஆணையத்தில் மூன்றாண்டு உறுப்பினராகப் பணியாற்றும்.

மனித உரிமை ஆணையத்தில் உறுப்பினராகக் குறைந்தபட்சம் 97 நாடுகளின் ஆதரவு தேவை. ஆனால் இந்தியாவிற்கு 188 நாடுகள் வாக்களித்துள்ளன.

இது குறித்து ஐநாவுக்கான நிரந்தர இந்திய தூதர் சையது அக்பரூதீன் “இந்த வெற்றி சர்வதேச சமூகத்தில் இந்தியா மீதான நிலைப்பாட்டை பிரதிபலிக்கிறது” என தெரிவித்துள்ளார்.

2006ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த மனித உரிமை கவுன்சிலானது உலக நாடுகளின் மனித உரிமைகள், மனித சுதந்திரம் ஆகியவற்றை விசாரிக்கும் அமைப்பாக உள்ளது.

ஐ.நா மனித உரிமை கவுன்சில் உறுப்பினராக இந்தியா தேர்வாகியுள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று.வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சனி, 13 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon