மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 2 ஜூலை 2020

கோவா சட்டப்பேரவையை கலைக்க சிவசேனா மனு!

கோவா சட்டப்பேரவையை கலைக்க சிவசேனா மனு!

கோவா சட்டப்பேரவையை கலைக்க கோரி அம்மாநில ஆளுநரிடம் சிவசேனா மனு அளித்துள்ளது.

கோவா யூனியன் பிரதேசத்தின் முதல்வர் மனோகர் பாரிக்கர் உடல்நல குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். முதல்வர் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவருவதால் மாநில நிர்வாகம் முற்றிலும் முடங்கியுள்ளதாக குற்றம்சாட்டிய காங்கிரஸ் கட்சியினர், புதிய முதல்வரை நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். மேலும் மாநில ஆளுநர் மிருதுளா சின்ஹாவிடம் ஆட்சியமைக்க உரிமையும் கோரினர்.

இந்நிலையில் மருத்துவமனையிலேயே அமைச்சரவை கூட்டத்திற்கு முதல்வர் மனோகர் பாரிக்கர் நேற்று (அக்டோபர் 12) அழைப்பு விடுத்திருந்தார். கோவா அமைச்சர் ஷிரிபத் நாயக், கோவா பாஜக தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான வினய் டெண்டுல்கர் மற்றும் கோவா அமைச்சர்கள் மூவரை சந்தித்தார்.

இச்சந்திப்பை கண்டித்த கோவா மாநில சிவசேனா தலைவர் ஜிதேஷ் காமத், அம்மாநில ஆளுநர் மிருதுளா சின்காவை நேற்று (அக்டோபர் 12) சந்தித்து கோவா சட்டப்பேரவையை கலைக்க வேண்டும் என்று மனு அளித்தார். பின்னர் தலைநகர் பானஜியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஏன் அமைச்சரவையை மட்டும் அழைக்கிறார்? மொத்த சட்டப்பேரவையையும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்து ஆட்சி நடத்திக்கொள்ள வேண்டியது தானே? மருத்துவமனையில் அமைச்சரவை சந்திப்பு நடப்பது கோவாவிற்கு கேவலமாக இருக்கிறது" என குற்றம் சாட்டினார்.

மேலும் அவர், "மனோகர் பாரிக்கர் கணைய புற்றுநோய் காரணமாக சிகிச்சைக்கு சென்ற போதே கோவாவின் ஆட்சியும் அவருடன் நின்றுவிட்டது. அவருக்கு பின் எந்த செயல்பாடும் இங்கு நடைபெறவில்லை. எனவே தற்போதுள்ள பாரிக்கர் ஆட்சியை தகுதி நீக்கம் செய்வது மட்டுமில்லாமல் மொத்த சட்டசபையையும் கலைத்துவிட்டு, மக்களின் துயரத்தை துடையுங்கள் என்று ஆளுநர் மிருதுளா சின்காவை சந்தித்து கோரிக்கை வைத்தோம்" என்று கூறினார்.

கோவா சட்டப்பேரவையில் சிவசேனாவுக்கு ஒரு எம்.எல்.ஏ. கூட கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி, 12 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon