மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 16 ஜன 2021

ரஃபேல் இன்று: டசால்ட் சி.இ.ஓ. விளக்கம்!

ரஃபேல் இன்று: டசால்ட் சி.இ.ஓ. விளக்கம்!

ரஃபேல் ஒப்பந்தத்தில் இந்துஸ்தான் ஏரோனாட்டிக்கல் லிமிடெட் நிறுவனத்துக்குப் பதிலாக ரிலையன்ஸ் நிறுவனத்தை தேர்வு செய்தது ஏன் என டசால்ட் நிறுவனத்தின் சி.இ.ஓ. எரிக் ட்ராபியர் விளக்கமளித்துள்ளார்.

ரஃபேல் ஒப்பந்தம் குறித்த விவகாரத்தில் தினமும் ஒரு சர்ச்சை எழுந்து வருகிறது. பிரான்ஸின் மீடியா பார்ட் ஊடகம், டசால்ட் நிறுவனத்தின் ஆவணங்களின்படி ரஃபேல் ஒப்பந்தம் கையெழுத்தாக வேண்டுமெனில் ரிலையன்ஸ் குழுமம் கட்டாயம் சேர்க்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதாக செய்தி வெளியிட்டது. இந்த செய்தியை மேற்கொள் காட்டி ரஃபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்துள்ளது தெளிவாக தெரிகிறது. பிரதமர் மோடி ஊழல்வாதி என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.

இதற்கிடையே, பிரான்ஸ் ஊடகம் வெளியிட்ட செய்தி தவறானது என டசால்ட் நிறுவனம் விளக்கமளித்தது. எனினும், இந்திய அரசின் விருப்பத்திற்கு ஏற்ப டசால்ட் நிறுவனம் விளக்கமளிக்கும். மத்திய ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவசர அவசரமாக பிரான்ஸ் சென்றுள்ளது ரஃபேல் விவகாரத்தை மூடி மறைக்கவே என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியது.

ரபேல் விமானம் ஒப்பந்தம் இந்திய- பிரான்ஸ் அரசுகளுக்கிடையேயான ஒப்பந்தம். இதில் டாசல்ட் நிறுவனம் தான் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தை தேர்வு செய்தது. இதில் மத்திய அரசின் தலையீடு இல்லை என்று பிரான்ஸில் இருந்தபடி நிர்மலா விளக்கமளித்தார்.

தற்போது, ரிலையன்ஸ் நிறுவனத்தை தேர்ந்தெடுத்தது ஏன் என்று டசால்ட் நிறுவனத்தின் சீ.இ.ஓ. எரிக் ட்ராபியர் விளக்கமளித்துள்ளார்.

ஏ.எஃப்.பி. ஊடகத்திற்கு நேற்று முன்தினம் (அக்டோபர் 11 ) பேட்டியளித்த அவர், “பங்குதாரர்களை தேர்வு செய்வது என்பது எங்களை சார்ந்தது. இதையடுத்தே, ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து டசால்ட் –ரிலையன்ஸ் ஏரோஸ்பேஸ் லிமிடெட் தொடங்க முடிவு செய்தோம். நாக்பூரில் ஆலையும் கட்டப்பட்டது. ரஃபேல் விமானங்கள் தயாரிப்பதற்காக இந்தியாவில் நாங்கள் முதலீடு செய்ய உள்ள நிதியில் 10 சதவிகிதத்தைத் தான், ரிலையன்ஸில் முதலீடு செய்வோம். ரிலையன்ஸ் அல்லாமல் 100 இந்திய நிறுவனங்களில் முதலீடு செய்ய நாங்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இது மட்டுமல்லாமல் 30 நிறுவனங்களில் முதலீடு செய்வதை நாங்கள் உறுதிப் படுத்திவிட்டோம்” என்று கூறியுள்ளார்.

இந்துஸ்தான் ஏரோனாட்டிக்கல் லிமிடெட் நிறுவனத்துக்குப் பதிலாக ரிலையன்ஸ் நிறுவனத்தை தேர்வு செய்தது ஏன் என்ற கேள்விக்கு, “டசால்ட் –ரிலையன்ஸ் ஏரோஸ்பேஸ் லிமிடெட்|(டி.ஆர்.ஏ.எல்) மூலமாக இந்தியாவில் நீண்ட கால இருப்பை நிறுவ டசால்ட் நிறுவனம் முடிவு செய்தது. டி.ஆர்.ஏ.எலை இந்திய தலைமை நிர்வாக அதிகாரி ஒருவரும் பிரான்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி ஒருவரும் நிர்வகிப்பார்கள்.

இதன்மூலம், வர்த்தக செயல்பாடுகளில் தொழில்நுட்ப மற்றும் தொழிலக கட்டுப்பாடுகளை டசால்ட் தன்னகத்தே கொண்டுள்ளது. தனது தரம் மற்றும் நெகிழ்வுத்தன்மையை இதில் பொருத்திப்பார்க்கிறது.

விமான ஓடுபாதைக்கு அருகில் நிலம் கிடைத்ததால், நாக்பூர் தளம் தேர்வு செய்யப்பட்டது” என்று விளக்கமளித்துள்ளார்.

வெள்ளி, 12 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon