மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 19 செப் 2020

அக்.17: திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டம்!

அக்.17: திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டம்!

திமுக உயர் நிலை செயல்திட்டக் குழுக் கூட்டம் வரும் 17ஆம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பல்வேறு கட்சிகளும் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்களை நியமித்த அமமுக துணைப் பொதுச் செயலாளர் தினகரன், தேர்தல் ஆலோசனைக் கூட்டங்களையும் நடத்திவருகிறார். கடந்த ஜூலை மாதம் மதுரையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டோம் என்று பேசினார்.

இந்த நிலையில் திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் நேற்று (அக்டோபர் 12) அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “கழகத் தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுக உயர்நிலை செயல்திட்டக் குழுக் கூட்டம் வரும் 17ஆம் தேதி புதன் கிழமை காலை 10 மணியளவில், சென்னை அண்ணா அறிவாலயத்திலுள்ள கழக அலுவலகத்தில் நடைபெறும். உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தல் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு புகார் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது, அதுபோலவே அமைச்சர்கள் விஜயபாஸ்கர், தங்கமணி, வேலுமணி மீதான ஊழல் புகார்களும் வரிசை கட்டி நிற்கின்றன. இந்த நிலையில் அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்களை மக்களிடம் கொண்டு சேர்க்க அரசுக்கு எதிராக திமுக தலைமையில் அனைத்துக் கட்சிகளையும் ஒன்றாக அரவணைத்து பிரச்சார கூட்டியக்கம் தொடங்குவது குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து நேற்றைய டிஜிட்டல் திண்ணைப் பகுதியில் நாம் கூறியிருந்தோம் என்பது குறிப்பிடத்தக்கது.

சனி, 13 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon