மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 25 அக் 2020

முதல்வர் பதவி விலக வேண்டும்: வலுக்கும் கோரிக்கை!

முதல்வர் பதவி விலக வேண்டும்: வலுக்கும் கோரிக்கை!

முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேட்டு புகாரை சிபிஐ விசாரணை செய்ய வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், முதல்வர் பதவி விலக வேண்டும் என்கிற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.

நெடுஞ்சாலை டெண்டர்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது உறவினர்களுக்கு முறைகேடாக ஒதுக்கியதாகவும், இதுதொடர்பாக அவர் மீது வழக்கு பதிவு செய்யக் கோரியும் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இவ்வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, முதல்வர் மீதான புகாரை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டார்.

இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்கள், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தாமாக முன்வந்து பதவியிலிருந்து விலக வேண்டும், அல்லது ஆளுநர் அவரை நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

திமுக தலைவர், மு.க.ஸ்டாலின்

3120 கோடி ரூபாய் டெண்டர்களை தனது சம்பந்திக்கு கொடுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பினை வரவேற்கிறேன். இந்திய முதலமைச்சர்கள் வரலாற்றில் சம்பந்திக்கு ஒப்பந்தம், அதுவும் தான் வகிக்கும் துறையிலேயே கொடுத்தது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மட்டும்தான். அதுமட்டுமின்றி உலக வங்கி நிதி அளித்துள்ள ஊழல் எதிர்ப்பு விதிகளை எல்லாம் அப்பட்டமாக மீறி, தமிழகத்திற்கு சர்வதேச அளவில் அவமானத்தை ஏற்படுத்திய முதலமைச்சரும் இவரே என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், முதலமைச்சர் பதவியிலிருந்து எடப்பாடி பழனிசாமி உடனடியாக விலகி சுதந்திரமான ஊழல் விசாரணைக்கு வழி விட வேண்டும். ஆதாரங்கள் அழிப்பிற்கு இடமளித்து விடாமல் காலதாமதமின்றி சிபிஐ இந்த டெண்டர் ஊழல் வழக்கின் ஆவணங்களைப் பெற்று விசாரணையை துவங்கிட வேண்டும். 3120 கோடி ரூபாய் ஊழல் புகாரில் விசாரணைக்கு உத்தரவிட்ட பிறகும் முதலமைச்சர் பதவி விலக மறுத்தால், ஆளுநர் அவர்கள் சிபிஐ விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள முதலமைச்சரை உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும்.

பாமக நிறுவனர், ராமதாஸ்

ஊழலுக்கு எதிரான இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது ஆகும். முதல்வர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து தமிழக காவல்துறையின் கையூட்டு தடுப்புப் பிரிவு விசாரணைக்கு உயர் நீதிமன்றம் ஏற்கனவே ஆணையிட்டிருந்தது. ஆனால், கையூட்டுத் தடுப்புப் பிரிவு விசாரணை நம்பிக்கையளிக்கும் வகையில் இல்லை என்பதால் இந்த வழக்கை மத்தியப் புலனாய்வுப் பிரிவு விசாரணைக்கு நீதிமன்றம் மாற்றியுள்ளது.

எடப்பாடி பழனிச்சாமி மீதான ஊழல் புகார்களுக்கு முதற்கட்ட ஆதாரம் இருந்ததால் தான் சிபிஐ விசாரணைக்கு உயர் நீதிமன்றம் ஆணையிட்டிருக்கிறது. எனவே, நெடுஞ்சாலைத் துறை ஊழல்களுக்கு பொறுப்பேற்று முதலமைச்சர் பதவியிலிருந்து எடப்பாடி பழனிச்சாமி உடனடியாக விலக வேண்டும்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர், திருநாவுக்கரசர்

முதலமைச்சர் மீதான குற்றச்சாட்டுக்களை அவரது கட்டுப்பாட்டில் உள்ள காவல் துறையினர் முறையாக விசாரிக்க மாட்டார்கள் என்ற நிலையில், அனைவரும் எதிர்பார்த்தபடியே சென்னை உயர் நீதிமன்றமும் முறையான விசாரணை நடக்கவில்லை எனக் கூறி மத்திய புலனாய்வுத் துறைக்கு உத்தரவிட்டுள்ளது. மத்திய புலனாய்வுத் துறை முதலமைச்சர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும். எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டுமென தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக கேட்டுக் கொள்கிறேன்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர், கே.பாலகிருஷ்ணன்

சென்னை உயர்நீதிமன்றம் முதலமைச்சர் மீதான ஊழல் முறைகேடுகள் குறித்த புகார்கள் மீது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதை வரவேற்பதோடு, இவ்விசாரணை முடியும் வரை முதலமைச்சர் பொறுப்பில் எடப்பாடி பழனிச்சாமி நீடிக்க தார்மீக உரிமை இல்லை என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு சுட்டிக்காட்டுகிறது. மேலும் இந்த விசாரணை நேர்மையாக நடந்திட உயர்நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில் நடைபெற வேண்டும்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர், முத்தரசன்

முதலமைச்சர் பழனிசாமி தொடர்பான வழக்கை விசாரித்த லஞ்ச ஒழிப்புத் துறை, முதலமைச்சர் குற்றமற்றவர் என தெரிவித்துவிட்டது.இதனை உயர் நீதிமன்றம் ஏற்கவில்லை. தமிழ்நாடு காவல்துறையின் லஞ்ச ஒழிப்புப் பிரிவு விசாரணை மீது நம்பிக்கை இல்லை, எனவே மத்திய புலனாய்வுத் துறை விசாரிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முதலமைச்சரின் பொறுப்பில் உள்ள காவல்துறையின் விசாரணை மீது நம்பிக்கையில்லை என உயர்நீதிமன்றம் கூறியிருப்பதன் மூலம் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் பொறுப்பில் நீடிக்கும் தார்மீக உரிமையை இழந்து விட்டார். அவர் முதலமைச்சர் பொறுப்பிலிருந்து விலகி, மத்தியப் புலனாய்வுத் துறையின் விசாரணையை எதிர்கொள்ள வேண்டும்.

இவ்வாறு வலியுறுத்தியுள்ளனர்.

இந்த நிலையில், முதல்வர் பதவியில் எடப்பாடி பழனிசாமி நீடிப்பதற்கு நெருக்கடி முற்றியுள்ளது.

வெள்ளி, 12 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon