மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 19 செப் 2020

விமர்சனம்: ஆண் தேவதை!

விமர்சனம்: ஆண் தேவதை!

கடந்த சில வாரங்களாகத் தமிழ் திரையுலகில் பல நல்ல திரைப்படங்கள் வெளியாகி ஆரோக்கியமான சூழல் உருவாகியுள்ளது.இந்நிலையில் அதற்கு வலு சேர்க்கும் விதமாக இவ்வாரம் வெளியாகியிருக்கும் திரைப்படம் ஆண் தேவதை.

பெற்றோர்கள் தங்களின் வாழ்க்கையை பிள்ளைகளுக்காக வாழ்கின்றனர்; அதில் சில விதிவிலக்குக்கள் இருந்தாலும் பெரும்பான்மை இதுவாகவே இருந்து வருகிறது. பிள்ளைகளின் எதிர்கால திட்டத்திற்காக ஆசைகளுக்காகவும், தேவைகளுக்காகவும் பெற்றோர்கள் வாழ்க்கை அடமானம் வைக்கப்படும் சூழல் இன்றைய கார்ப்பரேட் உலகில் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. அந்த ஆசை, தேவை அவர்களை சார்ந்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறதா இல்லையா என்பதைப் புரிந்து கொள்ளாமல், சார்ந்தவர்களை இழப்பதற்கான சூழலும் ஏற்படுகிறது. அப்படிப்பட்ட சூழலை, சமகாலத்தின் நகர வாழ்க்கையை அலசும் திரைப்படம் ஆண் தேவதை.

தனது மகளிடம் ஒரு கேம் சொல்லி விளையாட ஆரம்பிக்கிறார் இளங்கோ (சமுத்திரகனி). வீடு, வேலை, பணம் இந்த மூன்றையும் கடவுள் வைத்திருக்கிறார். அந்த மூன்றையும் கடவுளிடமிருந்து பெறுவதே அந்த விளையாட்டின் வெற்றி. அந்த விளையாட்டில் இளங்கோவும், அவரது மகளும் ஜெயித்தார்களா, ஏன் அந்த விளையாட்டை அவர்கள் விளையாடுகிறார்கள் என்பதை இந்த விளையாட்டின் பின்னணியில் தனது ஆண் தேவதை மூலம் இன்றைய தலைமுறைக்கு ஒரு பாடம் சொல்ல முன்வந்துள்ளார் இயக்குநர் தாமிரா.

படத்தில் பேச வந்திருக்கும் பிரச்சினை வேறாக இருந்தாலும், இந்த விளையாட்டு மிக முக்கியமான அங்கம். காரணம் குழந்தைகளிடம் நாம் சொல்ல வரும் விஷயம் விளையாட்டு போல் சொல்லி புரியவைக்க வேண்டும் என்பதே இயக்குநரின் நோக்கமாக இருக்கலாம்.

ஐடி நிறுவனத்தில் வேலை பார்க்கும் பலரது வாழ்க்கை முறை, அங்கு வேலைக்கு சேர்ந்த பின் அவர்களது வாழ்வில் நிகழும் மாற்றங்கள் போன்றவற்றை வெளிச்சமிடுவதோடு, ஆடம்பர வாழ்க்கைக்கு தள்ளப்படுகிற இந்த தலைமுறையினர் கிரெடிட் கார்டுகள், வீட்டு லோன், கார் லோன் என அடுத்தடுத்து சிக்கிக் கொள்பவர்களின் முடிவுகள் எந்த மாதிரியான விளைவுகளை உண்டாக்குகிறது என்பதையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. மேலும் வேலை பளு, பெற்றோர்களுக்கிடையேயான ஈகோ போன்றவற்றால் குழந்தைகள் எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள் என்பதுதான் படத்தின் உயிர் நாடி.

‘தூய்மையான எண்ணம், எளிமையான வாழ்க்கை’ என்பது படத்தின் அடிநாதமாகப் பல இடங்களில் வலியுறுத்தப்படுகிறது. ‘பேண்ட பீயை இடுப்பில் கட்டிட்டு சுத்துரது தான் நாகரீகமா?’ ‘வாழ்றதுக்காக வேலை பார்க்கிறோமா, வேலை பார்ப்பதற்காக வாழ்றோமா?’ போன்ற வசனங்கள் நம்மை நாமே சுயபரிசோதனை செய்ய வைக்கிறது.

வீட்டிலிருந்து ஒரு பெண் பிள்ளையை வெளியே கூட்டி வரும் ஒரு தகப்பனின் நிலையை அலசும் இடங்களில் பார்வையாளனை பல இடங்களில் கண் கலங்க வைக்கிறது. அறை எடுத்து தங்குமிடமும், ரயில், காவல் நிலையம்... எனப் பல இடங்களில் சமுத்திரகனியும் அவரது மகளும் பயணிக்குமிடங்களில் நடுத்தர வர்க்கத்தின் தந்தைமார்களும் பயணிக்கிறார்கள்.

கிளைமாக்ஸ் காட்சியில் எங்கு சண்டைக் காட்சி வைத்துவிடுவாரோ என்றிருந்த போது, ஆச்சர்யமான முடிவு. குழந்தைகளையும், அவர்களை சார்ந்தவர்களையும் படம் மையப்படுத்தியுள்ளதால் ஆபாசமோ, வன்முறையோ இல்லாமல் என்ன சொல்ல வந்தமோ அதில் மட்டும் கவனம் எடுத்துள்ளார் இயக்குநர்.

இத்தனை நாள் இஸ்லாமியர்களைத் தீவிரவாதிகளாகவே பார்த்த பார்வையாளனுக்கு அவர்களின் மறுபக்கம் காட்டிய இடத்திலும். துணி தேய்க்கும் வேலை செய்பவர் தனது மகளுக்காக வாழ்பதை பார்த்து ரம்யா பாண்டியன், தனது குழந்தைகளுக்காக இனி வாழ வேண்டும் என்று உணரும் காட்சிகளும், விலை மாது வந்து போகுமிடங்களும் இயக்குநரின் டச் தெரிகிறது.

இப்போதுதான் பெண்கள் வெளியில் வந்துள்ளனர். மறுமடியும் அவர்களை வீட்டிலே இருக்க வைக்கும் முடிவு முரண். ஆண், பெண் இருவருமேதான் தவறு செய்கிறார்கள். அதை அவர்களின் அனுபவங்களின் மூலமாகவும், அனுபவசாலிகளின் மூலமாகவும் உணரும் தருணம் வாழ்வின் அர்த்தங்களை அறியவும், வாழ்வின் பக்குவத்திற்கான ஓர் இடமாகவும் உருவாகிறது.

சமுத்திரகனி நடித்த, இயக்கிய திரைப்படம் என்றால் அறிவுரை, வசனங்கள் மிளிரும். இதிலும் அத்தகைய அம்சங்கள் இருந்தாலும் உறுத்தாமல் அமைந்துள்ளது. ரம்யா பாண்டியன் தன் பாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். ஆவேசப்படும் போதும் சரி, அழும்போதும் சரி நாம் பார்த்த, பழகிய பெண்களாகவே தெரிகிறார். குழந்தை நட்சத்திரங்கள் கவின், மோனிசா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். குறைந்த நேரமே வந்தாலும் ராதா ரவி, இளவரசு, அறந்தாங்கி நிஷா, காளி வெங்கட் மனதில் பதிகிறார்கள். ஹரிஷ் பெரடி, சுஜா வருணி தங்களது கதாபாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர்.

ஜிப்ரானின் பின்னணி இசை ஒரு சில இடங்ளில் இரைச்சலாக இருந்தாலும், பல இடங்களில் படத்திற்கு உயிரூட்டுகிறது. ‘நிகரா தன் நிகரா’ பாடல் முணுமுணுக்கும் படி அமைந்திருக்கிறது. காசிவிஸ்வநாதனின் படத்தொகுப்பும், விஜய் மில்டனின் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்கபலம். அதிலும் சில கேண்டிட் ஷாட்டுகள் படத்தோடு பார்வையாளனை ஒன்ற வைக்கின்றன.

அங்கங்கே ஒரு சில குறைகள் தென்பட்டாலும், சமகால பிரச்சினைகளை, முரண்களை நேர்மையாக அலசியுள்ள ஆண் தேவதை கண்டிப்பாக குடும்பத்துடன் பார்க்க வேண்டிய திரைப்படம்.

சனி, 13 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon