மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 22 ஜன 2021

பூக்கடைகளைத் திறக்க உத்தரவு!

பூக்கடைகளைத் திறக்க உத்தரவு!வெற்றிநடை போடும் தமிழகம்

சென்னை பாரிமுனை பத்ரியன் தெருவிலுள்ள பூக்கடைகளுக்கு வைக்கப்பட்ட சீலை இன்று மாலை ஐந்தரை மணிக்குள் அகற்ற வேண்டுமென்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை பாரிமுனை அருகேயுள்ள பத்ரியன் தெருவில் அதிக எண்ணிக்கையில் பூக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. இங்குள்ள பூ வியாபாரிகளுக்கு, கோயம்பேடு சந்தையில் இடம் ஒதுக்கப்பட்டது. ஆனாலும், பத்ரியன் தெருவில் பலர் தங்களது வியாபாரத்தைத் தொடர்ந்து வந்தனர். இது தொடர்பாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், பத்ரியன் தெருவில் தங்களை பூ வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டுமென்றும், அதிகாரிகள் எந்தவித இடையூறும் செய்யக்கூடாது என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சென்னை பத்ரியன் தெருவில் உள்ள அனைத்து பூக்கடைகளுக்கும் சீல் வைக்குமாறு சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்துக்கு சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன் உத்தரவிட்டார். அதன் அடிப்படையில், அக்டோபர் 11ஆம் தேதியன்று 129 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டன. தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. நேற்று (அக்டோபர் 12) மதியம் இந்த மனு விசாரணைக்கு வந்தது.

விசாரணையின் முடிவில், பூக்கடைகளுக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றுமாறு இடைக்கால உத்தரவு பிறப்பித்தனர் நீதிபதிகள். தொடர்ச்சியாக விழாக்கள் வருவதனால் பொதுமக்கள் நலன் கருதி இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுவதாகவும், இரண்டு கிலோவுக்கு மேல் உள்ள எடைக்கற்களை வியாபாரிகள் பயன்படுத்தக் கூடாது என்றும் தெரிவித்தனர். நவராத்திரி விடுமுறைக்குப் பின் விசாரணை நடைபெறும் என்று கூறி, இந்த வழக்கை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

வெள்ளி, 12 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon