மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 13 அக் 2018

ஆளுநரை திரும்பப் பெற வேண்டும்!

ஆளுநரை திரும்பப் பெற வேண்டும்!

விடுதலை நாளிதழின் சார்பில் ‘பத்திரிகை சுதந்திர பாதுகாப்பும் - பாராட்டும்’ என்னும் தலைப்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், ஆளுநரை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சென்னை வேப்பேரியிலுள்ள பெரியார் திடலில் விடுதலை நாளிதழின் சார்பில் ‘பத்திரிகை சுதந்திர பாதுகாப்பும் - பாராட்டும்’ எனும் தலைப்பில் நேற்று (அக்டோபர் 11) பொதுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் வரவேற்புரையாற்றினார். திராவிடர் கழகத்தின் தலைவரும், ‘விடுதலை’ ஆசிரியருமான கி.வீரமணி தலைமை வகிக்க, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன், இந்து என்.ராம், மணிச்சுடர் கே.ஏ.எம்.அபுபக்கர், மமக தலைவர் ஜவாஹிருல்லா, தீக்கதிர் முன்னாள் பொறுப்பாசிரியர் அ.குமரேசன், கலைஞர் தொலைக்காட்சி செய்தி ஆசிரியர் ப.திருமாவேலன் ஆகியோர் உரையாற்றினர்.

தலைவர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் உரையாற்றிதன் தொகுப்பை பின்வருமாறு காண்போம்...

கலைஞர் தொலைக்காட்சி செய்தி ஆசிரியர் திருமாவேலன்

வாஷிங்டன் போஸ்ட் என்ற இதழில் நிர்மலா தேவி விவகாரத்தைப் பற்றிய கட்டுரை எழுதுகிறார்கள் என்றால் நாம் ஆளுநருக்குத் தான் நன்றி செலுத்த வேண்டும். ஒரு பத்திரிகை ஒருவரைப் பற்றி ஒரு கருத்து சொல்கிறது என்றால், அதற்குச் சம்பந்தப்பட்டவர் விளக்கம் தர வேண்டும், ஆனால் ஆளுநர் மாளிகை விளக்கம் தரவில்லை. செய்தியில் பிரச்சனை இருந்தால் நோட்டீஸ் தரலாம், அதையும் ஆளுநர் மாளிகை தரவில்லை, அவதூறு வழக்குத் தொடுக்கலாம் அதையும் அவர்கள் செய்யவில்லை. அதை விடுத்து ஆளுநர் பணியை தடுத்ததாக வழக்குப் பதிவு செய்யப்படுகிறது. நிர்மலா தேவி வழக்கிற்கும், ஆளுநர் பணியை தடுப்பதற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? எதை மூடி மறைக்க முயற்சி செய்கிறார்கள்? இப்படியான கேள்விகள் எழும் போது, இன்று சட்டத்தின் ஆட்சி நடக்கவில்லை, தனிமனிதரின் ஆட்சி தான் நடக்கிறது என்று தான் தெரிகிறது.

தீக்கதிர் முன்னாள் பொறுப்பாசிரியர் குமரேசன்

“ஊடக சுதந்திரம் என்பது தனக்கு தெரிந்த தகவலை தனக்குப் புரிந்த விதத்தில் சொல்வது தான். ஊடக சுதந்திரம் என்பது பத்திரிக்கையாளர்களின் சுதந்திரம் மட்டும் இல்லை, மக்களின் அடிப்படை சுதந்திரமும் கூட. தனது தவறுகளை மறைகின்ற விதத்தில் அரசு உண்மைகளை மறைத்துக்கொண்டு இருக்கிறது.

மணிச்சுடர் ஆசிரியர், கே.ஏ.எம்.அபுபக்கர்

ஆளுநர் என்பவர் மத்திய அரசின், ஜனாதிபதியின் பிரதிநிதியாக மாநிலங்களின் உரிமைகளுக்காக பாடுபட்ட வேண்டும். ஆனால் இவரோ மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கும் விதத்தில் நடந்துகொள்கிறார். இவரால் தமிழகத்தின் ஆட்சி ஒரு காட்சி பொருளாக ஆக்கிவிட்டது. ஒரு பத்திரிகை தவறான தகவலை வெளியிட்டால் மறுப்பு சொல்லி அறிக்கை விடுங்கள். அதை விட்டுவிட்டு ஏன் வழக்கு தொடர்ந்து கேவலப்பட்டுக் கொள்கிறீகள்.

நக்கீரன் ஆசிரியர், கோபால்

.நான் ஆளுநரை மிரட்டியதாக வழக்கு தொடுத்தார்கள், ஆனால் ஆளுநர் மாளிகை தான் நக்கீரனை மிரட்டியது. ஜெயலலிதா ஆட்சியில் டான்சி வழக்கு தீவிரமான போது ஆளுநர் சென்னா ரெட்டி வாகனத்தை திண்டிவனத்தில் மறித்து அதிமுக தொண்டர்களால் தாக்கப்பட்டதே, அப்போது 124 சட்டப்பிரிவை எப்போது பயன்படுத்தியிருக்கலாமே தவிர நிர்மலாதேவியின் விவகாரத்தில் தொடுக்க முடியாது. நாங்கள் செய்த புலனாய்வு என்பது நிர்மலாதேவியிடம் இருந்து நூலை பிடித்தால் அது நேராக மதுரை சென்று பின் ஆளுநர் மாளிகைக்கு வருகிறது. அப்படி தான் புலனாய்வு செய்தோம். ஆகவே இனி நூறு 124 பிரிவு வழக்குகள் வந்தாலும் நான் எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன்.

இந்து என்.ராம்

“நீதிமன்றத்தில் என் கருத்தையும் பதிவு செய்த அனுமதித்தார் மாஜிஸ்ட்ரேட். 124 சட்டப் பிரிவுக்கும் நக்கீரன் இதழில் வந்த கட்டுரைக்கும் எந்த விதமான சம்பந்தமும் கிடையாது. இந்தப் பிரிவின் கீழ் கைது செய்ததோடு அல்லாமல், நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டால், இந்தியாவுக்கே மோசமான முன்னுதாரணம் ஆகிவிடும். ஜனநாயக எதிரிகள் இதைப்பயன்படுத்தி பேச்சு சுதந்திரம், கருத்து சுதந்திரம், பத்திரிகை சுதந்திரத்தை முழுவதுமாக நசுக்கிவிடுவார்கள் என்று எனது கருத்தை கூறினேன். அதை நீதிபதி ஏற்றுக்கொண்டார்.

மமக தலைவர் ஜவாஹிருல்லா

ஆளுநரின் பணியை செய்ய விடாமல் தடுக்கப்பட்டதாக வழக்குப் பதியப்பட்டுள்ளது என்றால் நக்கீரன் பத்திரிக்கையை பனி செய்ய விடாமல் தடுத்த ஆளுநர் மீதும், ஆளுநரின் தனி செயலாளர் மீதும், காவல் துறை மீதும் வழக்கு தொடரப்பட வேண்டும்.

இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர், முத்தரசன்

தமிழகத்தில் சட்டப்படி ஆட்சி நடக்கிறது என்றால் முதலில் கைது செய்யப்பட வேண்டியது ஆளுநர்தான். நக்கீரன் தனக்கு தோன்றியதை எழுதிவிடவில்லை. நிர்மலாதேவியின் வாக்குமூலத்தை தான் வெளியிட்டுள்ளது. இந்த விவகாரம் வந்தவுடன் ஆளுநர் ஏன் அவசர கோலத்தில் விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும்? மாநில அரசு இருக்கிறது, ஆளுநர் பரிந்துரை செய்யலாமே தவிர முனைப்போடு ஆணையம் அமைத்தது எதை மறைப்பதற்காக?

இதுகுறித்து நக்கீரன் எழுதுவதால்தான் நிர்மலா தேவியின் உயிர் காப்பாற்றப் பட்டிருக்கிறது. நிர்மலா தேவியின் விவகாரம் வெளியே தெரிய வேண்டுமானால், ஆளுநரையும், அவரது தனி செயலாளரையும் கைது செய்து விசாரிக்க வேண்டுமே தவிர நக்கீரன் கோபாலை கைது செய்தது தவறு. நக்கீரன் வெளியிட்ட செய்தி உண்மையானது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

இந்தக் கைதுக்கெல்லாம் நக்கீரன் கோபால் பயப்படப் போவதில்லை. பொடாவை, தடாவைப் பார்த்தவர் அவர். எத்தனையோ அவதூறு வழக்குகளையும் சந்தித்தவர், எத்தனையோ சிறைகளில் அடைபட்டு இருந்தவர். அவர் இதுபற்றியெல்லாம் சிறுதுளி கூட கவலைப்படப்போவது கிடையாது. அட்டைப்படத்தில் ஜெயலலிதாவை ஹிட்லர் போலச் சித்தரித்தவர். ஹிட்லருக்கே பயப்படாதவர் இந்த ஜோக்கருக்கோ, எடுபிடிக்கோவா பயந்துவிடப்போகிறார். கோட்டையில் இருக்கக்கூடியவர்கள் இவ்வளவு ஊழல் செய்திருக்கிறோமே என்று ஊழலைப் பார்த்து பயந்துகொண்டிருக்கிறார்கள். கிண்டியில் இருக்கக்கூடியவர் இன்றைக்கு யாருக்கு பயந்துகொண்டிருக்கிறார் என்பது உங்களுக்குத் தெரியும். அவர் நிர்மலா தேவிக்கு பயந்துகொண்டிருக்கிறார்.

ஹெச்.ராஜா, எஸ்.வி.சேகரை கைது செய்யவில்லை, இப்படி இருக்கும் போது நக்கீரன் கோபால் மட்டும் கைது செய்யப்படுகிறார். எனவே ஆளுநர் பதவி விலகும் வரை தொடர்ந்து நாம் போராடுவோம் வெற்றி பெறுவோம்.

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி

ஜனநாயகத்தின் நான்காவது தூண் காப்பாற்ற வேண்டிய நிலையில் இருக்கும் போது அந்த கடமையை செய்வது தான் முதல் கடமை. அதனால் தான் சம்பவம் நடந்த அடுத்த இரண்டாவது நாளே இந்நிகழ்ச்சியை நடத்துகிறோம். தந்தை பெரியார் தனது கூட்டத்தில் “நான் சொல்வதை நம்பாதீர்கள், நான் சொல்வதை மறுக்கும் உரிமை உங்களுக்கு இருக்கிறது, மறுக்கும் உரிமை இருப்பதாலே நான் சொல்கிற உரிமை எனக்கும் இருக்கிறது” என்பார். அதே போல் தான் கருத்து சொல்கின்ற போது தவறு இருந்தால் அவதூறு வழக்கு தொடரலாம். சட்டத்தைத் தவறாக பயன்படுத்தக் கூடாது. ஜனநாயகத்தில் எந்த பத்திரிகையின் குரல்வளை நெறிக்கப் பட்டாலும், நாங்களும் போராடுவோம், ஏனென்றால் கொள்கை வேறு, பத்திரிகை சுதந்திரம் வேறு.

ராஜேஷ் தாஸ் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு: வெளியான அதிர்ச்சித் தகவல்! ...

6 நிமிட வாசிப்பு

ராஜேஷ் தாஸ் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு: வெளியான அதிர்ச்சித் தகவல்!

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - சங்கரா மீனும் கெட்டியான குழம்பும்! ...

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - சங்கரா மீனும் கெட்டியான குழம்பும்!

'மன்னிப்பு கேட்க வேண்டும்': தலைமை நீதிபதிக்கு எதிராக வலுக்கும் ...

6 நிமிட வாசிப்பு

'மன்னிப்பு கேட்க வேண்டும்': தலைமை நீதிபதிக்கு எதிராக வலுக்கும் குரல்கள்!

சனி 13 அக் 2018