மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 19 செப் 2020

சிறப்புக் கட்டுரை: பணமதிப்பழிப்பு எந்த நாட்டுக்கும் தேவையல்ல!

சிறப்புக் கட்டுரை: பணமதிப்பழிப்பு எந்த நாட்டுக்கும் தேவையல்ல!

மஹுவா வெங்கடேஷ்

இந்தியாவில் நிகழ்ந்த மிகப்பெரிய பொருளாதாரச் சீரழிவான பணமதிப்பழிப்பு குறித்து பொருளாதார வல்லுநரான கீதா கோபிநாத் தனது கருத்துகளைப் பகிர்ந்துகொள்கிறார். எந்த நாட்டுக்குமே பணமதிப்பழிப்பைப் பரிந்துரைக்கத் தேவையில்லை என்று அவர் கூறுகிறார்.

சர்வதேச நாணய நிதியத்தில் புதிய பொருளாதார வல்லுநராக கீதா கோபிநாத் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நரேந்திர மோடியின் பணமதிப்பழிப்பு நடவடிக்கையை விமர்சித்துள்ளார். எனினும், ஜிஎஸ்டி சட்டம் ஒரு உண்மையான சீர்திருத்த நடவடிக்கை என்று அவர் கூறுகிறார்.

கடந்த ஆண்டில் ஒரு நேர்காணலில் தி பிரிண்ட் ஊடகத்திடம் கீதா கோபிநாத் பேசுகையில், எந்தவொரு வளரும் பொருளாதாரத்துக்கும், வளர்ந்த பொருளாதாரத்துக்கும் பணமதிப்பழிப்பு நடவடிக்கையைப் பொருளாதார வல்லுநர்கள் பரிந்துரைக்க மாட்டார்கள்.

2016 நவம்பர் 8ஆம் தேதியன்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த பணமதிப்பழிப்பு நடவடிக்கை நாட்டின் பொருளாதாரத்தையே உலுக்கியது. நாட்டில் புழக்கத்திலிருந்த ரொக்கத்தில் 86 விழுக்காட்டைப் பணமதிப்பழிப்பு உறிஞ்சி எடுத்துவிட்டது.

பணமதிப்பழிப்பு

நேர்காணலின்போது, பணமதிப்பழிப்பு அறிவிப்பு ஒரு முன்னறிவிப்பு இல்லாத நடவடிக்கை என்று கீதா கோபிநாத் கூறினார். அவர் பேசுகையில், “வழக்கத்திற்கு மாறாக முன்னறிவிப்பு இல்லாமல் எடுக்கப்பட்ட முயற்சி மட்டுமல்ல, கோட்பாடுகளின் அடிப்படையிலும் முன்னறிவிப்பு இல்லாத நடவடிக்கையாகும். என்னுடன் பணிபுரியும் அனைத்துப் பொருளாதார வல்லுநர்களும், வளர்ந்து வரும் பொருளாதாரத்துக்குப் பணமதிப்பழிப்பு நடவடிக்கையைப் பரிந்துரைக்க மாட்டார்கள்” என்று கூறினார்.

ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் பொருளாதாரத் துறையில் பேராசிரியராகப் பணிபுரியும் ஜான் ஸ்வான்ஸ்திரா பேசுகையில், “வளர்ந்த பொருளாதாரங்களுக்கும் கூட பணமதிப்பழிப்பை பரிந்துரைக்கக்கூடாது” என்று கூறினார்.

எனினும், பணமதிப்பழிப்பின் தாக்கத்தால் ரொக்கப் பணம் வங்கிகளில் குவிந்து, குறைவான ரொக்கத்தைக் கொண்ட பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்க முடியும் என்று கீதா கோபிநாத் கூறினார். அவர் பேசுகையில், “பணமதிப்பழிப்பைப் பொறுத்தவரையில், அதன் மிகப்பெரிய நல்ல விஷயம் என்னவென்றால் ரொக்கமில்லாப் பொருளாதாரத்துக்கு மாறிவிட முடியும். அமைப்பு சாரா பொருளாதாரத்தின் சில பிரிவுகள் அமைப்புக்குள் வந்திருக்கலாம். இந்த மாற்றம் அனைத்துமே மெதுவாகத்தான் நடக்கும் என்பதை நாங்கள் அறிவோம். ஆகையால் எதுவுமே உடனடியாக நடந்துவிட வேண்டும் என்று நான் எதிர்பார்ப்பதில்லை” என்று அவர் கூறினார்.

ரொக்கம் அதிகமாக இருந்தால் ஊழல் அதிகமாக இருக்கும் என்றும், ஜப்பானில்தான் ரொக்கம் மிக அதிகமாக உள்ளதாகவும் கீதா கோபிநாத் கூறினார்.

கீதா கோபிநாத் பிசினஸ் ஸ்டாண்டர்டு ஊடகத்துக்கு அளித்த பேட்டி ஒன்றில், “இந்தியாவில் புழக்கத்தில் உள்ள ரொக்கத்தின் மதிப்பு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 விழுக்காடாக உள்ளது. ஆனால் ஜப்பானிலோ 60 விழுக்காடாக உள்ளது. அது கருப்புப் பணமும் அல்ல, ஊழலும் அல்ல” என்று கூறியிருந்தார். அதே நேர்காணலில், ஜிஎஸ்டி வரி முறை சாதகமாக அமையும் எனவும், அது ஒரு உண்மையான சீர்திருத்தம் எனவும் கூறியிருந்தார். பொருளாதாரத்தை முறைப்படுத்துவதற்கும், வரி இணக்கத்தை உறுதி செய்வதற்கும் ஜிஎஸ்டி உதவிகரமாக இருக்கும் என்று அவர் கூறினார். பணமதிப்பழிப்பின் விளைவுகளைச் சமாளிக்க எடுத்துக்கொண்ட காலத்தில் ஜிஎஸ்டியை சுமூகமாக அமல்படுத்தியிருக்க வேண்டும் என்று கீதா கூறுகிறார்.

ரிசர்வ் வங்கியின் பங்கு

பணமதிப்பழிப்பின்போது ரிசர்வ் வங்கியின் தகவல் யுக்தி குறித்தும் கீதா கோபிநாத் விமர்சித்துள்ளார். அவர் பேசுகையில், உண்மைச் சூழல் என்ன, எவ்வாறு செயல்பட வேண்டுமென்பது குறித்து பொதுமக்களிடம் ரிசர்வ் வங்கி வெளிப்படுத்தியிருக்க வேண்டும் என்று கூறினார். “குறிப்பிட்ட ஒரு கொள்கை, பொருளாதாரத்தை எவ்வாறு பாதிக்கும் என்பது குறித்து ஒரு வெளிப்படைத்தன்மை இருந்திருக்கலாம்” என்கிறார் கீதா.

பணமதிப்பழிப்பு நடவடிக்கையில் ரிசர்வ் வங்கியின் பங்கு குறித்து ஏராளமான கேள்விகள் எழுந்தன. ரிசர்வ் வங்கியின் ஆளுநராக உர்ஜித் பட்டேல் நியமிக்கப்பட்டது தனக்கு மகிழ்ச்சியளித்ததாக கீதா கோபிநாத் கூறுகிறார்.

தகவல் குறைபாடு

தகவல்களைச் சேகரிப்பதில் இந்தியா கவனம் செலுத்த வேண்டுமெனவும், நம்பத்தகுந்த விவரங்களைச் சேகரிப்பது இந்தியாவில் மிகக்கடினமான வேலை எனவும் கீதா கோபிநாத் பிசினஸ் ஸ்டாண்டர்டு ஊடக நேர்காணலில் கூறினார். ”இந்தியாவின் கொள்கைக்குப் பொதுவாக என்ன செய்யப்பட வேண்டுமென்றால் சிறந்த தகவல்கள் சேகரிக்கப்பட வேண்டும். மொத்த உள்நாட்டு உற்பத்தி குறித்து எல்லா இடங்களிலும், எல்லோரும் சந்தேகித்துக் கொண்டிருப்பது சரியானதல்ல” என்று கூறினார்.

மேலும், இந்தியாவில் முதலீடுகள் குறைவாகவே இருப்பதாகவும், பணமதிப்பழிப்புக்கு முன்னதாகவும் முதலீடுகள் குறைவான போக்கிலேயே இருந்ததாகவும் கீதா கோபிநாத் குறிப்பிடுகிறார்.

நன்றி: தி பிரிண்ட்

தமிழில்: அ.விக்னேஷ்

நேற்றைய கட்டுரை: விவசாயத் துறையில் பெண்களின் பங்கு!

வெள்ளி, 12 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon