மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 13 ஜூலை 2020

சைவத்துக்கு மாற உத்தரவிட முடியாது!

சைவத்துக்கு மாற உத்தரவிட முடியாது!

இந்தியாவிலுள்ள அனைவரையும் சைவத்திற்கு மாற உத்தரவிட முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஹெல்த்தி வெல்த்தி எத்திகல் வேர்ல்டு (Healthy Wealthy Ethical World) மற்றும் கைடு இந்தியா அறக்கட்டளை (Guide India Trust) என்ற இரண்டு தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் பொதுநல வழக்கொன்றை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தன. “இயற்கையான சைவ உணவுகளே உடலுக்கு ஆரோக்கியம். அதனால், இந்தியாவில் மாமிசத்திற்குத் தடை விதிக்க வேண்டும். இறைச்சியைச் சாப்பிடுவதற்கும், ஏற்றுமதி செய்வதற்கும் தடை விதிக்க வேண்டும்” என்று அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவானது நேற்று (அக்டோபர் 12) உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி மதன் பி லோகூர் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்தியாவிலுள்ள அனைவரையும் சைவமாக மாற வேண்டுமென்று நீங்கள் விரும்புகிறீர்களா என்று மனுதாரர் தரப்பிடம் கேள்வி எழுப்பினார் நீதிபதி. “இந்தியாவிலுள்ள அனைவரையும் சைவத்துக்கு மாறுங்கள் என உத்தரவிட முடியாது” என்று கூறிய நீதிபதி மதன் பி லோகூர், இந்த வழக்கு விசாரணையை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்துக்கு ஒத்திவைத்தார்.

மாடுகளை இறைச்சிக்காக வாங்கவோ, விற்கவோ கூடாது என்று, கடந்த ஆண்டு மாட்டிறைச்சிக்குத் தடை விதித்து உத்தரவிட்டது மத்திய அரசு. இந்த அறிவிப்பை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி, 12 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon