மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 8 ஏப் 2020

டிஜிட்டல் திண்ணை: கமல் பயணம்… எடப்பாடி போட்ட தடை!

டிஜிட்டல் திண்ணை: கமல் பயணம்… எடப்பாடி போட்ட தடை!

மொபைலில் டேட்டா ஆன் செய்துவிட்டுக் காத்திருந்தோம். வாட்ஸ் அப் மெசேஜ் வந்து விழுந்தது.

“கமல் கடந்த இரண்டு நாட்களாக சேலம், நாமக்கல் எனச் சுற்றி வருகிறார். கல்லூரிகளுக்குப் போகிறார். மாணவ, மாணவியர் மத்தியில் பேசுகிறார். கமல் நடவடிக்கைகளை உளவுத் துறை உன்னிப்பாகக் கவனித்துவருகிறது. கமலின் சேலம் விசிட்டில் உளவுத் துறை கூடுதல் கவனத்தோடு இருக்கிறது.

காரணம், அது முதல்வர் மாவட்டம் என்பதால். அதனால் கமல் சேலம் விமான நிலையத்தில் இறங்கியதில் இருந்து ஒவ்வொரு மூவ்மெண்ட்டையும் அப்டேட் செய்தபடியே இருக்கிறது உளவுத் துறை போலீஸ்.

குறிப்பாக ராசிபுரத்தில் கல்லூரி மாணவர்களிடம் கமல் பேசிக்கொண்டிருந்தபோது, ‘நீங்க முதல்வரானால் முதல் கையெழுத்து எதற்காக போடுவீங்க?’ என்று கேட்டனர். அதற்குப் பதிலளித்த கமல், ‘முதல்வரானா முதல்ல உடல் நலனை பத்திரமா பாத்துப்பேன்’ என்று பொடி வைத்துப் பேசிவிட்டு, ‘ ஊழலை ஒழிக்கும் லோக் ஆயுக்தா சட்டத்துக்காகத்தான் முதல் கையெழுத்து போடுவேன்’ என்று சொல்ல கல்லூரி மாணவர்கள் ஆரவாரம் எழுப்பினர். இந்த சம்பவம் உட்பட, கல்லூரி மாணவர்களிடையே கமலுக்குக் கிடைத்து வரும் பெரிய வரவேற்பு உடனுக்குடன் மேலிடத்துக்கு ரிப்போர்ட் ஆனது.

‘கல்லூரி மணவர்களிடம் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில்தான் கமல், கல்லூரியை டார்கெட் செய்து பயணிக்கிறார். கல்லூரி மாணவர்களிடம் அவர் பேசும் பேச்சு, ஆளுங்கட்சிக்கு எதிரானதாகவும், ஆளுங்கட்சியைக் கடுமையாக விமர்சனம் செய்வதாகவுமே இருக்கிறது. நல்ல ஆட்சியைத் தங்களால் மட்டுமே தர முடியும் என கமல் சொல்லிவருகிறார். கல்லூரி மாணவர்களிடம் இது ஒருவிதமான தாக்கத்தை உண்டாக்கிவருகிறது.

கிராம சபைக் கூட்டம் நடத்தி கிராம மக்களைத் தன் பக்கம் இழுக்க ஒருபக்கம் முயற்சி செய்து வருகிறார் கமல். அவரது அடுத்த டார்கெட் கல்லூரி என்பது தெளிவாகத் தெரிகிறது. சேலம், நாமக்கல் மாவட்டங்களில் முதல்வரைப் பற்றிய விமர்சனங்களைக் கல்லூரி மாணவர்களிடம் முன்வைக்கும்போது, கைதட்டல் அதிகமாக இருந்தது. கல்லூரி மாணவர்களிடம் விதைப்பது அவர்களின் வீடு வரை எதிரொலிக்கும்...’ என உளவுத் துறை அதிகாரி ஒருவர் முதல்வர் எடப்பாடியிடம் நேரடியாகவே சொல்லிவிட்டாராம்.

அதைக் கேட்டு அதிர்ந்து போன எடப்பாடி உடனடியாக உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகனைத் தொடர்புகொண்டு பேசியிருக்கிறார்.

‘கமல் ஊர் ஊராகப் போய் கல்லூரி மாணவர்களிடம் பேசிவருவது உங்களுக்குத் தெரியுமா? எல்லாக் கல்லூரிகளிலும் நம்மைதான் விமர்சனம் செய்து பேசுகிறார். கல்லூரிகள் எப்படி ஒரு அரசியல் கட்சியின் கூட்டத்துக்கு அனுமதி கொடுக்கிறாங்க. இதெல்லாம் உங்க கவனத்துக்கு வந்துச்சா இல்லையா? ‘ என்று கேட்டாராம்.

அதற்கு அன்பழகனோ, ‘ எனக்கு தெரியாதுண்ணா... நான் விசாரிக்கிறேன். சில கல்லூரிகள் ஆடிட்டோரியத்தை வாடகைக்கு கொடுக்கிறாங்க. அப்படி எதுவும் கொடுத்தாங்களான்னு கேட்கிறேன். இனி யாரும் கமல் கட்சி நிகழ்ச்சிகளுக்கு காலேஜ் கொடுக்க கூடாதுன்னு சொல்லிடுறேன்..’ என்று சொன்னாராம்.

அத்துடன் உயர் கல்வித் துறை இயக்குனர் மூலமாக இன்று தமிழகம் முழுக்க உள்ள தனியார் கல்லூரிகளுக்குச் சில உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. ‘இனி எந்த அரசியல் கட்சி நிகழ்சிகளையும் கல்லூரி வளாகத்துக்குள் நடத்த அனுமதிக்க கூடாது. அண்மைக் காலமாக கமல் கட்சியின் நிகழ்ச்சிகள் பல தனியார் கல்லூரி ஆடிட்டோரியத்தில் நடக்கின்றன. இனி வாடகைக்கே விடுவதாக இருந்தாலும், அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிகளுக்கு வாடகைக்குக் கொடுக்க வேண்டாம். கல்லூரி மாணவர்களை ஆடியன்ஸாக அங்கே அனுப்பவும் கூடாது. முன்கூட்டியே எதுவும் பதிவு செய்திருந்தாலும் அதை உடனடியாக கேன்சல் பண்ணிடுங்க...’ என்று வாய்மொழி உத்தரவு போயிருக்கிறதாம்.

அடுத்த மாதத்தில் கமல், நான்கு கல்லூரி நிகழ்ச்சிகளில் பங்கேற்கத் திட்டமிட்டப்பட்டிருந்ததாம். இப்போது அவை அத்தனையும் கேன்சல் செய்யப்பட்டிருக்கின்றன. ‘அந்த நேரத்துல எங்களுக்கு எக்ஸாம் இருக்கு. இன்னொரு நாள் பிறகு சொல்றோம்..’ எனக் கல்லூரிகள் தரப்பில் இருந்து கமல் கட்சி நிர்வாகிகளுக்குச் சொல்லப்பட்டதாம். எடப்பாடியின் அதிரடி கமலுக்குத் தெரியுமா என்பது தெரியவில்லை!” என்று முடிந்தது அந்த மெசேஜ்.

அதை காப்பி செய்து ஷேர் செய்த ஃபேஸ்புக், “தெரியாமலா இருக்கும்?” என கமெண்ட் போட்டுவிட்டு சைன் அவுட் ஆனது.

சனி, 13 அக் 2018

அடுத்ததுchevronRight icon