மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 7 ஜூலை 2020

துர்கா பூஜைக்கு அரசு பணம் செலவழிக்கலாம்!

துர்கா பூஜைக்கு அரசு பணம் செலவழிக்கலாம்!

மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்க அரசு துர்கா பூஜைக்கு நன்கொடை அறிவித்தது தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கில், மாநில அரசுக்குத் தடை விதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் மேற்கு வங்க மாநிலத்தில் துர்கா பூஜை வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. பந்தல் அமைத்து, சிலை பிரதிஷ்டை செய்து, இந்த ஆண்டு துர்கா பூஜைகளை செய்யும் 28,000 குழுக்களுக்குத் தலா 10,000 ரூபாய் வீதம் 28 கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும் என்று கடந்த செப்டம்பர் 10ஆம்தேதியன்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானார்ஜி அறிவித்தார்.

இந்த அறிவிப்பு மதசார்பின்மைக்கு எதிராகவும், வகுப்புவாத உணர்வுகளைத் தூண்டுவதற்கு வழிவகுக்கும் விதமாகவும் அமைந்துள்ளதாகக் கூறி, உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கொன்று தொடரப்பட்டது. அந்த மனுவில் துர்கா பூஜை அமைப்பாளர்களுக்குப் பணம் கொடுப்பது அல்லது சலுகைகளை வழங்குவதன் மூலம் பொது நோக்கத்திற்கு எந்தவொரு பலனும் கிடையாது என்றும், இந்திய அரசியலமைப்பின் 282ஆவது பிரிவு விதிகளை மாநில அரசு மீறுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் மதன் பி லோகூர் மற்றும் தீபக் குப்தா அமர்வு முன்பு இன்று (அக்டோபர்12) விசாரணைக்கு வந்தது. அப்போது, பூஜை குழுக்களுக்கு நிதி அறிவித்துள்ள மேற்கு வங்கஅரசின் முடிவுக்குத் தடைவிதிக்க முடியாது என்று நீதிபதிகள் கூறினர். அதே நேரத்தில், இந்த மனு தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு மேற்குவங்க அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மாநில அரசு நன்கொடை அளித்தது தொடர்பாக கொல்கத்தா உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. மேற்கு வங்க மாநிலஅரசின் முடிவில் தலையிட முடியாது என்று, இந்த வழக்கில் நேற்று முன்தினம் (அக்டோபர் 10) உயர் நீதிமன்றம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி, 12 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon