மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 4 ஜூலை 2020

ஸ்டாலினுக்கு எதிரான உத்தரவுக்குத் தடை!

ஸ்டாலினுக்கு எதிரான உத்தரவுக்குத் தடை!

புதிய தலைமை செயலக கட்டிடம் விவகாரத்தில் குற்றவியல் விசாரணைக்குப் பரிந்துரைத்த தனி நீதிபதி உத்தரவுக்கு உயர் நீதிமன்றத்தின் 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு தடை விதித்துள்ளது.

2006 - 2011ல் திமுக ஆட்சிக் காலத்தில் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமை செயலகம் கட்டியதில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்பட்ட புகார்கள் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ரகுபதி தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்த ஆணையத்தை நிறுத்திவைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து ரகுபதி விசாரணை ஆணையர் பதவியை ராஜினாமா செய்தார். இந்த வழக்கு கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது, புதிய தலைமை செயலக கட்டிடமுறைகேடு தொடர்பான புகார், விசாரணை ஆணையத்திடமிருந்து லஞ்ச ஒழிப்பு துறை விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளதாகத் தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தது

இதையடுத்து வழக்கு தொடர்பான ஆவணங்களைப் பெற்று, அவற்றைப் பரிசீலித்து முகாந்திரம் இருந்தால் லஞ்ச ஒழிப்புத் துறை குற்றவியல் விசாரணை நடத்தத் தனி நீதிபதி எஸ்.எம் .சுப்ரமணியம் உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து திமுக தலைவர் ஸ்டாலின் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவில், தனி நீதிபதி உத்தரவை ரத்து, செய்யவும், தடை விதிக்கவும் கோரப்பட்டது.

இந்த மனு நீதிபதிகள் ஹுலுவாடி ஜி.ரமேஷ் மற்றும் கல்யாண சுந்தரம் அடங்கிய அமர்வில் இன்று (அக்டோபர் 12) விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், “உயர் நீதிமன்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவின்படி, ஆவணங்கள் லஞ்ச ஒழிப்பு துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, ஆரம்பகட்ட விசாரணை பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விசாரணையில் குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருந்தால் மேல் நடவடிக்கை எடுக்கப்படும். இல்லாவிட்டால் வழக்கு கைவிடப்படும். தற்போது விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருக்கிறது” என விளக்கமளித்தார்.

திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், “ஆரம்ப கட்ட விசாரணை என்பது முதல்கட்டம். அடுத்த 10 நாட்களில் வழக்குப் பதியப்படலாம். அதனால் தனி நீதிபதி உத்தரவுக்குத் தடை விதிக்க வேண்டும்” என வாதிட்டார். இதை ஏற்ற நீதிபதிகள், புதிய தலைமை செயலக கட்டிட விவகாரம் தொடர்பாக தனி நீதிபதி உத்தரவுக்குத் தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும், மனுவுக்கு 22ஆம் தேதிக்குள் பதிலளிக்கத் தமிழக அரசுக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனால், தலைமை செயலக கட்டிட விவகாரம் தொடர்பான லஞ்ச ஒழிப்பு துறை விசாரணையைத் தொடர முடியாது என்பது தெளிவாகிறது.

வெள்ளி, 12 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon