மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 26 பிப் 2021

தமிழகச் சிலைகள்: அறக்கட்டளைக்கு உத்தரவு!

தமிழகச் சிலைகள்: அறக்கட்டளைக்கு உத்தரவு!

மின்னம்பலம்

தமிழகத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட பழங்காலச் சிலைகளை ஒப்படைக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில், குஜராத்தில் உள்ள சாராபாய் அறக்கட்டளை இரண்டு வாரங்களில் பதில் அளிக்க வேண்டுமென்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நெடுங்காலமாக, குஜராத்தில் சாராபாய் அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது. இந்த அறக்கட்டளையின் சார்பாக நடத்தப்பட்டுவரும் அருங்காட்சியகம் ஒன்றில் தமிழகத்துக்குச் சொந்தமான 35 சிலைகள் உள்ளதாகவும், அவை அனைத்தும் சட்டவிரோதமாக அங்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன எனவும், வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் குற்றம்சாட்டினார். இது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

சிலைகள் அனைத்தும் முறையாக வாங்கப்பட்டதற்கான ஆவணங்கள் இல்லை என்றும், அவை அனைத்தும் வழிபாடு செய்யக்கூடியவை என்றும், அவற்றை மீண்டும் தமிழகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், தனது மனுவில் கூறியிருந்தார். ராஜராஜசோழன் மற்றும் லோகமாதேவி சிலைகள் ஏற்கெனவே அங்கிருந்து மீட்கப்பட்டு வந்ததையும் சுட்டிக் காட்டியிருந்தார்.

சிலைகள் மீட்புக் குழுவினருடன் சென்றபோது, சாராபாய் அறக்கட்டளையின் அருங்காட்சியகத்தில் 30க்கும் மேற்பட்ட சிலைகள் உள்ளதை உறுதி செய்ததாகவும், அதனை உடனடியாக ஒப்படைக்க வேண்டும் எனவும், யானை ராஜேந்திரன் தனது மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி மகாதேவன் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று (அக்டோபர் 11) விசாரணைக்கு வந்தது. அப்போது, இதுகுறித்து சாராபாய் பவுண்டேஷன் இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டுமென்று உத்தரவிட்டார் நீதிபதி மகாதேவன்.

வெள்ளி, 12 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon