மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 18 ஜன 2021

மதுரை டூ நத்தம்: அதிகாரிகளுக்கு நோட்டீஸ்!

மதுரை டூ நத்தம்: அதிகாரிகளுக்கு நோட்டீஸ்!

மதுரை - நத்தம் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகளுக்காக மரங்களை வெட்ட இடைக்காலத் தடை கோரிய வழக்கில், தேசிய நெடுஞ்சாலைத் துறைச் செயலர், தேசிய நெடுஞ்சாலைத் துறைத் திட்ட இயக்குநர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை.

மதுரை - நத்தம் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப்பணிகளை ஒட்டி, அப்பகுதியிலுள்ள 900 மரங்கள் வெட்டப்படும் என்று அறிவிப்பு வெளியானது. இதற்கு, அப்பகுதியிலுள்ள சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். சாலை விரிவாக்கப் பணிகளுக்காக மரங்களை வெட்ட இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று கோரி, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது. “அதிகளவில் போக்குவரத்து இல்லாத சாலை. ஆனால், நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த மரங்களை வெட்டுவதால் அப்பகுதியில் சூழலியல் பாதிப்புகள் ஏற்படும்” என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனுவானது, இன்று (அக்டோபர் 12) விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தேசிய நெடுஞ்சாலைத் துறைச் செயலர், திட்ட இயக்குநர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். இந்த வழக்கு விசாரணையை, விடுமுறை கால நீதிமன்ற நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றி தள்ளி வைத்தனர்.

வெள்ளி, 12 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon