மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 24 செப் 2020

சரிவிலிருந்து மீண்ட வெஸ்ட் இண்டீஸ்!

சரிவிலிருந்து மீண்ட வெஸ்ட் இண்டீஸ்!

இந்தியாவுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 295 ரன்களை சேர்த்துள்ளது.

ஹைதராபாத்தில் நடந்து வரும் இந்திய-மேற்கு இந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு சிறப்பான ஸ்கோரை எட்டியுள்ளது. மதிய உணவு இடைவேளைக்கு முன்பு 86 ரன்களை மட்டுமே எடுத்து 3 விக்கெட்டுகளைப் பறிகொடுத்திருந்த நிலையில் ஆட்டத்தின் போக்கையே மாற்றியமைத்தார் ரோஸ்டன் சேஸ். உணவு இடைவேளைக்குப் பிறகு மீண்டும் பேட்டிங்கைத் தொடங்கிய ஹெட்மயெர் (12) மற்றும் சுனில் அம்ப்ரிஸ் (18) ஆகியோர் அடுத்தடுத்து சிறிது நேரத்திலேயே குல்தீப் யாதவ் பந்தில் ஆட்டமிழந்தனர்.

இதனால் 38.5 ஓவர்களில் 113 ரன்களை எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்து மேற்கு இந்தியத் தீவுகள் அணி தடுமாறியது. அப்போதுதான் 6ஆவது விக்கெட்டுக்கு ரோஸ்டன் சேஸுடன் ஜோடி சேர்ந்தார் அந்நாட்டு விக்கெட் கீப்பர் டவ்ரிச். மாலை தேநீர் இடைவேளைக்கு சற்று முன்பாக டவ்ரிச்சும் 30 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தார். இதையடுத்து அந்த அணியின் கேப்டன் ஹோல்டர் களமிறங்கினார். இருவரும் நிதானமாக விளையாடி சீராக ரன் சேர்த்து வந்தனர். 6 விக்கெட்டுகளை எளிமையாகக் கைப்பற்றிய இந்தியப் பந்து வீச்சாளர்கள் இந்த ஜோடியைப் பிரிக்க முடியாமல் தடுமாறினர்.

தேநீர் இடைவேளைக்குப் பிறகு மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் ரன் வேகமாக அதிகரித்து 250ஐ எட்டியது. இருவரும் அரை சதத்தைக் கடந்தனர். கேப்டன் ஹோல்டர் 52 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 7ஆவது விக்கெட்டுக்கு 104 ரன்களை சேர்த்து அந்த அணியை சரிவிலிருந்து மீட்டது. அதற்குப் பிறகு 8ஆவது விக்கெட்டுக்கு பிஷு ரோஸ்டன் சேஸுடன் ஜோடி சேர்ந்தார். ரோஸ்டன் சேஸ் தொடர்ந்து நிதானமாக ஆடி சதத்தை நோக்கிப் பயணித்தார். இறுதியாக முதல்நாள் ஆட்டநேர முடிவில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 295 ரன்கள் என்ற நல்ல ஸ்கோரை எட்டியது. ரோஸ்டன் சேஸ் 98 ரன்களுடனும், பிஷு 2 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இதற்கு முன்பு 2016ஆம் ஆண்டு ஜமைக்காவில் நடந்த டெஸ்ட் போட்டியில் ரோஸ்டன் சேஸ் இந்தியாவுக்கு எதிராக 137 ரன்களைக் குவித்துள்ளார்.

இந்திய அணியைப் பொறுத்தவரையில் உமேஷ் யாதவ் 23 ஓவர்களை வீசி 83 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 26 ஓவர்களை வீசி 74 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர். அஸ்வின் 24.2 ஓவர்களை வீசி 49 ரன்களை விட்டுக்கொடுத்து 1 விக்கெட்டைக் கைப்பற்றியுள்ளார். 20 ஓவர்களை வீசி 69 ரன்களை விட்டுக்கொடுத்த ரவீந்தர ஜடேஜா விக்கெட் எதையும் கைப்பற்றவில்லை.

வெள்ளி, 12 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon