மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 4 டிச 2020

கிராமப்புற மாணவர்களுக்குப் பேரிழப்பு!

கிராமப்புற மாணவர்களுக்குப் பேரிழப்பு!

சென்னை: சங்கர் ஐஏஎஸ் அகாடமி நிறுவனர் சங்கரின் மரணம் ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்குப் பேரிழப்பு என்று அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

சென்னை அண்ணாநகரில் இயங்கி வரும் சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் நிறுவனர் சங்கர் நேற்றிரவு தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார். மனைவியும் குழந்தைகளும் வெளியே சென்றிருந்த நேரத்தில் அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். குடும்பத் தகராறு காரணமாக அவர் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்று கூறப்படும் நிலையில் அவரது. மரணம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

“ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளாக உருவாக நினைக்கும் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வரப்பிரசாதமாக இருந்த சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் நிறுவனர் சங்கர் திடீரென்று மறைந்து விட்டார் என்ற செய்தி அதிர்ச்சியளிக்கிறது. அவரது மறைவிற்கு திமுக சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து, அவரது குடும்பத்தினருக்கும், அவரை நம்பியிருந்த எண்ணற்ற இளைஞர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

“நாட்டின் நிர்வாக கட்டமைப்புக்கு தேவையான ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஐஏஎஸ், ஐபிஎஸ் என பல அரசு அதிகாரிகளை உருவாக்கி, தமிழகத்தின் தலைநகரம் சென்னையில் வெற்றிகரமாக ஐஏஎஸ் அகாடமிகளை நடத்த முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியவரது மறைவு, இளைஞர்களுக்கும், கிராமங்களில் இருந்து அகில இந்திய தேர்வுகளை எழுத விரும்பிய ஏழை எளிய மாணவர்களுக்கும் பேரிழப்பு” என்று ஸ்டாலின் வருத்தம் தெரிவித்துள்ளார்.

“இந்திய அரசு குடிமைப்பணியில் அமர 900 சாதனையாளர்களை உருவாக்கிய சங்கர் ஐஏஎஸ் நிறுவனரின் அகால மரணம் பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. தென்னாட்டு ஏழை, எளிய, நடுத்தர வர்க்கத்தின் ஐஏஎஸ் கனவுகளை நனவுகளாக்கிய சாதனையாளரின் இறுதியான விண்ணுலகப்பயணம் நம்மை வருத்துகிறது. குடும்பத்திற்கு பாஜக இரங்கல்" என தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

“சமூக நீதியில் அக்கறை கொண்ட சங்கர், அதற்காக வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் பல்வேறு தளங்களில் குரல் கொடுத்துள்ளார். அவரது மறைவு போட்டித் தேர்வுக்கு தயாராகும் இளைஞர்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். சங்கரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் மாணவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

வெள்ளி, 12 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon