மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 14 ஆக 2020

சிறப்புப் பார்வை: விசாரணை ஆணையமும் விசாரணையின் முடிவும்!

சிறப்புப் பார்வை: விசாரணை ஆணையமும் விசாரணையின் முடிவும்!

ரஞ்சிதா ரவி

தலித் சமூகத்தைச் சேர்ந்த இளவரசனின் மரணத்தை விசாரித்த விசாரணைக் கமிஷனுக்காக அரசு 2 கோடிக்கும் மேல் (ரூ. 2,17,29,388) செலவு செய்திருக்கிறது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் இதைத் தெரிந்துகொண்டதாகச் சொல்கிறார் மனித உரிமைப் போராளியான ‘எவிடன்ஸ்’ கதிர். ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகப் போராட எவிடென்ஸ் என்னும் அமைப்பை நடத்திவரும் இவர் இந்த விசாரணைக் கமிஷன் குறித்த பல முக்கியமான தகவல்களை நம்மோடு பகிர்ந்துகொண்டார்.

நடந்தது என்ன?

விசாரணைக் கமிஷனைப் பற்றிப் பார்க்கும் முன் இளவரசன் விஷயத்தில் நடந்தது என்ன என்று சுருக்கமாகப் பார்த்துவிடலாம். தருமபுரி மாவட்டம் நத்தம் காலனியைச் சேர்ந்த தலித் இளைஞர் இளவரசனும், செல்லன்கொட்டாய் கிராமத்தில் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த திவ்யாவும் காதலித்து வந்தனர். 2012ஆம் ஆண்டு அக்டோபர் 10ஆம் தேதியன்று, பெற்றோரின் எதிர்ப்பை மீறி இவர்கள் திருமணம் செய்துகொண்டனர்.

அந்த ஆண்டு நவம்பர் 7ஆம் தேதியன்று, இருதரப்பிலும் நடந்த பேச்சு வார்த்தையில் திவ்யா தனது பெற்றோருடன் செல்ல மறுத்தார். இதனால் மனவேதனை அடைந்த திவ்யாவின் தந்தை தூக்கிலிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இதைத் தொடர்ந்து, இரு சமூகத்தினரிடையே மோதல் ஏற்பட்டது. தலித்துகள் அதிகம் வசிக்கும் நத்தம் காலனி, அண்ணாநகர், கொண்டாம்பட்டி ஆகிய பகுதிகளில் வீடுகளும் உடைமைகளும் சூறையாடப்பட்டுக் கொளுத்தப்பட்டன.

இதைத் தொடர்ந்து, இளவரசனுடன் இனி சேர்ந்து வாழ விருப்பமில்லை என்று திவ்யா பேட்டியளித்தார். 2013ஆம் ஆண்டு ஜூலை 4ஆம் தேதியன்று, தர்மபுரி அரசு கலைக் கல்லூரிக்குப் பின்னால் உள்ள இருப்புப்பாதையில் இளவரசன் சடலமாகக் கிடந்தார்.

விசாரணைக் கமிட்டி அமைப்பு

இளவரசனின் இறப்புக்குப் பின்பு, பல்வேறு வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டன. அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக இளவரசனின் தந்தை தெரிவித்தார். இதனையடுத்து, ஓய்வுபெற்ற நீதிபதி சிங்காரவேலு தலைமையில் தனி நபர் ஆணையத்தை 2013ஆம் ஆண்டு அமைத்தார் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா. இரண்டு மாதங்களுக்குள் விசாரணையை முடித்து அறிக்கை சமர்ப்பிக்க அரசாணையும் வெளியிடப்பட்டது.

நீதிபதி சிங்காரவேலு தலைமையில் நீதி விசாரணை நடைபெறக் கூடாது என்றும், இவர் தலித் சமூகத்திற்கு எதிரானவர் என்றும் இளவரசனின் பெற்றோர் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர். அரசு இந்த எதிர்ப்பைப் பொருட்படுத்தவில்லை.

விசாரணைக்கான காலக்கெடு, 61 மாதங்கள் 24 நாட்கள் வரை நீட்டிக்கப்பட்டது. ஐந்து ஆண்டுகளாகப் பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடத்தப்பட்டது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிடம் கடந்த ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதி விசாரணைக் கமிஷனின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த விசாரணைக் கமிஷனுக்குச் செலவிடப்பட்டுள்ள தொகையின் விவரம் குறித்துத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரிந்துகொண்டோம் எனக் கூறினார் எவிடன்ஸ் கதிர். இது தொடர்பாக அவர் மின்னம்பலத்திடம் தெரிவித்த தகவல்கள் வருமாறு:

ஆணையத்தின் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.ஆர்.சிங்காரவேலுவும் அவருக்குச் செயலரும், ஒரு பிரிவு அலுவலரும், ஒரு உதவியாளரும், இரண்டு ஓட்டுநர்களும், மூன்று அலுவலக உதவியாளர்களும் நியமிக்கப்பட்டனர்.

ஆணையம் இதுவரை செலவு செய்த தொகை ரூ.2,17,29,388. சம்பளத்திற்கு ரூ.1,98,23,817, இதர செலவினங்களுக்கு ரூ.19,05,571.

இறந்துபோன இளவரசனின் குடும்பத்தினருக்கு ஒரு ரூபாய் நிவாரணம்கூடக் கிடைக்கவில்லை. இளவரசனுடைய மரணத்தை விசாரித்த ஆணையத்தின் செலவு இரண்டு கோடிக்கு மேல்.

45 விசாரணைக் கமிஷன்கள்

1991ஆம் ஆண்டு முதல் இதுவரை தமிழகத்தில் 45 விசாரணைக் கமிஷன்கள் போடப்பட்டுள்ளன. இதில், ஐந்து விசாரணைக் கமிஷன்கள் மட்டுமே பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஓரளவு சாதகமாகத் தன் அறிக்கையைக் கொடுத்துள்ளன. இதர கமிஷன்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதிராகவே அறிக்கைகளை வெளியிட்டுள்ளன.

கமிஷன்கள் முன்வைத்த கருத்துகள்

இந்த இடத்தில் இரண்டு உதாரணங்களை மட்டும் சுட்டிக்காட்டுகிறேன். 1999ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23ஆம் தேதி ஊதிய உயர்வு கோரி தாமிரபரணி ஆற்றங்கரை அருகே தலித் சமூகத்தைச் சேர்ந்த மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் நடத்திய பேரணியின்போது காவல் துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 17 பேர் உயிரிழந்தனர். நீதிபதி மோகன் தலைமையில் விசாரணைக் கமிஷனை அமைத்தார் அப்போதைய முதல்வர் மு.கருணாநிதி.

பரமக்குடி கலவரத்தில் வன்முறையைத் தடுக்க துப்பாக்கிச் சூடு அவசியமாக இருந்ததாக அப்போதைய முதல்வர் தெரிவித்ததையே விசாரணைக் கமிஷனும் தெரிவித்தது. கலவரத்தில் சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் யாரும் தியாகிகள் அல்ல, அவர்கள் திசைமாறிப் போனவர்கள் என்று கூறினார் மோகன்.

2011ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி பரமக்குடியில் காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தலித் சமூகத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர். அப்போது முதலமைச்சராக ஜெயலலிதா இருந்தார். இது குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி சம்பத் தலைமையில் விசாரணைக் கமிஷனை அவர் அமைத்தார். இதன் அறிக்கை 2013ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 30ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.

வன்முறையைக் கட்டுப்படுத்தக் காவல் துறையினர் எடுத்த அனைத்து நடவடிக்கைகளும் பயனளிக்கவில்லை என்றும், நடவடிக்கைகள் பயனில்லாமல் போனதால் துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிடப்பட்டது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. வன்முறையைத் தடுக்க துப்பாக்கிச் சூடு அவசியமாக இருந்தது என விசாரணை ஆணையம் கருதுகிறது என்றும், துப்பாக்கிச் சூடு நடத்தாமல் இருந்திருந்தால் தென்மாவட்டங்களுக்கு வன்முறை பரவியிருக்கும் என்றும் கூறப்பட்டிருந்தது.

1995ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதி தென்மாவட்டங்களில் நடத்தப்பட்ட கொடியங்குளம் கலவரத்தில் தலித்துகள் கொல்லப்பட்டனர். அப்போது இதற்காக நியமிக்கப்பட்ட கோமதிநாயகம் விசாரணைக் கமிஷன், பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கிய நிவாரணம்கூடத் தேவையற்றது என்று கூறியது.

வீரப்பன் தேடுதல் வேட்டையின்போது தமிழக - கர்நாடகா அதிரப்படை போலீசார் நிகழ்த்தியதாகக் கூறப்படும் வன்முறை அத்துமீறல்கள் குறித்து விசாரணை செய்வதற்கு நீதிபதி சதாசிவம் தலைமையில் விசாரணைக் கமிஷன் போடப்பட்டது. இந்த கமிஷன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீட்டைக் கொடுத்துள்ளது. ஆனால் பாலியல் கொடுமை செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட போலீசாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை.

உரிய நீதியும் கிடைக்காமல் மக்களின் வரிப்பணத்தில் அதிக செலவினையும் செய்துகொண்டிருக்கிற விசாரணைக் கமிஷன்கள் தேவையா என்று சிவில் சமூகம் கேள்வி எழுப்ப வேண்டும்.

பெற்றோரின் மனநிலை

"என் மகன் கொல்லப்பட்டதற்கு இதுவரை எந்த நீதியும் கிடைக்கவில்லை. எங்கள் வீடுகளை எரித்த வழக்குகூட இன்னும் விசாரணைக்கு வரவில்லை. குற்றவாளிகள் காலரை தூக்கிக்கொண்டு சிரித்துக் கொண்டிருக்கிறார்கள்”என்று வேதனைப்பட்டார் இளவரசனின் தந்தை. இளவரசனின் அம்மாவோ, “எங்களுக்கு அரசாங்கம் ஒரு நயாபைசாகூடக் கொடுக்கவில்லை. அந்தக் காசும் எங்களுக்குத் தேவையில்லை. என் மகன் கொல்லப்பட்டான் என்கிற உண்மையைச் சொன்னால் போதும்” என்கிறார்.

இதுபோன்ற விசாரணைக் கமிஷனின் முடிவுகள் தமிழகத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உரிய நீதியைப் பெற்றுக் கொடுத்ததில்லை. ஆனால், ஆணையங்களுக்கான செலவு கோடிக்கணக்கில் ஆகிறது. நீதிமன்றத்தில் வழக்கு நடத்தினாலும் ஓரளவு நீதி கிடைப்பதற்கு வாய்ப்பாக இருக்கும். இதுபோன்ற கமிஷன்கள் நியமிக்கப்படுவதினால் நீதிமன்றத்திலும் வழக்கினை நடத்த முடியாத நிலை ஏற்படுகிறது. இதிலுள்ள அரசியலை நாம் புரிந்துகொள்ள வேண்டும். சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணைக் கமிஷனின் நடவடிக்கை குறித்து அதிருப்தி தெரிவித்ததையும் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

இவ்வாறு எவிடன்ஸ் கதிர் குறிப்பிட்டார்.

வெள்ளி, 12 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon