மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 19 செப் 2020

நீதிபதிகளுக்கு ‘நோ லீவ்’!

நீதிபதிகளுக்கு ‘நோ லீவ்’!

நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டியிருப்பதால், நீதிபதிகள் வேலை நாட்களில் விடுமுறை எடுக்க வேண்டாம் என்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்கள், விசாரணை நீதிமன்றங்களில் சுமாா் 3 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. உச்ச நீதிமன்றத்தில் 55,000 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதேபோன்று, நாடு முழுவதும் உள்ள 24 உயர் நீதிமன்றங்களில் 32.04 லட்சம் வழக்குகளும், கீழமை நீதிமன்றங்களில் 2.77 கோடி வழக்குகளும் தேங்கிக் கிடக்கின்றன.

சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக, நாடு முழுவதும் உள்ள கீழமை நீதிமன்றங்களில் சுமார் 22 லட்சத்து 90 ஆயிரத்து 364 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகத் தேசிய நீதித் துறை தகவல் சேமிப்பு அமைப்பானது சமீபத்தில் புள்ளிவிவரமொன்றை வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் ஒரு புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

வழக்குகள் தேக்கம் அடைவதைக் குறைக்கும் நோக்கில், உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகள், கொலீஜியம் உறுப்பினர்களுடன் இன்று (அக்டோபர் 12) அவர் காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க, ‘நோ லீவ் பார்முலா’வை ரஞ்சன் கோகாய் தெரிவித்தார். இதன்படி, அவசர காலங்களைத் தவிர நீதிமன்ற வேலை நாட்களில் நீதிபதிகள் விடுப்பு எடுப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

வேலை நாட்களில் கருத்தரங்கங்கள், அரசு விழாக்கள் போன்ற நிகழ்ச்சிகளில் நீதிபதிகள் கலந்துகொள்ள வேண்டாம் என்றும் ரஞ்சன் கோகாய் வலியுறுத்தியுள்ளார்.

வெள்ளி, 12 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon