மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 5 ஜூலை 2020

துப்பாக்கிச் சூடு: சிபிஐ விசாரிக்க எதிர்ப்பு!

துப்பாக்கிச் சூடு: சிபிஐ விசாரிக்க எதிர்ப்பு!

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்து, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

கடந்த மே 22ஆம் தேதியன்று, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்காக நடந்த போராட்டத்தில் போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக சிப்காட் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் சிபிஐக்கு மாற்றப்பட்டன. சென்னை பெசன்ட் நகர் ராஜாஜி பவனில் இயங்கிவரும் சிபிஐ புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள், ஸ்டெர்லைட் வன்முறைச் சம்பவம் தொடர்பாகப் புதிதாக 12 பிரிவுகளின் கீழ் கடந்த திங்கள்கிழமையன்று (அக்டோபர் 8) வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக, தமிழக போலீசார் ஏற்கனவே விசாரணை செய்த நபர்களிடமும், வழக்கில் தொடர்பு இருப்பதாகச் சந்தேகிக்கப்படும் நபர்களிடமும், விரைவில் முதல்கட்ட விசாரணையை நடத்தத் திட்டமிட்டுள்ளனர் சிபிஐ அதிகாரிகள். இதற்காக சிபிஐ சிறப்புப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள், தூத்துக்குடியில் விசாரணையைத் தொடங்குவார்கள் என்று கூறப்படுகிறது.

ஸ்டெர்லைட் போராட்ட துப்பாக்கிச் சூடு வழக்கை சிபிஐ விசாரிக்குமாறு, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. இதை எதிர்த்து, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இன்று (அக்டோபர் 12) தாக்கல் செய்யப்பட்ட அம்மனுவில், இந்த வழக்கை விசாரிப்பதற்கு தமிழகக் காவல் துறை முழுத் தகுதி பெற்ற அமைப்பு என்றும், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெள்ளி, 12 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon