மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 14 ஆக 2020

ஆளுநர் மாளிகை விளக்கம்!

ஆளுநர் மாளிகை விளக்கம்!

ஆளுநர் மாளிகை அளித்த புகாரின் பேரில் கடந்த அக்டோபர் 9ஆம் தேதி நக்கீரன் ஆசிரியர் கோபால் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். அன்று மாலையே அவர் எழும்பூர் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார்.

இந்த விவகாரம் தொடர்பாக பெரும்பாலான கட்சித் தலைவர்கள் ஆளுநரை கண்டித்து கருத்து தெரிவித்தனர். இந்நிலையில் இன்று (அக்டோபர் 12) இந்த விவகாரம் குறித்து ஆளுநர் மாளிகையின் இணை இயக்குனர் இன்று நீண்டதொரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.

அதன் விவரம்:

“அருப்புக்கோட்டை உதவிப் பேராசிரியர் திருமதி நிர்மலாதேவி விவகாரத்தில் ஆளுநரையும் ஆளுநர் மாளிகையையும் தொடர்புபடுத்தி பரப்பப்படும் உண்மைக்கு மாறான தகவல்களை கடந்த ஆறு மாதமாக ஆளுநர் மாளிகை மிகுந்த பொறுமையுடன் சகித்துக் கொண்டது. ஆனால் திருமதி.நிர்மலாதேவியோடு ஆளுநரையும் ஆளுநர் மாளிகை அதிகாரிகளையும் தொடர்புபடுத்தி துளிகூட உண்மையில்லாத தகவல்கள் தொடர்ந்து பரப்பப்பட்டு வருகின்றன. சட்டத்தின் படி இந்த விவகாரத்தில் விசாரணை நடந்து குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுவிட்ட நிலையில், கடந்த செப்டம்பர் மாத இறுதியில் வெளியான நக்கீரன் இதழில் மஞ்சள் பத்திரிகை தனத்தோடு வெளியிடப்பட்ட தகவல்கள் மிகுந்த அதிர்ச்சி அளிப்பவையாக இருந்தன.

உண்மை என்னவெனில் கடந்த ஒரு வருடத்தில் திருமதி நிர்மலாதேவி ஆளுநர் மாளிகைக்குள் நுழைந்ததே இல்லை. அவருக்கும் ஆளுநருக்கும் ஆளுநர் மாளிகை அதிகாரிகளுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. மதுரையில் உள்ள காமராஜர் பல்கலைக் கழக விருந்தினர் மாளிகைக்கு ஆளுநர் சென்றதே இல்லை. ஆனால் தொடர் அவதூறுகளுக்குப் பிறகுதான் ஆளுநர் மாளிகை சார்பில் இதற்கு சட்டப்படி எதிர்ப்பு தெரிவித்து புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.

ஜனநாயகத்தில் ஆரோக்கியமான கருத்துப் பரிமாற்றங்கள் நிகழ்வதை யாரும் தடுக்க முடியாது. அதேநேரம் அரசியல் அமைப்பைக் காக்கும் அதிகாரபூர்வ ஆளுநர் மீது நேரடியாகவோ மறைமுகமாகவோ அச்சுறுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை ஆளுநர் மாளிகை சகித்துக்கொள்ளாது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆளுநர் மாளிகையின் முழு அறிக்கை விவரம் மாலை 7 மணிப் பதிப்பில்....

வெள்ளி, 12 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon