மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 12 நவ 2019

ஆஜர்: சிதம்பரம் குடும்பத்தினருக்கு கால அவகாசம் நீட்டிப்பு!

ஆஜர்: சிதம்பரம் குடும்பத்தினருக்கு கால அவகாசம் நீட்டிப்பு!

வெளிநாட்டில் சொத்துக்கள் வாங்கியதில் கணக்கு காண்பிக்கவில்லை என வருமான வரித் துறை தாக்கல் செய்த வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம், மகன் கார்த்திக் சிதம்பரம், மருமகள் ஸ்ரீநிதி ஆகியோர் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராக அளிக்கப்பட்ட விலக்கை வரும் நவம்பர் 2 ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம், மருமகள் ஸ்ரீநிதி ஆகியோர் இங்கிலாந்து நாட்டில் 5.37 கோடி ரூபாய்க்கும், அமெரிக்காவில் 3.28 கோடி ரூபாய்க்கும் சொத்து வாங்கியுள்ளனர். இந்த விவரங்களை அவர்கள் தங்களது வருமான வரி கணக்கில் காட்டவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து கருப்புப் பணம் தடுப்புச் சட்டத்தின் கீழ் இவர்கள் மீது வருமான வரித் துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு தொடர்பாக சென்னை எழும்பூர் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகின்றது.

இந்த வழக்கில் மூன்று பேரையும் ஆஜராக, எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் எழும்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணைக்குத் தடை விதிக்க வேண்டும். வழக்கின் விசாரணைக்கு நேரில் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும் என நளினி சிதம்பரம் உள்ளிட்ட மூன்று பேரின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் நிலுவையில் உள்ளது. கடந்த முறை விசாரணைக்கு வந்த போது எழும்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணைக்குத் தடை விதிக்க மறுத்த நீதிபதிகள், விசாரணைக்கு நேரில் ஆஜராக விலக்கு அளிப்பதாக உத்தரவிட்டனர்.

இதனையடுத்து இந்த வழக்கு இன்று (அக்டோபர் 12) நீதிபதி மணிக்குமார் தலைமையிலான அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை நவம்பர் 2 ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள் அதுவரை நேரில் ஆஜராக அளிக்கப்பட்ட விலக்கை நீட்டிப்பதாக உத்தரவிட்டு விசாரணையை நவம்பர் 2ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

வெள்ளி, 12 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon